விடுதலை:  கவிஞர் இரா .இரவி

வணிகம் செய்ய வந்தவன் வெள்ளையன் நம் நாட்டை 
வசப்படுத்தி அடிமையாக்கிக் கொள்ளை அடித்தான்  !
இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் 
என்று மக்களைக் கொடுமைப் படுத்தினான் !
விடுதலை வேண்டிப் போராடினார்கள் அன்று 
வியர்வையும் ரத்தமும் சிந்திப் போராடினார்கள்!
வீரபாண்டிய கட்டபொம்மன் விடுதலைக்காக 
வீரத்துடன் போராடி வீர மரணம் அடைந்தான் !
வேலுமங்கை வீர நாச்சியார்  வெள்ளையரோடு   
வேங்கையென பாய்ந்து வீரப்  போர் புரிந்தார் !
குயிலி வெடிமருந்துக் கிடங்கில் தீயுடன் குதித்து 
குவலயத்தின் முதல் தற்கொலைப்  படையானாள் ! 
தடியடி பெற்றனர் சிறைக்குச் சென்றனர் 
தள்ளாத வயதிலும் போராட்டம் நடத்தினர் !
கடலில் கிடைக்கும் உப்புக்கு வரி விதித்தான்
காந்தியடிகள் தண்டி யாத்திரை நடத்தினார் ! 
அயல்நாட்டுத் துணிகளை  மக்கள் புறக்கணிக்க 
அண்ணல் காந்தியடிகள் மக்களிடம் வேண்டினார் !
பொது இடத்தில் குவித்து  வைத்து தீ இட்டனர் 
பொது மக்களும் வேண்டுகோளை நிறைவேற்றினர் !
கொடியைக் காத்து உயிரை விட்ட திருப்பூர் 
குமரன் மக்கள் மனதில் இடம் பிடித்தான் !
செக்கை இழுத்து சிறையில் வாடி வதங்கிய 
செந்தமிழர் வ .உ .சி நெஞ்சமெல்லாம் நிறைந்தார் !
நேதாசி சுபாசு சந்திரா போசு அவர்கள் 
நாளும் படை திரட்டி ஆயுத வழி போராடினார் !
அமைதிவழி ஆயுதவழி இரு வழியிலும் 
ஆங்காங்கே போராட்டம் புயலானது !
வேறு வழியின்றி வெள்ளையன் 
விடுதலை வழங்கிச் சென்றான் !
இங்கிலாந்துக்காரன் மட்டுமே ஆண்டான் அன்று 
எல்லா  நாட்டுக்காரனும் ஆளுகிறான் இன்று !
உலகமயம் என்ற பெயரில் நம் நாட்டை 
உலகமே கொள்ளை அடித்து மகிழ்கின்றது !
இன்னுமொரு விடுதலைப் போராட்டம் 
இளைஞர்கள் தொடங்கும் நாள் வரும் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com