விடுதலை:  கவிஞர் "இளவல்" ஹரிஹரன்

விடுதலையே உயிர்களது வேட்கை, விட்டு
      விடுதலையாய்ச் செல்வதுவே வாழ்க்கை, செய்யுங்
கெடுதலினால் துணைவருமோ யாக்கை, துன்பக்
     கேணியிலே சுழன்றிடுமே உள்ளம், ஆசைப்
படுவதனால் பிறவியெலாம் விலங்கால் கட்டுப்
     பட்டிருக்கும் நிலைமையினால் ஆயுள் மாயும்.
அடுக்கடுக்காய் ஆசைகளோ துரத்தும், அந்த
     அவலநிலை மாற ஆசை விடுதல் வேண்டும்.
கூண்டிலடை பட்டகிளி நெல்ம ணிக்காய்க்
     கொண்டதொரு வாசையினால் சிறையி ருக்கும்.
வேண்டும்போ ததனைவெளிக் கொணர்ந்து மெள்ள
     வேண்டியபடி சீட்டெடுத்து நல்லூழ் சொல்லும்.
ஆண்டையிடம் அடிமைபட்ட கார ணத்தால்
      அந்தநந்த னாருமிகத் துன்ப முற்றே
ஆண்டவனைக் காணவாசை கொண்டு தில்லை
      அம்பலவா ணனுடன்க லந்து சென்றார்.
வேண்டுவதோ விடுதலையே! வெள்ளை யர்கள்
       விட்டுச்சென் றநாட்டினையே கொள்ளை யர்கள்
மீண்டுமெமை ஆளுவதோ! மக்க ளாட்சி
       மேலெழுந்த வாறுவதன் போர்வைக் குள்ளே
மீண்டுமீண்டும் சுரண்டுதற்கே ஆளு கின்றார்;
       வெட்கங்கெட் டவரசியல் நிலையி ருந்து
வேண்டுகின்ற விடுதலைக்காய்ச் சேர வேண்டும்
       விளைவதுவோ மக்களுக்கு நன்மை யன்றோ!                           

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com