உயர்கல்வியில் சேர பிளஸ் 2 பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டுமே போதும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

உயர்கல்வியில் சேர பிளஸ் 2 பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டுமே போதும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது சரியா? 

ஏற்கத்தக்கதல்ல
உயர்கல்விக்கு 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டுமே போதும் என்றும் 11-ஆம் வகுப்பு மதிப்பெண்களைச் சேர்க்கத் தேவையில்லை என்றும் அரசு அறிவித்துள்ளது ஏற்கத்தக்கதல்ல. இதனால், பள்ளிகள் 11-ஆம் வகுப்புப் பாடங்களை நடத்தாமல் 12-ஆம் வகுப்புப் பாடங்களை நடத்தத் தொடங்கும் ஆபத்து ஏற்படும். இதன் மூலம் தனியார் பள்ளிகள் மீண்டும் கொழுத்த பணம் சம்பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும். அதுமட்டுமல்ல, கல்வியில் அடிக்கடி மாற்றம் செய்வது கல்விச் சீரழிவிற்கும் தரமின்மைக்கும் மீண்டும் வழிவகுத்து விடும்.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

தவறான கருத்து
11-ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுப்போர் 12-ஆம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் பெறுவது எளிது. இரண்டு அரசுத் தேர்வுகள் மன அழுத்தத்தைத் தரும் என்பது தவறான கருத்தாகும். உயர்கல்வியில் இளநிலையில் செமஸ்டரில் தோல்வி அடைந்தாலும் ஆண்டு நிறைவில் அனைத்திலும் தேர்ச்சி பெற்றால்தான் முதுநிலை படிப்பில் தொடர முடியும். அதுபோலவே பதினொன்று, பனிரெண்டாம் வகுப்புகளில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே உயர்கல்வி பெறுவதற்கு தகுதி நிர்ணயிக்கப்பட வேண்டும்.
அ. கருப்பையா, பொன்னமராவதி.

நல்லதல்ல
உயர்கல்வியில் சேர பிளஸ் 2 பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டுமே போதும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது முற்றிலும் சரிதான். இது பாராட்டுக்குரிய செயல் ஆகும். மாணவர்களாகட்டும், மாணவியராகட்டும் முழு மனதுடன் மகிழ்ச்சியுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவார்கள். எதிர்காலம் தங்களுக்கு சிறப்பாக இருக்க வேண்டுமே என்று முயன்று படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். கல்வித்துறை அடிக்கடி கொள்கைகளில் மாற்றம் செய்து அவர்களை ஏமாற்றுவது நல்லதல்ல.
ச. கண்ணபிரான், திருநெல்வேலி.

உத்தரவிட வேண்டும்
இந்த அறிவிப்பு தவறு. இப்போதே பள்ளிகளில் மாணவர்களுக்கு பிளஸ் 1 பாடங்களை தவிர்த்து, பிளஸ் 2 பாடங்களை நடத்தத் தொடங்கி விடுகிறார்கள். இப்படி செய்வதால் மாணவர்களின் தேர்வு சதவீதம் அதிகமாகி பள்ளிக்கு நல்ல பெயர் கிடைக்குமென நினைக்கிறார்கள். பிளல் 2 பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டுமே போதுமென்ற அறிவிப்பு, இதுபோன்ற பள்ளிகளுக்கு சாதகமாகி விடும். பிளஸ் 1 தேர்வு மதிப்பெண்களையும் பார்த்த பிறகுதான் உயர் கல்வியில் சேர்ப்போம் என்று உத்தரவு போட வேண்டும்.
பிரகதா நவநீதன், மதுரை.

ஒருங்கிணைந்த வகுப்புகள்
உயர்கல்வியில் சேர பிளஸ் 2 மதிப்பெண்களே போதுமென்பது சரியல்ல. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 இரண்டும் தனித் தனி வகுப்பல்ல, இரண்டும் ஒருங்கிணைந்ததே. பிளஸ் 1 வகுப்புப் பாடங்கள் கல்லூரி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள் அனைத்திற்கும் தேவை. 11 -ஆம் வகுப்பு மதிப்பெண் உயர்கல்விக்குத் தேவையில்லையென்றால் அடிப்படையான 11 ஆம் வகுப்புப் பாடங்களை மாணவர்கள் சரியாகப் படிக்க மாட்டார்கள். அவர்கள் 12-ஆம் வகுப்பிலும் உயர்கல்வியிலும் சிரமப்படுவர்.
கி. பாஷ்யம், சலுப்பை.

சிறப்பான மதிப்பீடு
இந்த அறிவிப்பு சரியே. 11-ஆம் வகுப்புக்கு 10-ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் போதுமானவை என்றாகும்போது கல்லூரிப் படிப்புக்கு 12 -ஆம் வகுப்பில் பெற்றுள்ள மதிப்பெண்களே போதும் என்ற மதிப்பீடுதான் சிறப்பு. அரிதிலும் அரிதான ஒரு சிலரே 12-ஆம் வகுப்பின் தேர்வில் மதிப்பெண் பெறுவது இல்லை. இவர்களது தகுதியாக 11- ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களைக் கணிக்கலாம். மற்றும் உயர் கல்விக்கு 12 -ஆம் வகுப்பு மதிப்பெண்களே போதும் என்பதே சரி.
ச. கந்தசாமி, இராசாப்பட்டு.
வரப்பிரசாதம்
10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 என்று மூன்று ஆண்டுகள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு வரப்பிரசாதம். பிளஸ் 1 
தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறும் மாணவர்களால் முழுமையான ஆர்வத்தோடு பிளஸ் 2 தேர்வை எதிர்கொள்ள முடியாது. அது பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும். எனவே, இந்த முடிவை வரவேற்போம்.
பொன். கருணாநிதி, கோட்டூர்.

