இன்றைய தாலாட்டு: பொன்.இராம்

வருங்கால மழலைக்கு
ஆங்கிலப் பள்ளியில்
இடம் பிடிக்க 
இயந்திர கதியாய்
பணம் ஈட்டும் 
குதிரைப் பந்தயத்தில்
விடுபட்ட சாட்டையென
ஓடிக் கொண்டிருக்கும்
நவீன ஜீன்ஸ் யுகத் தாய்!

அள்ளிச் செருகிய 
தாய்ப் புடவை கொசுவத்தின்
சுருக்கத்தை கைவிரலில்
அணைத்தபடி என் மடியில்
இனி உறங்கும் காலம் 
வருமோ!

பெயரிட்ட பனியனின் 
நுனி தேடி விரலாலே
கண்ணைக் கசக்கும்
மூன்று மாத மழலையின் 
பசி தீர்க்க நேரமில்லாத 
இரட்டை  சுமைதாங்கித் தாயின்
 வேதனை குறைக்க
என் தலையில் சுற்றிச் சுழலும் 
நவீன யுக தாலாட்டு ரோபாட் 
பொம்மை ராட்டினம் 
தூளியாய் நானிருக்க
சிரித்தபடி நீ இருக்க
என் மடியில் பால் புட்டியுடன்
செல்வமே நீ  கண்ணுறங்கு!

தொட்டால் பாடும்
கையடக்க அறிவியல் கருவியின்
தாலாட்டில் நீ வளர்வாயோ!
உறவுகள்  பாடிய
கானல்நீர் தாலாட்டு
கனவாகிப் போன மாயத்தில்
என் மடியில் நீ இங்கு
கண்ணுறங்குவாயோ!

சுவரில் மாட்டிய தாயின்
மகிழ்ச்சி முகம் பார்த்து
தங்கமே நீயும்
கண்ணுறங்கு!

வானத்து அறிவியல்
நட்சத்திர விடியல் அறை
ஒளியில் கிடைக்காத வீசுதென்றல் 
தண்ணொளி நிலவின் 
சுகம் அறியாமல்
குளிர்சாதன சுகத்தினில்
நீ கண்ணுறங்கு!

நாளை உலகின்
பணம் காய்க்கும் மரமாய்
மாறும் ஆசையில்
இன்றுதித்த பாச அரும்பின்
மனதினை யாரறிவார்?

கனவிலாவது தாயவள்
உன்னை தாலாட்டுவாளோ
என்ற ஆசையில்
கண்ணயர்வாயோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com