தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டது நியாயமல்ல என்கிற கருத்து சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டது நியாயமல்ல என்கிற கருத்து சரியா? 

வாழ்நாள் சோகம்
மூன்று கல்லூரி மாணவிகளும் எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிகள். அரசியல் தலைவருக்கு தண்டனை என்று நீதிமன்றம் அறிவித்ததால் அம்மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்டிருப்பது மிகவும் கொடூரமானது. உயிர் இழந்த மாணவிகளின் பெற்றோர் மனம் என்ன பாடு பட்டிருக்கும்? இந்த சோகம் அவர்களின் வாழ்நாள் முழுதும் இருந்து கொண்டே இருக்குமே. இதற்குக் காரணமான மூன்று கைதிகளை விடுதலை செய்தது முற்றிலும் தவறானசெயல். மனசாட்சியுள்ள யாரும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
செ. மாணிக்கவாசகம், சென்னை.

அறநெறி
பொது வாழ்வில் மிகக் கொடிய குற்றங்கள் புரிவோரைக் கொலைத் தண்டனை வாயிலாகத் தண்டித்துக் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவது அரசாள்வோருக்கு விதிக்கப்பட்ட அறநெறி. குற்றங்களை ஆராய்ந்து, விருப்பு வெறுப்பின்றி, நடுவு நிலைமையுடன் நடந்து கொள்வதே அரச நீதி. தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கு, உணர்ச்சி வயப்பட்டு அவர்கள் பேருந்து எரித்ததாகக் கூறுவது நொண்டி சாக்கேயன்றி வேறில்லை. தனது கட்சிக்காரர் நலன் சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்பதே உண்மை.
அ. சிவராம சேது, திருமுதுகுன்றம்.

ஆர்வக் கோளாறு
இந்த மூவரும் தாங்கள் செய்வது கொடூரச் செயல் என அறியாமல் ஆர்வக் கோளாறினால் பேருந்தினை எரித்து மூன்று அப்பாவிப் பெண்களின் அகால மரணத்திற்குக் காரணமாகி விட்டனர். தற்போது தங்கள் தவறினை உணர்ந்து இனி நன்னெறியில் நடக்கப்போவதாகக் கூறியிருப்பதால், இத்தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்பட்டது சரியே.
என்.பி.எஸ். மணியன், 
மணவாளநகர்.

மனிதாபிமானமல்ல
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் உயிரோடு கொளுத்தப்பட்டு மரணமடைந்த மாணவிகளின் பெற்றோரையும், அவர்களின் கண்ணீரையும் துயரத்தையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாதது வேதனையளிக்கிறது. 
தங்கள் கட்சித் தலைவரின் சிறைத்தண்டனைத் தீர்ப்புக்காக, பொதுச் சொத்தையும், அதில் பயணித்த மாணவிகளையும் கொளுத்தியவர்களை விடுவிப்பதென்பது நியாயமற்ற, மனிதாபிமானமற்ற செயலாகும்.
உ. இராசமாணிக்கம், கடலூர்.

மன்னிக்க முடியாது
தங்கள் கட்சித் தலைவருக்காகப் போராட்டம் நடத்துபவர்கள் பேருந்தை எரிக்கும் நோக்கத்துடன் வந்திருந்தால் பேருந்தில் இருக்கும் பயணிகளை வெளியேற்றிவிட்டுப் பேருந்தை எரித்திருந்தால்கூட அதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், கொடூர மனத்துடன், பேருந்து முழுதும் பெட்ரோல் ஊற்றிப் பயணிகளை உயிரோடு எரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டவர்களை எப்படி மன்னிக்க முடியும்?
சோம. பொன்னுசாமி, சென்னை.

தண்டனை போதும்
தங்கள் தலைவியின் மீது கொண்டு இருந்த அன்பின் காரணமாக பேருந்து எரிப்பு சம்பவம் நடந்துள்ளது. தமிழக அரசு, பேருந்து எரிப்பு நிகழ்வு திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. உணர்ச்சி வேகத்தில் நடந்து விட்ட ஒன்று என்று கூறியதை, ஆளுநர் ஏற்றுக் கொண்டதை போல நாமும் ஏற்றுக் கொள்வதே சரி. மன்னிப்பு என்பது மகத்தானது. அவர்களை மன்னித்து விடுதலை செய்தது சரியே. இவர்கள் இத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்ததே போதுமான தண்டனை.
என். சண்முகம், 
திருவண்ணாமலை.

