சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த தினம்: எழுமின்! விழிமின்! உழைமின்! - Dinamani - Tamil Daily News

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த தினம்: எழுமின்! விழிமின்! உழைமின்!

First Published : 09 January 2013 02:55 PM IST


விவேகானந்தரும் அவரது சகோதரத் துறவிகளும் சில காலம் கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதி ஒன்றில் தங்கியிருந்து விட்டு, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் செய்திகளைப் பரப்புவதற்காக பல்வேறு திசைகளில் பிரிந்து சென்றனர்.

சுவாமி பரிவ்ராஜகராக பெரும்பாலும் கால்நடையாகவே கொல்கத்தாவிலிருந்து புறப்பட்டு ஊர் ஊராகச் சென்றார். அந்நாட்களில் அவர் எவரிடமும் பணம் கேட்கவில்லை. உணவு யாசிக்கவுமில்லை.

உணவைப் பற்றி நினைக்கவுமில்லை. அடுத்த வேளைக்காகவும் மறுநாளுக்காகவும் உணவை எடுத்துச் செல்லவுமில்லை. யாராவது எப்போதாவது அவருக்கு உணவு கொடுத்திருக்கலாம். பஸ் டிக்கெட்டோ ரயில் டிக்கெட்டோ, எப்போதாவது வாங்கிக் கொடுத்திருக்கலாம்.

1892ம் ஆண்டு டிசம்பர் 25ம் நாள் சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி சென்றடைந்தார்.

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் கோயிலைச் சுற்றிலும் கடல். கடலின் நடுவே பாறைகள் பல காணப்பட்டன. இருந்தாலும் நம் பாரத நாட்டின் கடைசி முனையாக விளங்குகின்ற பெரிய பாறைக்குச் செல்ல நினைத்தார். பாறையைச் சுற்றிலும் கடல் நீர். அதற்குச் செல்ல வேண்டுமானால், படகில் தான் செல்ல வேண்டும். படகுக்காரனுக்குக் கொடுக்கக் கையில் காசும் இல்லை. படகுக்காரர் எவரும் அவரை பாறைக்குக் கொண்டு செல்ல முன்வரவும் இல்லை. எனவே, சுவாமிஜி அந்தப் பாறைக்கு நீந்தியே சென்றார்.

பாறையை நீந்தியே அடைந்த சுவாமிஜி, அதில் அமர்ந்து டிசம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் தவம் செய்தார்.

நம் நாட்டு மக்களில் சிலர் பல காரணங்களுக்காக தவம் மேற்கொண்டிருக்கிறார்கள். சிலர் கடவுளைக் காண! சிலர் தங்களது ஆன்மிக முன்னேற்றத்துக்காக! சிலர் தங்களது விரோதிகளை ஒழிக்க அல்லது நாசமடையச் செய்ய! சிலர் தங்களின் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள் தீர்வதற்காக! இப்படி பலரும் பல நோக்கங்களுக்காக தவம் மேற்கொண்டிருப்பதை நாம் படித்திருக்கின்றோம்.

சுவாமி விவேகானந்தரோ நம் நாட்டின் தாழ்வு நிலைமைக்கான காரணம் என்ன என்று யோசித்தார். நம் நாட்டை தாழ்வு நிலையிலிருந்து மீட்டெடுப்பது எப்படி என்று எண்ணினார். நம் நாட்டு மக்களை அறியாமையிலிருந்தும் வறுமையிலிருந்தும் மீட்பது எப்படி என்று சிந்தித்தார். இதையே எண்ணி எண்ணி, தவத்தில் ஈடுபட்டார்.

அவர் தவம் செய்ய அமர்ந்திருந்த பாறையை கடல்நீரே நாலாப்புறமும் சூழ்ந்திருந்தது.  குடிக்கத் தண்ணீர் இல்லை. உண்ண உணவு இல்லை. இப்படி தண்ணீர்கூடக் குடிக்காமல் மூன்று நாட்கள் தவம் செய்து, நமது நாட்டின் நிலை தாழ்ந்தமைக்கான மூன்று காரணங்களைக் கண்டறிந்தார்.

மூன்றாம் நாள் மாலையில் "எழுமின்! விழுமின்! இலக்கை அடையும் வரை ஓயாது உழைமின்!" என்று சிம்ம கர்ஜனை செய்தார்.

அவரது தவத்தின் பலனால் விளைந்த மந்திரமே எழுமின்! விழிமின்! உழைமின்! என்று ஆனது.

நாட்டின் இளைஞர்களுக்கு எல்லாம் ஆதர்ஷ புருஷராக விளங்கும் சுவாமி விவேகானந்தர் 1863 ஜனவரி மாதம் 12ம் நாள் கோல்கத்தாவில் பிறந்தார். அவரின் 150வது ஆண்டு பிறந்த தினம் இந்த வருடம், அதாவது 2013ம் ஆண்டில்  கொண்டாடப் படுகிறது. நம் நாட்டின் தேசிய இளைஞர் தினமாகவும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் கொண்டாடப் படுகிறது.

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.