என்ன தவம் செய்தேன்: இராம.வேல்முருகன்

காந்தியார் பிறந்த நாட்டில்
கண்ணியம் செழித்த நாட்டில்
சாந்தியே  தவழும் நாட்டில்
சமத்துவம் உலவும் நாட்டில்
புத்தனும் உதித்த நாட்டில்
பொன்பொருள் மிளிரும் நாட்டில்
சித்தரும் மகிழும் நாட்டில்
சிறுவனாய் நானும் வந்தேன்

எண்ணருங் கலைக ளாளும்
எழில்மிகு இனிய நாட்டில்
புண்ணியம் பொங்கும் நாட்டில்
புகழெலாம் பெற்ற நாட்டில்
விண்மகள் வாழ்த்தும் நாட்டில்
வீரமே விளையும் நாட்டில்
மண்மகள் பூக்கும் நாட்டில்
மனிதனாய் நானும் வந்தேன்

எத்துனை மதங்கள் வந்தும்
எண்ணரும் சாதி வந்தும்
எத்துனை பேதம் வந்தும்
எங்களை அவையென் செய்யும்?
நாடெனும் பேரால் ஒன்றாய்
நாளுமே இணைந்து கொள்வோம்
தேடினும் கிடைக்கா நாட்டில்
பிறந்திட தவமென் செய்தேன்
இமயமா மலையென் தலையாம்
இருகரம் குசராத் அஸ்ஸாம்
குமரிமா முனைதான் கால்கள்
குவலயம் போற்றிடும் தாள்கள்
விந்தியம் நெஞ்சம் ஆகும்
விழுதென மக்கள் உண்டு
மத்திய தேசம் மார்பு
மராட்டிய தேசம் தோள்கள்

கண்களாய் பஞ்சாப் உண்டு
கருவிழி  சண்டி  கர்தான்
உண்மையை பேசும் வாயாய்
உருகுமே புதுதில் லீதான்
கண்மையாய் அழகு கொட்டும்
கவின்மிகு உத்தர் தேசம்
வெண்மையாய் உள்ளங் கொண்ட
வடக்குவாழ் மாநிலங்கள்

அழகினில் ராசஸ் தானும்
அறிவினில் கேர ளாவும்
பழகிடும் பாங்கில் வங்கம்
பாசமாய் ஒரிசா மாந்தர்
இளகிடும் பீகார் மக்கள்
இந்தியர் வணங்கிப் பாடும்
நலமெலாம் விழையு  முள்ளம்
நம்தமிழ் நாடும் கொண்ட

பாரத நாட்டில் நானும்
பிறந்திட தவமென் செய்தேன்
கார்முகில் பொழியும் மாரி
கடுமழை பொழிந்தாலிங்கு 
ஊரெது  உறவெ   தென்று
பார்த்திடா துதவி செய்யும்
பாரத நாட்டில் நானும்
பிறந்திட தவமே  செய்தேன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com