கல்நெஞ்சம்
மூன்று கைதிகளின் விடுதலை நியாயமல்ல என்கிற கருத்துச் சரியே. அறம் தவறிவிட்டதால் தன்னுயிரை விட்ட பாண்டிய மன்னனும், தேர்ச்சக்கரத்தில் சிக்கிக் கன்று மாயக் காரணமாயிருந்த தன் மகனையே கொல்லத்துணிந்த சோழ மன்னனும் வாழ்ந்த மண்ணில் இப்படி நடக்கலாமா? மூன்று இளம் பெண்களாகிய அரும்புகளைத் தீயில் கருகக் கொடுத்துத் தவித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களின் மனநிலையை அறியாதவர்கள் கல்நெஞ்சக்காரர்கள்.
ச. சுப்புரெத்தினம், 

மயிலாடுதுறை.
வன்மம் அல்ல
தங்கள் தலைமை மீதான பற்றின் காரணமாக உணர்ச்சிக் கொந்தளிப்பில் செயல்பட்டதன் விளைவே பேருந்து எரிப்பு. மாணவிகளின் மீதான வெறுப்போ, வன்மமோ அல்ல. செய்த குற்றத்துக்கு அனுபவித்த தண்டனை போதாது என்றாலும், விடுதலை செய்யப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களின் நிலையை கருத்தில் கொண்டு விடுதலையை ஏற்றுக் கொள்வதுதான் மனிதாபிமான நிலைப்படாக இருக்கும். இதை அரசியல் கண்ணோட்டத்துடன் விமர்சிப்பது தவறு.
எஸ். ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

நம்பிக்கை தகர்ந்தது
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் சாதாரணக் குற்றம் செய்தவர்களைப் போல அவர்களும் விடுதலை செய்யப்பட்டது அவர்கள் ஆளுங்கட்சிக்காரர்கள் என்பதால்தான். எரிக்கப்பட்ட மூன்று பெண்களும் ஆளுங்கட்சியில் பொறுப்பில் உள்ளவரின் உறவினராக இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? இன்றைய அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கட்சிக்காரர்களைக் காப்பாற்றி இருக்கிறது. செய்த தவறுக்கு நிச்சயம் தக்க தண்டனை உண்டு என்ற நம்பிக்கை தகர்த்து விட்டது.
அ. கருப்பையா, 
பொன்னமராவதி.

ஏற்புடையதல்ல
ஏதுமறியாத மூன்று பெண்களின் உயிரிழப்பு மிகவும் கொடூரமானது. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்கு, பெண்களை உயிருடன் எரித்துக் கொன்ற வர்களை விடுவிப்பது, மக்களை மகிழ்வூட்டுமா? இதனை எம்.ஜி.ஆரின் ஆன்மா ஏற்குமா? இக்கொடுஞ்செயல் புரிந்தவர்களுக்கு இம்மாணவிகள் யாரென்று தெரியாது என்ற வாதம் ஏற்புடையதல்ல. கைதிகள் விடுவிக்கப்பட்டது சரியானதல்ல.
மு.அ.ஆ. செல்வராசு, வல்லம்.

தவறில்லை
பேருந்து எரிப்பு சம்பவத்தில் எந்தத் திட்டமிடுதலோ, முன்விரோதமோ சம்பந்தப்பட்டவர்களுக்கு இல்லையென்று நீதிமன்றமே உறுதிப்படுத்திவிட்டது. உணர்ச்சி வேகத்தில் செய்த குற்றத்திற்காக, கைதிகளாக பல ஆண்டுகள் ஏற்கெனவே சிறையில் இருந்து விட்டனர். பல்வேறு ஆய்வுகளுக்கும், சட்ட விதிகளுக்கும் உள்பட்டே அவர்கள் விடுவிக்கப்படுவதால் அதை ஏற்பதில் தவறில்லை.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

அவசியம் இல்லை
குற்றம் கடுமையானது. தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது. தண்டனையைக் குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்கள் கட்சி சார்பானவர்கள். கட்சிக்காக செய்யப்பட்ட குற்றம். அதனால்தான் விடுவிக்கப்பட்டுள்ளனர். இப்படி விடுதலை செய்தால் குற்றம் செய்வதற்கு எல்லாருக்கும் துணிவு வந்து விடும். கட்சி நம்மைக் காப்பாற்றும் என்ற நிலை உருவாகிவிடும். இதை விடக் கொடிய செயல்களைச் செய்யவும் தயங்க மாட்டார்கள். எனவே, இது தவறு.
த. யாபேத்தாசன், பேய்க்குளம்.

கடும் தண்டனை
குற்றச்செயலுக்கான தண்டனை கடுமையாக இருந்தால்தான் குற்றங்கள் குறையும். மேலும், அரசியல்வாதிகள் செய்யும் குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை தரப்பட்ட வேண்டும். தீயில் கருகிய மூன்று மாணவிகளின் பெற்றோர்களின் கண்ணீருக்கு யார் பதில் சொல்வது? அரசியலில் கைது, தண்டனை இதெல்லாம் சாதாரணமாக நிகழக் கூடியது. இதற்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு பொது மக்களை பலியாக்குவது மன்னிக்கக் கூடியதல்ல.
மா. தங்கமாரியப்பன், 

கோவில்பட்டி.
தீய நோக்கம்தங்கள் தலைவருக்கு நீதிமன்றம் தண்டனை அறிவித்தது என்பதற்காகப் பேருந்தை எரிக்க வந்தவர்கள், பேருந்தில் மாணவிகள் உள்ளனர் என்பது தெரியாமலா இருந்தனர்? பேருந்தை அதில் பயணம் செய்பவர்களோடு எரிக்க வேண்டும் என்பதே அவர்களுடைய தீய நோக்கம். கல்லூரி மாணவிகளை எரித்தது மாபெரும் பாவச் செயல். அத்தகைய கொடூரச் செயல் செய்தவர்களுக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததே நியாயமற்றது.
ச. கிருஷ்ணசாமி, மதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com