கலைஞர் இல்லாத திமுக... வெற்றிடத்தை இட்டு நிரப்புவாரா ஸ்டாலின்?!

சங்கர மடம் இல்லை என்றவர் தனக்குப் பின் மாநில அரசியலுக்கு வாரிசாக ஸ்டாலினையே மக்கள் மனங்களில் வரிக்கத் தலைப்பட்டார்.
கலைஞர் இல்லாத திமுக... வெற்றிடத்தை இட்டு நிரப்புவாரா ஸ்டாலின்?!

கலைஞர் இல்லாத திமுக... வெற்றிடத்தை இட்டு நிரப்புவாரா ஸ்டாலின்?!

‘தி.மு.க. ஒன்றும் சங்கர மடம் அல்ல" இது வாரிசு அரசியல் குறித்த கருணாநிதியின் பிரசித்தி பெற்ற கூற்று... இதை அவரது அரசியல் வாரிசுகள் இன்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா? என்றால், அது தான் இல்லை. கலைஞருக்குப் பிறகு கட்சியின் ஏகபோக அதிகாரம் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என ஸ்டாலின் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதை சற்றேறக்குறைய கலைஞரும் தமது அந்திமக் காலங்களில் ஒருவாறாக உறுதிப்படுத்தி விட்டு தான் மறைந்திருக்கிறார். ஆயினும், திமுகவில் கலைஞர் இல்லாத வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா? என்பதை வரவிருக்கும் நாட்கள் தாம் நிரூபிக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கருணாநிதி தீவிர அரசியலில் இல்லை என்ற போதும் கலைஞரின் பெயரற்று தமிழக அரசியல் களத்தில் பொழுதுகள் விடிந்ததில்லை. தாம் செயலூக்கத்துடன் இருந்தவரை தமிழக அரசியலில் தமக்கான முக்கியத்துவத்தை ஒவ்வொரு நொடியிலும் கலைஞர் உறுதிப்படுத்திக் கொள்ளவும், நிரூபிக்கவும்  தவறியதே இல்லை. 

கலைஞரின் தேசிய, மாநில அரசியல் அஜெண்டாவுக்கு அவரது ஆப்த நண்பர் பேராசிரியர் அன்பழகன் முதல், ப்ரிய மருமகன் முரசொலி மாறன், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், ஆற்காடு வீராச்சாமி, முதல் பலரும் பக்கத்துணையாக பல்வேறு சூழல்களில் பங்கமின்றி அங்கம் வகித்திருக்கின்றனர்.

மாநில அரசியலுக்கு தான் மட்டுமே போதும், பக்கத்தில் ஆமாம் சாமி போட ஆருயிர் தோழர் பேராசிரியர் கே.அன்பழகன்

தேசிய அரசியலுக்கு நன்கு கற்றறிந்தவரும் தனது மாறாத ப்ரியத்துக்கு உகந்த மருமகனுமான முரசொலி மாறன்...

எம்ஜிஆர் திமுகவில் இருந்து பிரிந்து சென்ற பிறகு திமுகவின் வலு குறைந்து விட்டதாகக் கருதிய தென் மாவட்டங்களில் கட்சியை வளர்க்க மூத்த மகன் மு.க.அழகிரி.

சேலத்துக்கு வீரபாண்டி ஆறுமுகம்... திருச்சிக்கு கே.என் நேரு, திருச்சி சிவா... விழுப்புரம் பொன்முடி... வேலூருக்கு துரைமுருகன்... தூத்துக்குடிக்கு முரட்டு பக்தர் என். பெரியசாமி, கும்பகோணம் கோ. சி. மணி, சென்னைக்கு ஆற்காடு வீராச்சாமி, பா.ரங்கநாதன், திருவண்ணாமலை பிச்சாண்டி, ஏ.வ.வேலு, வட சென்னை பா. ரங்கநாதன், தஞ்சாவூர் உபயதுல்லா, பழனி மாணிக்கம், ஈரோடு ஐ. பெரியசாமி

என மண்டலவாரியாக, மாவட்ட வாரியாகத்  திறமையான நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அவர்களை சுதந்திரமாக இயங்க விட்டு கலைஞர் நிகழ்த்திய அரசியல் சதுரங்க விளையாட்டு அவரைத்தவிர இனி வேறொருவரால் கனவிலும் எண்ணிப் பார்க்கவியலாத ராஜதந்திர எல்லைகளைக்கொண்டது. அந்த அளவுக்கு நுட்பமான அரசியல் ஞானம் ஸ்டாலினுக்கு இருக்குமாயின் அவரால் ஒருவேளை அவரது தந்தை விட்டுச் சென்ற இடத்தின் அருகாமையைக் கொஞ்சம் நெருங்க முடியலாம். ஆனால், ஸ்டாலினால் முடியுமா? முடிய வேண்டும் என்று அவர் நினைத்தாரானால் ஒரு வேளை முடியலாம் அல்லது முடியாமலும் போகலாம். தமிழக அரசியலைப் பொறுத்தவரை ஸ்டாலின் தற்போது வகித்து வருவது திரிசங்கு நிலை. அதிலிருந்து முன்னேறி அவர் கலைஞர் ஈட்டியதைப் போன்றதான ஸ்திரமான அரசியல் தலைமை ஆக வேண்டுமென்றால் ஸ்டாலின் சுயலாபங்களுக்காகவேனும் பெருந்தன்மையுடன் ஜீரணிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு திமுகவில்.

