இன்றைய தாலாட்டு :  கு.முருகேசன்

ஆராரோ ஆரிராரோ!
ஆராரோ ஆரிராரோ!
கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்மணியே! கண்ணுறங்கு!

கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்மணியே!
வீட்டு வேலை முடித்துவிட்டு 
வேலைக்கு நான் போகவேண்டும்!

வேலையை முடித்துவிட்டு
வீடுவர மாலையாகும்!
மாலை நான் வரும் வரைக்கும் 
மன்னவனே கண்ணுறங்கு!

உன் அப்பா அலுவல் விட்டு 
வீடுவர இரவாகும்!
என் ராசா வரும் வரைக்கும்
நீ என் சின்ன ராசா கண்ணுறங்கு!

உன்னைப் பள்ளியில் சேர்ப்பதற்குள்
பல லட்சம் சேர்ப்பதற்கு 
வேலைக்கு நான் போகவேண்டும் 
வேளையுடன் கண்ணுறங்கு!

பள்ளி செல்லும் காலம் வரை
பள்ளிகொள்வாய் கண்மணியே!
பள்ளிதனில் சேர்ந்துவிட்டால் 
பள்ளிகொள்ள நேரமேது?

வீடெல்லாம் பொம்மையுண்டு
வீட்டோடு வேலைக்காரியுமுண்டு
நீ விளையாடும் அழகை நானும் 
வீடியோ கால் போட்டு பார்ப்பதுண்டு!

அலுவலகம் விட்டுவர ஆறு மணியாகுடா
புட்டியில பாலிருக்கு கெட்டிய குடிச்சிக்கோடா!
சீடியில பாட்டு கேட்டு 
சிங்காரமாய் தூங்கிக்கோடா! 

மாலையிலே குளிக்க வைத்து
மல்லிகையில் தொட்டிலிட்டு 
தாலாட்டுப் பாடுகிறேன்
என் தங்கமே நீ உறங்கு!

இணைய காலத்திலே 
இணைந்ததால் வந்தவனே!
இணையத்தால் பார்த்துக்கொள்ள முடிகிறது
பாலூட்ட முடியலையே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com