காட்டு விலங்கான யானையை கோயில்களில் வளர்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கருத்து சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

காட்டு விலங்கான யானையை கோயில்களில் வளர்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கருத்து சரியா? 

அறிவுடைமையல்ல
காட்டு விலங்கான யானையைக் கோயில்களில் வளர்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கருத்து சரியே. எந்த விலங்குமே மற்ற விலங்குகளும் சேர்ந்து வாழ்வதைத்தான் விரும்பும். கோயில்களில் வளர்க்கப்படுவதென்பது அதற்கு ஒரு தண்டனை போன்றதுதான். பல கோயில்களில் கோசாலை அமைத்து பசுவைப் பாதுகாக்கிறார்கள். அதை வரவேற்கலாம். கோயில்களில் யானை தேவையில்லை. சில கோயில்களில், திருவிழா காலங்களில் வெடி சத்தம் கேட்டு, யானை மிரண்டு அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி தெரிந்தும் நாம் யானையை வளர்த்துக் கொண்டிருப்பது அறிவுடைமையல்ல.
பொன். கருணாநிதி, கோட்டூர்.

சுதந்திரம் இல்லை
இக்கருத்து சரியே. மனிதர்களால் எப்படி காட்டில் வாழ முடியாதோ அப்படியே காட்டு விலங்குகளால் நாட்டில் வாழ முடியாது. நாம் எவ்வளவுதான் சிறப்பாக அவற்றைப் பராமரித்தாலும், அவற்றால் காடுகளில் இருப்பதைப்போல் சுதந்திரமாகக் கோயில்களில் இருக்க முடியாது. மேலும், யானையைப் பராமரிப்பதற்கு கோயில் நிர்வாகம் அதிக தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. யானை வளர்ப்பு இல்லையென்றால் அந்தத் தொகையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல வசதிகளை செய்துத்தர முடியும். யானையும் நிம்மதியாக மற்ற விலங்குகளுடன் காட்டில் மகிழ்ச்சியாக உலவும்.
உஷா முத்துராமன், மதுரை.

கலாசாரம்
இக்கருத்து தவறு. கோயில்களில் யானை வளர்ப்பதென்பது காலங்காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம்தான். இது நமது மரபு மற்றும் கலாசாரம் சம்பந்தப்பட்டது. முழுமுதற் கடவுளான விநாயகரின் வடிவமாகவே நம் மக்கள் யானையைக் காண்கின்றனர். எனவே யானையை வளர்க்கக் கூடாதென்பது விநாயகரை வணங்கக் கூடாது என்பது போன்றது. இது சரியல்ல. யானை காட்டு விலங்கானாலும் மனிதர்களோடு பாசமாகப் பழகக் கூடியது. எனவே யானையை கோயில்களில் வளர்ப்பதற்கு தடை விதிக்கத் தேவையில்லை.
உ. இராசமாணிக்கம், கடலூர்.

காட்சிப் பொருள்
தடை விதிக்க வேண்டும் என்பது சரியே. யானைகள், காட்டில் ஒரு நாளைக்கு 272 கிலோ இயற்கை உணவு உண்டு, 350 லிட்டர் நீர் அருந்தி கூட்டங்கூட்டமாக சுதந்திரமாக சுற்றித் திரியும். அவற்றைக் கோயில்களில் வளர்ப்பதால் அவை இயல்புத் தன்மையை இழந்துவிடுகிறது. உணவுப் பழக்கம் மாறுபடுகிறது. போதிய அளவு உணவும் நீரும் கிடைப்பதில்லை. கம்பீரமான யானைகள் வெறும் காட்சிப் பொருளாகி விடுகின்றன. இதனாலேயே சில யானைகளுக்கு நோய் ஏற்படுகின்றது. சில யானைகளுக்கு மதம் பிடித்து விடுகிறது. எனவே காட்டு விலங்கான யானை காட்டில் இருப்பதே நல்லது.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