அதற்கொரு சிறந்த உதாரண சம்பவம்... 

தினகரன் நாளிதழ் கட்சியில் யார் பலசாலி? யாருக்கு மக்களிடையே அதீத செல்வாக்கு என்ற ரீதியில் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தயாநிதி மாறனை முன்னிலைப்படுத்தியதை சகித்துக் கொள்ள இயலாமல் ஸ்டாலின் மற்றும் அழகிரி ஆதரவாளர்கள் கொந்தளித்துப்போய் மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று பேரை எரித்துக் கொன்ற வரலாறு. திமுகவின் உட்குடும்ப சண்டைகளை வெட்ட வெளிச்சமாக்கியது. அப்போது மாறன் காலமாகியிருந்தார். ஒரு காலத்தில் மாற்று அரசியல் தலைவர்களை எதிர்த்து களமாடிக் கொண்டிருந்த கருணாநிதி  தற்போது சொந்தக் குடும்ப உறுப்பினர்களைச் சமாதானப் படுத்த களமாட வேண்டியவரானார். ஒருவழியாக தயாளு அம்மாள், செல்வி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் முயற்சியால் அந்தக் குடும்பச் சண்டை சந்தி சிரித்தாலும் ஒருவழியாக சமாதானத்திலும் முடிந்தது. ஆனால், மாறன் சகோதரர்கள் குறிப்பாக தயாநிதி மாறன் தேசிய அரசியலில் இருந்து படிப்படியாக ஓரங்கட்டப் பட்டார். எப்படியெனில் முதலில் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சராக திராவிடக் கழக அரசியலில் சர்வ மரியாதைகளுடன் முரசொலி மாறனின் மகனாக, கருணாநிதியின் ப்ரியமான பேரனாக தேசிய அரசியலில் முன்னிலைப்படுத்தப்பட்டவர் தினகரன் கருத்துக் கணிப்பு சம்பவத்துக்குப் பிறகு முக்கியத்துவம் குறைக்கப்பட்டு ஜவுளித்துறை அமைச்சரானார்... அவரது அரசியல் ஆட்டங்களுக்கு மொத்தமாக வேட்டு வைக்கும் விதத்தில் ஆப்பசைத்த குரங்கின் கதையாக தொடர்ந்து வந்தன ஏர்செல் மேக்சிஸ் வழக்கு, மற்றும் பிஎஸ் என் எல் இணைப்புகளை தன் சகோதரரின் தொலைக்காட்சிக்காக சுய லாபங்களுக்காக முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கு என இருபெரும் வழக்குகள். இப்படியாக ஸ்டாலினின் வளர்ச்சிக்காக மாறன் சகோதரர்கள் திமுகவில் ஓரம் கட்டப்பட்டார்கள். முடிவு 1996 தேர்தல் காலம் முதல் 2007 வரை திமுகவின் பிரச்சார பீரங்கியாகச் செயல்பட்டு வந்த சன் தொலைக்காட்சி தனது திமுக ஆதரவு நிலையில் சுணக்கம் காட்டத்தொடங்கியது.

கலைஞருக்கு தெரிந்தே இருந்தது என்ன செய்தால் தான் கட்டமைத்த வலிமையான திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிகாரப் போட்டி வராமல் தடுக்கலாம் என்று... ஆனால், அதைச் செயல்படுத்தும் முனைப்பு இன்றில்லை அவருக்கு. சங்கர மடம் இல்லை என்றவர் தனக்குப் பின் மாநில அரசியலுக்கு வாரிசாக ஸ்டாலினையே மக்கள் மனங்களில் வரிக்கத் தலைப்பட்டார். விளைவு, அதிகாரப் போட்டியில் முளைத்தெழுந்து வந்தது கலைஞர் தொலைக்காட்சி.

சரித்திரத்தில் ஒரே ஒரு ராஜ ராஜ சோழன் தான்... மகன் ராஜேந்திர சோழன்... கங்கை கொண்ட சோழபுரம் கட்டி தன் தந்தையைக் காட்டிலும் மகத்தான சாதனை படைக்க எண்ணிய போதும் அதன் பெருமையை மக்கள் ஏற்றுக் கொண்டார்களே தவிர தஞ்சை பெரிய கோயிலுக்கு நிகராக அதை வைத்துக் கொண்டாடும் மனநிலையை வளர்த்துக் கொள்ளவில்லை. அது எப்படியென்றால் அசலுக்கும் நகலுக்கும் இடையிலான வேறுபாட்டைப் போல... கருணாநிதி என்றென்றும் மக்கள் நெஞ்சங்களில் ‘அசல்’ஆகத் தங்கிப் போனார். இனி கருணாநிதியின் சாதனைகளை எதிர்காலத்தில் ஸ்டாலின் முறியடிக்க நினைத்தாலும் அது ‘நகல்’ என்றே பேசப்படலாம். தீவிர கலைஞர் அபிமானிகள் சொல்கிறார்கள்... அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று. 

