கல்லறைப் பூவின் கண்ணீர்த் துளி: -உத்ரன்

கல்லறையில் வதிந்ததனால் கவினுலகில் மரணம் பற்றி
அதிகமாய் வருத்தமின்றி அது உலகின் இயல்பேயென்று 
எண்ணி நான் இருந்தபோது எப்படியோ அது நடந்தேற 
கண்ணீரே வற்றிப்போக கலங்கி நான் அழுதயர்ந்தேன்!

வாழ்க்கையை அனுபவித்த வயதான முதியோர் பலரும்
பிணியினில் நித்தம்  வாடி  பிறவியை  முடித்து  வைக்க 
இறைவனை நிதமும் வேண்டி இயற்கையாய் மரணமுற்று 
கல்லறை ஏகும்போது களிப்புடன் உவகை கொள்வேன்!

மரணமே பலரின் வாழ்வின் பாங்கான அமைதி காக்கும்
உபாயமே  என்று சொன்னால் உண்மைதான் உலகறியும்
மூப்பினில் இறக்கலாம் என்றும் மொட்டினில் கருகலாமா
பார்த்தவர்  பதறும்  வண்ணம்  பாலகர்  இறத்தல்  நன்றா?

அரும்பிடும்   மலர்கள் சுமார்   இரு ஐம்பது அந்த   நாளில்
தீக்கிரையான  செய்தி தீயினும்   மேலாய்  பரவி  ஊரில்
உள்ளவர் எல்லாரும்  உதிரமே கொதித்து வெந்து வியர்த்து
நடைப் பிணமாகிப்   போன  நாளினை  மறக்கலாமோ?!

அன்றைக்கு அழுதேன் கண்கள் அகலமாய் வீங்கிப் போக 
இன்றைக்கும் நினைத்தால் உள்ளம் ஏகமாய் வாடுதையோ!
மொட்டுக்கள் அரும்ப வேண்டும் முழுதாயவர் வாழ வேண்டும்
கட்டுக்   கடங்காமல்  அவர் காலங்கள்   நீள   வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com