கண்கொள்ளாக் காட்சி
இக்கருத்து முற்றிலும் தவறானது. மன்னர்கள் ஆட்சியிலும் மக்கள் ஆட்சியிலும் யானைகள் கோயில்களில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இது தொன்றுதொட்டு வரும் மரபாகும். யானைகளால் பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுவதில்லை. திருவிழா காலங்களில் யானைகள் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சி. மேலும் யானையை வெறும் காட்டு விலங்காகப் பார்ப்பது தவறு. அது மனிதர்களோடு மிகவும் நெருங்கிப் பழகக் கூடியது. பக்தர்கள் இம்முடிவை ஏற்க மாட்டார்கள். யானை விலங்குதான். ஆனால், வழிபாட்டிற்குரிய விலங்கு. எனவே தடை கூடாது.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

விபரீத நிகழ்வுகள்
யானையைக் கோயில்களில் வளர்க்கக் கூடாது என்பது சரியே. இக்காலத்தில் கோயில்களுக்கு அதிக பக்தர்கள் வருவதால் இடப்பற்றாக்குறை உள்ளது. மேலும், தெருக்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் உள்ளது. இதுபோன்ற சூழலில் யானையின் இயல்பு கட்டுப்படுத்தப்படுவதால் அதற்கு மதம் பிடிக்கிறது. அதனால் பல விபரீத நிகழ்வுகள் ஏற்படுகின்றன. ஆண்டுக்கு ஒரு முறை அரசு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை. மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது. யானைகளுக்கு பதிலாகத்தான் யானை வாகனங்களை கோயிலில் வைத்திருக்கிறார்கள். அதுவே போதுமானது. காலம் மாறும்போது நாமும் மாற வேண்டாமா?
ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

புதிதல்ல
தடை தேவையில்லை. கோயில்களில் யானை வளர்ப்பது ஒன்றும் புதிதல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மன்னர்கள் யானைப்படை வைத்திருந்தனர். அதன்மீது பவனி வந்தே போரில் ஈடுபட்டனர். எனவே யானைகள் பலநூறு ஆண்டுகளாகவே மனிதர்களோடு நெருங்கிப் பழகி வந்துள்ளன. யானைகளை கோயில்களில் வளர்க்கலாம். ஆனால், அவற்றுக்குத் தேவையான உணவை வழங்க வேண்டும். குளியல், ஓய்விடம் போன்ற வசதிகளை நாம் கண்டிப்பாக ஏற்படுத்தித் தரவேண்டும். அவற்றைத் துன்புறுத்தக் கூடாது.
டி.ஆர். இராசேந்திரன், 
திருநாகேஸ்வரம்.

ஒரே வழி
தடை விதிக்கத்தான் வேண்டும். எந்த விலங்கும் அதன் வாழ்விடத்தில் வளர்வதுதான் நல்லது. யானைகளின் உணவான தழைகள், பழங்கள் போன்றவை காடுகளில்தான் உள்ளன. அங்குதான் அவை சுதந்திரமாக திரியும். மற்ற விலங்குகளோடு மகிழ்ச்சியாகவும் இருக்கும். கோயில்களில் வளர்க்கப்படும் யானைக்கு அந்த சுதந்திரம் கிடைப்பதில்லை. அதனால், சில நேரங்களில் கோயில் யானைக்கு மதம் பிடிப்பதால் அது பாகனுக்கு அடங்க மறுக்கிறது. சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதும் உண்டு. எனவே இந்த பிரச்னைகளெல்லாம் ஏற்படாமலிருக்க ஒரே வழி யானை வளர்க்காமல் இருப்பதுதான். 
கி. பாஷ்யம், சலுப்பை.

பிரிக்க வேண்டாம்
சில ஆண்டுகளுக்கு முன்புவரை காட்டு மரங்களை இடம் மாற்றுவதற்கு யானைகளே பயன்பட்டன. இப்போதும் சில இடங்களில் இது நடைமுறையில் உள்ளது. கோயில்களில் யானை கட்டாயம் இருக்க வேண்டும். திருவிழாக் காலங்களில் யானையைப் பார்ப்பதற்கென்றே பக்கத்து ஊர்களிலிருந்து வருவார்கள். அந்த யானைகளுக்கு ராஜ உபசாரம் நடக்கும். கோயில் யானைகள் பட்டினி இருப்பதில்லை. கேரளத்தில் குருவாயூர் போன்ற சில ஊர் கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாகத் தந்த பல யானைகள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றன. எனவே கோயில்களையும் யானைகளையும் பிரிக்க வேண்டாம்.
இரா. கல்யாணசுந்தரம், மதுரை.

