இன்றைய தாலாட்டு: கோ. மன்றவாணன்

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரமுதே பேரழகே
அழுவாது கண்ணுறங்கு

கால்கை தேஞ்சிருச்சு
கதிர்நெல்லு காஞ்சிருச்சு
காவிரியில் தண்ணியில்ல
கார்மேகம் காணவில்ல

பிஞ்சுமகள் வேண்டினாக்கா
பெய்யாதோ பூமழைதான்
கொஞ்சுமகள் கேட்டாக்கா
கொட்டாதோ வான்மழைதான்

ஏழைக்கும் செல்வருக்கும்
இருவேறு பள்ளிகளாம்
ஏற்றத் தாழ்வுகள்
இளமையிலே வளர்க்கிறாங்க
காமராசர் இருந்தாக்கா
கண்ணீர் உகுப்பாரு
கல்வியில நீ உயர
கடுஞ்சட்டம் வகுப்பாரு

நேத்துத் திறந்தாங்க
நீண்டதொரு பாலந்தான்
காத்து அடிச்சதால
கடகடவென விழுந்திடுச்சாம்
ஊழலத் துரத்தணுமே
ஊரத் திருத்தணுமே
இன்னொரு காந்திமகான்
எப்பத்தான் வருவாரு
போதையில தள்ளாடும்
பூமியிது பூமியிது
சமூகத்த காக்கவரும்
சாமியெது சாமியெது

கஷ்டத்தில் நாம்அழுதா
கண்ணீர் நனைக்குமடி
கண்ணீர்க்கும் வரிபோட
கவர்மெண்டு நினைக்குமடி
ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரமுதே பேரழகே
அழுவாது கண்ணுறங்கு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com