கல்லறைப்பூவின் கண்ணீர் துளி: முனைவர் க.பன்னீர்செல்வம்

மரணம் சில முரண்களை 
நம்மில் விட்டுச் செல்கிறது
ஆளுமைகளானாலும்; அடிமைகளானாலும் 
அமரர் ஆனபின் அஃறிணையாகின்றன.
ஐம்பொறி தொடர்பும் அற்று மெய்யும் பொய்யாகிறது.
எதுவும் இறுதிவரை வராது என்பதை 
ஒவ்வொரு மரணமும் நமக்கு அறிவிக்க...
புலன் உணர்வைப் போற்றிதிரியும் 
நாம் ஏனோ இதனை புரியாமல் போனோம்.

கல்லறை என்பதை கல்+ஆல்+ஆன அறை 
எனப்பிரித்து மூன்றாம் வேற்றுமை உருபும் 
பயனும் உடன்தொக்கத் தொகை எனக்கொண்டால்
நாம் அனைவரும் கல்லறையில்தான் வசிக்கிறோம் 
(செங்கலோ கருங்கல்லோ).
மலர்களைப்பாடாத கவிகளும் இல்லை;
மலர்களைத் தொடாத காதலர்களும் இல்லை; 
மஞ்சத்தில் உதிராத மலர்களும் இல்லை.
மலரும் மங்கையும் மண(ன)த்தாலும் 
வனப்பாலும் வசீகரிக்கின்றன.
எல்லா சடங்குகளிலும் சந்தித்துக்கொள்வது பூவும் தீயும்
எல்லாப்பூவும் மனிதனை மகிழ்விக்க 
கல்லறைப்பூ மட்டும் கண்ணீரை வரவைக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com