இன்றைய தாலாட்டு: கவிஞர். கா.அமீர்ஜான்

சின்ன மணித்துளியே
வண்ண ஒளி அழகே
சேதி ஒண்ணு பாட வந்தேன் கேளு-இது
தாலாட்டில்லே தூங்காமலே கேளு
                                       
கார்காலம் போயாச்சு
கடும்கோடை தீயாச்சு
வேர்க்காத நாளிலில்லே மகளே-மனம்
வாடாத பொழுதில்லே மகளே

அக்கால வீரமில்லே
அரவணைக்கும் ஈரமில்லே
இக்காலத் துயர்க்கிங்கே அளவில்லே -அத
எடுத்துரைக்க தெம்புமில்லே இதயத்திலே...
தூங்காதே கண் மகளே-துன்பம்
தொலைத்திட வா பொன் மகளே
சின்ன மணித்துளியே
வண்ண ஒளிஅழகே
சேதி ஒண்ணு பாடவந்தேன் கேளு-இது
தாலாட்டில்லே தூங்காமே கேளு...
                                         
சாதியிலே பேதம் பார்த்து- மதச்
சாஸ்த்திரத்தால் வாதம் செய்து
வீதியிலே மனித இனம் சாகிறதப் பாரு- இந்த
வாதைகளை ஒழிக்க வா நீ பெண் சிங்க ஏறு

ஆளம்பு சேனை யோடு
அதிகார திமிர்த் தனத்தால்
அமைதி அன்பு சீர்குலைஞ்சு போச்சுதடி பெண்ணே- கானல்
அலையினிலே தாகம் தணிக்க ஆச்சுதடி கண்ணே...
சின்ன மணித்துளியே
வண்ண ஒளிஅழகே
சேதி ஒண்ணு பாடவந்தேன் கேளு-இது
தாலாட்டில்லே தூங்காமே கேளு...

நிலத்தடி நீர் பானமாச்சு
ஏரிக் குளம் காய்ஞ்சுப் போச்சு
தெருவெல்லாம் கூத்தாடும் நிர்வாணம்-கழுத்து
தாலி அறுத்து குடித்துப் போறான் மயானம்...

சிசுக்கள் ஆனாலும்
கிழிஞ்ச சேலை ஆனாலும்
நசுக்கி மனம் கூத்தாடி மகிழுதடி வன்மம்-
இதையும்
பொசுக்கி விட்டால் பிறக்குமொரு ஜென்மம்-
புது ஜென்மம்

சமத்துவந்தான் பிறப்பெடுத்தால்
சத்தியந்தான் நிலைத்துவிட்டால்
அமைந்துவிடும் பேதமின்றி மகிழ்ந்திருக்கும் உலகு- இதில்,
அன்பு பாசம் கருணையாவும் இசைக்காதோ
புகழ்ந்து...

சின்ன மணித்துளியே
வண்ண ஒளிஅழகே
சேதி ஒண்ணு பாட வந்தேன் கேளு-இது
தாலாட்டில்லே தூங்காமே கேளு...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com