கால மாற்றம்
இக்கருத்து சரியே. முற்காலங்களில் கோயில் யானைகளுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் தற்போது குறைந்துவிட்டது. வருமானம் குறைவான கோயில்களில் யானைப்பாகனுக்கே ஊதியம் தருவதற்கு இயலாத நிலை உள்ளது. அப்படியிருக்கையில் யானைக்குத் தேவையான உணவுக்கு எங்கே போவது? காலம் மாறுகிறது. காட்டு விலங்குகளை அவற்றில் வாழ்விடத்தில் சுதந்திரமாக நடமாட விட்டுவிடுவதே நல்லது.மனிதர்களால் அவற்றின் சுதந்திரம் பாதிக்கப்படக் கூடாது.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

துன்பம் போதும்
கோயில்களில் யானையை வளர்க்கக் கூடாது. எல்லாக் காலங்களிலும் மனிதர்களால் அதிகம் துன்புறுத்தப்படும் விலங்கினம் யானைதான். மன்னராட்சி காலத்தில் போரில் முதலில் நிறுத்தப்படுவது யானைப்படைதான். கடினமான வேலைகள் செய்ய நமக்குப் பயன்படுவதும் யானைகள்தான். அதன் கம்பீரத்தை அழித்து மனிதன் பிச்சை எடுக்க அதைப் பயன்படுத்துகிறான். இதுவரை இப்படியெல்லாம் யானைகளுக்கு மனிதர்கள் விளைவித்த துன்பம் போதும். இனியாவது யானைகள் பிற விலங்குகளுடன் காட்டில் சுதந்திரமாகத் திரியட்டும்.
கி. சந்தானம், மதுரை.

முடியாது; கூடாது
யானை ஒரு சுதந்திரமான காட்டு விலங்கு. அதை சங்கிலியால் கட்டிப் போடுகிறோம். மதச் சின்னங்களை அதன் முகத்தில் வரைகிறோம். மதத்திற்குரிய பழக்கங்களை பழக்குகிறோம். இவையெல்லாம் அதற்கு அந்நியமான செயல்களே. காட்டில் வாழும் யானைகளுக்குக் கிடைக்கக்கூடிய சுற்றுப்புற சூழல், சுதந்திர உணர்வு போன்றவை நிச்சயமாக கோயில் யானைகளுக்குக் கிடைக்காது. தனியே வளரும் கோயில் யானை ஒருநாள் தன் மிருக குணத்தைக் காட்டியபின் மனிதன் எச்சரிக்கையடைகிறான். எந்தவொரு மனிதனையும் காட்டு விலங்குகளால் வளர்க்க முடியாது. அதுபோல் எந்த காட்டு விலங்கையும் மனிதரால் வளர்க்க முடியாது; கூடாது.
இ. ராஜு நரசிம்மன், சென்னை.

தனி மரியாதை
யானைகள் காலங்காலமாக கோயில்களில் வளர்க்கப்பட்டு வருகின்றன. கோயில் யானைகளுக்கு மக்களிடம் தனி மரியாதை உண்டு. அவற்றுக்கு பாகர்கள் பயிற்சியளிக்கிறார்கள். நோய் வந்தால் மருத்துவர்கள் சிகிச்சையளிக்கிறார்கள். ஆண்டிற்கு ஒருமுறை புத்துணர்வு முகாமுக்கு உற்சாகமாகச் சென்று வருகின்றன. திருவிழாவின்போது யானைகள் அதிக மகிழ்ச்சியடைகின்றன. பாகர்கள் யானையை வைத்துப் பிச்சை எடுப்பதைத் தடுத்தால் போதும். யானைகளுக்குக் கோயில்களில் தடை தேவையில்லை.
ச. கிருஷ்ணசாமி, மதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com