ஆனால், எதுவானாலும் இப்போது பந்து ஸ்டாலின் பக்கமிருக்கிறது. 

கலைஞரைப் பற்றி அவரை வெறுப்பவர்களிடையே பல விமர்சனங்கள் உண்டு...

அரசியலில் தனக்கான முக்கியத்துவங்களை வலிந்து உருவாக்கிக்க் கொள்வதில் அவரொரு தந்திரசாலி என்று; 

அவரொரு சந்தர்பவாத இந்து வெறுப்பாளர் என்று...

அவரொரு கடவுள் மறுப்பாளர் என்று...

அவர் மடங்களுக்கு எதிரானவர் என்று...

அவரொரு விளம்பரப் ப்ரியர் என்று... (அரசியலாகட்டும், போராட்டங்களாகட்டும், சினிமா பாராட்டு விழாக்களாகட்டும் எங்கும் எதிலும் தனக்கே முதன்மை)

அரசியல் சுய லாபங்களுக்காக தமிழ்.. தமிழ் என்று பேசி தமிழகத் தலைவர்களையும், உலகத் தமிழர்களையும் ஏமாற்றிக் கொண்டிருந்தார் என்று...

தமிழக அரசியல்வாதிகளுக்கு விஞ்ஞான ரீதியாக நுட்பமாக ஊழல் செய்வது எப்படி என்று கற்றுக் கொடுத்த முதல் ஊழல் பெருச்சாளி என்று...

எத்தனை, எத்தனையோ விமர்சனங்கள் அவர் மீது இருந்து வருகின்றன. இந்த விமர்சனங்கள் அனைத்தும் அவர் மீது இன்று, நேற்று சுமத்தப்பட்டவை அல்ல, பராசக்திக்கு வசனம் எழுதிய காலகட்டத்தில் இருந்தே அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் தான் இவை. 

சீரணி அரங்கப்பொதுக்கூட்டத்தில் அண்ணா, கலைஞருக்கு மோதிரம் அணிவித்த கதை பற்றி கண்ணதாசன் வனவாசத்தில் எழுதி இருப்பதை வாசித்தால் கலைஞரின் ராஜதந்திரத்தை பலர் வெறுக்கவும் கூடும். ஆயினும்  அதற்கான அவரது உழைப்பை புறம் தள்ளி விட முடியாது என்பதையும் ஒப்புக் கொண்டாக வேண்டிய நிலையில் தான் இன்று நாமிருக்கிறோம். ஏனெனில், கடந்த 2016 ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை ஒட்டி அதிமுகவில் நிகழ்த்தப் பட்ட அரசியல் மாய்மாலங்களை எல்லாம் நிகழ்கால சாட்சிகளாக நின்று வேடிக்கை பார்த்தவர்கள் நாம். எனவே அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! என்ற ரீதியில் கலைஞர் மீதான இந்தக்குற்றச்சாட்டு வலுவிழப்பதைத் தவிர்க்க இயலாது. அன்று கலைஞருக்கு திமுக வை தனதாக்கிக் கொண்டாக வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆதலால் அவர் அப்படிச் செய்தார். ஆனால், ஸ்டாலினுக்கு இன்று அப்படியான எந்த நிர்பந்தங்களும் இல்லை.

ஆரம்பம் முதலே அவர் திமுக தலைவர் கருணாநிதியின் மகன்.

அண்ணா உருவாக்கிய திமுகவை எப்பாடு பட்டாயினும் இன்று கருணாநிதி இந்த உலகம் தவிர்க்க இயலாத, மறுக்க இயலாத வகையில் தனது ஒற்றை அடையாளமாக்கி விட்டார்.

கட்சியைப் பொறுத்தவரை அன்று கருணாநிதிக்கு இருந்த எந்த தடைகளும், நிர்பந்தங்களும் இன்று ஸ்டாலினுக்கு இல்லை.

ஸ்டாலினின் அரசியல் பாதையில் எமர்ஜென்ஸி காலம் தவிர்த்து முட்கள் குறைவு.

முள்ளில்லா பாதையில் தனக்கான தனி ராஜபாட்டையை ஸ்டாலின் கண்டடைவாரா?

அன்றியும் மீண்டும் குடும்பச் சண்டைகளில் உழன்று மாநில அரசியலில் தனது வீரியத்தை குறைத்துக் கொள்வாரா?

என்ற கேள்விக்கு காலமும், அடுத்து வரவிருக்கும் பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் அவர் தெர்ந்தெடுக்கவிருக்கும் அரசியல் வியூகங்களுமே பதில் சொல்ல வேண்டும்.

கலைஞருக்கு தன்னைச் சுற்றி இருந்தவர்களை அனுசரித்துச் செல்லும் மனப்பான்மை அதிகமிருந்ததாகக் கேள்வி. ஸ்டாலின் அப்படிப் பட்ட மனோபாவம் கொண்டவரா? இட்டு நிரப்புவாரா கலைஞரின் வெற்றிடத்தை?!

காலம் பதில் சொல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com