எதிர்காலம்
உயர்கல்வியில் சேர பிளஸ் 2 மதிப்பெண்கள் மட்டுமே போதுமானது. அப்பொழுதுதான் மாணவர்கள் சிரத்தையுடன் படிப்பார்கள். பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் கடினமாகப் படிப்பது இந்த வகுப்பில்தான். எதிர்காலத்தை இந்த மதிப்பெண்கள்தான் நிர்ணயிக்கும். எனவே, மாணவர்களை பிளஸ் 2 நல்ல முறையில் படிப்பதற்கு அனுமதிக்கலாம். எல்லா வகுப்புகளிலும் கஷ்டப்படுத்தினால் படிப்பின் மீதுள்ள நாட்டம் குறைந்து விடும்.
த. யாபேத்தாசன், பேய்க்குளம்.

மனநலனும் உடல்நலனும்
தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத் தேர்வு என்றால் மாணாக்கர் மனநலன் வெகுவாகப் பாதிக்கப்படும். மதிப்பெண் முறை என்பதால் நாம் அனைவருமே அதனை நோக்கியே மாணாக்கர்களைத் தள்ளுவோம். அவர்களின் மனநலனும் உடல் நலனும் பாதிக்கப்படும். மேலும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படை என்பதால் ஏதாவது ஒன்றில் குறைந்தாலும் மொத்தப் படிப்பும், பாதிப்பிற்கு உள்ளாகும். 12 -ஆம் வகுப்பு மட்டும் போதும் என்பதால் அதீத கவலை குறைந்து படிப்பினில் கவனம் செலுத்த உதவும்.
எல். தாணப்பன், தச்சநல்லூர்.

முக்கியமானதுதான்
உயர்கல்விக்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் மட்டும் போதுமானது என்று கூறினால் எல்லா தனியார் பள்ளிகளும் பிளஸ் 2 பாடத்திலேயே கவனம் செலுத்தும். அங்கு பிளஸ் 1 பாடங்களைச் சரியாக நடத்த மாட்டார்கள். மேலும், நீட் முதலிய நுழைவுத் தேர்வுகளில் பிளஸ் 1 பாடத்தில் கேள்விகள் வந்தால் சரியாகப் படிக்காத மாணவர்கள் தேர்வடைவது கஷ்டம். மேலும், நேர்காணல்களை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் திணறுவர். எனவே, பிளஸ் 1 மதிப்பெண்ணும் உயர்கல்வி சேர்க்கையின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
மா. தங்கமாரியப்பன், 
கோவில்பட்டி.

மன அழுத்தம்
மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பிளள் 1, பிளஸ் 2 என தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு அரசு பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். உயர்கல்விக்கு பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களே போதும் என்று வந்தால், மற்ற இரு பொதுத் தேர்வுகளையும் மன நிம்மதியாக எழுதுவர். எனவே, பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்களே போதுமானது.
ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

பின்னடைவு
உயர்கல்வியில் சேர பிளஸ் 2 மதிப்பெண்கள் மட்டும் போதுமானதல்ல. பிளஸ் 1 மதிப்பெண்களை நிராகரித்தால் பல பள்ளிகளில் பிளஸ் 1 பாடங்களை நடத்தாமல் நேரடியாக பிளஸ் 2 பாடங்களில் மட்டும் கவனம் செலுத்துவர். இது உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்குப் பெரிய அளவில் பின்னடைவை உண்டாக்கும் என்பது திண்ணம்.
டி.ஆர். பாஸ்கரன், திண்டிவனம்.

கல்வி வளர்ச்சி பாதிப்பு
பிளஸ் 1 தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லையானால் மாணவர்களுக்கு பிளஸ் 1 படிப்பில் அக்கறையில்லா நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், நீட் மற்றும் மற்ற பொதுத் தேர்வு எழுதுவதில் மிகப்பெரும் பின்னடைவு ஏற்படும். இது ஒட்டு மொத்த தமிழக மாணவர்களின் கல்வி நலனைப் பாதிப்பதுடன், தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் பாதிப்பு ஏற்படும்.
டி. சேகரன், மதுரை.

மீண்டும் பழையமுறை
அரசின் இந்த முடிவு தவறு. புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கமே சில பள்ளிகளில் பிளஸ் 1 பாடத்திட்டத்தை நடத்தாமல் பிளஸ் 2 பாடத்திட்டத்தை நேரடியாக நடத்தியதால்தான். இப்பொழுது மீண்டும் பிளஸ் 2 பாடத்திட்டம் என்று அறிவித்ததன் மூலம், பல பள்ளிகளில் பழைய முறையை பின்பற்றத் தொடங்கிவிடுவர். இதனால் பாதிக்கப்படுவது மாணவர்களின் எதிர்காலம்தான். இம்மாதிரியான முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பாக கல்வியாளர்களைக் கலந்து அவர்களின் ஆலோசனைப் பெற வேண்டும்.
ப. சுவாமிநாதன், சென்னை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com