கல்லறைப்பூவின் கண்ணீர் துளி: ஏ.வி.ராமநாதன் 

பூங்காவில் பூக்கும்  வாய்ப்பின்றி 
கல்லறையில்  பூத்த பூவானேன்! 
மீளாமல் தூங்கும் மனிதரிடையே 
விழித்துப் பார்க்கும் பூவானேன்! 
மனிதர் கண்ணீரில் வளர்ந்து 
கண்ணீர் சிந்தும் பூவானேன்!
என்னை ரசிப்போர் இன்றி 
ஏக்கம் ரசிக்கும் பூவானேன்!

என்னைப்பாடும் கவிஞர் இன்றி 
சோகக்கவி பாடும் பூவானேன்!
ஊரின் ஒதுக்குப்புறம் வளர்ந்து 
ஒதுக்கப்பட்ட  பூவானேன்!
தனிமைப்பட்ட சூழ்நிலையில் 
தனித்து நின்ற பூவானேன்!
பூங்காக்களின் பராமரிப்பில்லா
அனாதைப் பூவானேன்!

"அம்மா, எனக்கு இது தகுமா, நீதியா'' என
அருகில் நின்ற வேப்ப மரத்திடம் 
அழுது புலம்பினேன்! 

''அடி முதல் நுனி வரை நான் கசப்பு! 
என்னால் மனிதர் வாழ்வில் வனப்பு!
நான் நானாய் இருப்பதென் இயல்பு! 
இதனால் எனக்கு  வாழ்வில் பிடிப்பு!
என்னிடம் பெறுவாய் ஓர் படிப்பு!  

பிறருக்காக வாழாதே!
பிறரிடம் எதிர்பாராதே!
எதிர்பார்ப்பு. ஏமாற்றம் 
ஏக்கம், துக்கம் தரும்! 
நீயாய் இரு, இயல்பாய் இரு, 
விருப்பப்படி இரு!
வாடி உதிரும் நாள் 
வரும்போது வரட்டும்!  
வாழும்காலம் முழுவதும் 
வாழக் கற்றுக்கொள்!
வாழ்நாளெல்லாம், இயல்பாய்
அன்பாய், புன்னகை செய்!
சோகக்  கல்லறையை  
அருமைப் பூங்காவாய் மாற்று!
எல்லாம் உன் கையில்!''

கேட்ட கல்லறைப்பூவின்
கண்ணீர் உலர்ந்தது! 
கல்லாய்ப் போன மனம் 
பூவாய் மிருதுவானது! 
வறண்ட  இதழ்கள் 
புன்னகை  சிந்தியது! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com