கல்லறைப் பூவின் கண்ணீர்த் துளி:  கவிஞர் "இளவல்" ஹரிஹரன்

பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே வாழும்
    பெருவாழ்க்கைக் கூடத்தில் அடையும் தோற்றச்
சிறப்புக்கும் செயலுக்கும் உயர்வைக் காட்டும்
    சிந்தையுடன் சகமக்கள் எல்லாம் எய்த
உறவுகொளும் உயர்மக்கள் நன்றாய் வாழ்ந்தே
    உத்தமராய் அன்புசெய்து நிறையுங் காலம்
இறப்பென்னும் இருட்டறையில் நுழையும் போதும்
    எழில்மணக்கும் பூக்களெலாம் கண்ணீர் சிந்தும்.

படைப்புக்குப் பெருமைசெய பூக்க ளெல்லாம்
     பரிவுடனே ஒவ்வொன்றாய் வாதம் செய்யும்
தடையின்றி ரோசாவோ பன்னீர் செய்ய
     தாமரையோ தண்டுமுதல் இதழ்வ ரையில்
கிடைக்கின்ற மருந்தாக, குண்டு மல்லி
     கேள்வியின்றி வாசமிகு மாலை யாக
அடைகின்ற சிறப்பெல்லாம் சொல்ல வொண்ணா,
     அத்தனையும் கல்லறைப்பூ கண்ணீர் பேசும்.

மலருக்கும் மனவருத்தம் இருக்கு மன்றோ
     மாதேவன் தோள்சேரும் ஒருமா லைப்பூ
உலர்கின்ற கல்லறைக்குக் கொண்டு சேர்க்கும்
     உயிரற்ற உடல்சேரும் ஒருமா லைப்பூ.
மலர்ந்ததொரு நாளினிலே வாடு கின்ற
     மாலையென இறைவனுக்கும் சூடப் பட்டு
புலர்ந்ததொரு மறுகாலை குப்பை சேரும்
     பூவினுக்கோ இதுதானே பெருமை யென்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com