கல்லறைப் பூவின் கண்ணீர்த்துளி: கவிஞர் டி.கே.ஹரிஹரன்

பூக்களெலாம் ஒன்றுசேர்ந்து
படைத்தவனிடத்தில் முறையிட்டன..

பிறவிக்குப் பெருமை சேர்க்கும்
பூக்கள் மாலையாகி
பெருமிதத்தில் இறைவனின்
திருமேனி தீண்டும் ....

வேறுசில பூக்களோ
பூவையர்க்குப் பூச்சூட்டி
எழில் சேர்க்கும்....

இன்னும் சிலபூக்களோ
மக்கள் கொண்டாடும்
தலைவர் தோள்சேரும்...

மற்றும் சில பூக்களோ
மாபெரும் வெற்றியைக்
கொண்டாடத் தோரணமாகும்.

இப்படிப் பெருமைக்குப்
பெருமைசேர்க்கும் பூக்களெலாம்
இங்கிருக்க......

உயிரற்ற உடல்மீது
கடைமாலையாய்க் கிடக்க
பாடைகள் மீதும்
சவம் புதைத்த கல்லறை மீதும்
சேர்கின்ற பிறப்புப் பூக்களுக்கோ
சிறப்பென்ன......

கேள்வி கேட்ட பூக்களுக்குக்
படைத்தோன் சொன்ன பதிலிதுவே..

நாடுகாக்கும் வீரர்கள்
வீரமரணம் எய்யுங்கால் அம்
மரணத்திற்கும் மரித்தவுடல்
புதையுறம் அக்கல்லறைக்கும்
பெருமைசேர்க்கும் பூக்களே...

 மக்களின் தலைவர்கள்
அமரநிலை எய்யும்போதும்
அவர்கள் கல்லறைக்கும்
அணிசேர்க்கும் பூக்களே.....

சிறப்புறுமாம் பிறவியிலே
வாடாத பூக்களாய்....
மலர்வளையங்களாய்...

அப்பூக்கள் மீதான பனித்துளிகளை
கல்லறைப்பூவின் கண்ணீர்த்துளியாய்
நீங்கள் கணித்தால்
அது யார் குற்றம்........!     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com