நிழலைத் தேடி: ​கோ. மன்றவாணன்

சூரியப் பார்வை
துழாவ முடியாத
இருள்நிழல் காடுகள் இருந்தன
என் பாட்டி காலத்திலும்.

குறிஞ்சி, முல்லை, மருத நிலங்களையும்
பாலையாக்கியதில்
சுடுசூரியனுடன் கூட்டணி சேர்ந்து
கோடரி தூக்கியது நம் சமூகம்

மனை வணிகத்தின்
பணத்தொந்தி பெருத்துக்கிடக்கிறது
நிழலை விழுங்கி ஏப்பம் விட்டதில்

அரிதாய்ப் பெய்யும்
மழையைப் படம்பிடித்து வையுங்கள்
அடுத்த தலைமுறைக்கு
அடையாளம் காட்ட!

மரத்தை வெட்டி
மழையை விரட்டிய நமக்கு
நியாயம் ஒருபோதும் இல்லை
நிழலைத் தேட!

மரக்கன்று நட்டுப் படம்எடுத்துக்கொண்டார்
மந்திரி
அடுத்த கிராமத்தில் மரம்நடு நிகழ்வுக்காக
அதைப்பிடுங்கிப் போனார்
உடன்வந்த அரசு ஊழியர்

அரசமரம்
ஆலமரம் பந்தல்விரித்து இருந்தன
அந்தக்கால ரயில்நிலையங்களில்

இன்று
உருகி வழியத் தயார்நிலையில் உள்ளன
ரயில்நிலையக் கூரைகள்

நதியின் சமாதியில் எழுப்பிய
கான்கிரிட் கட்டடத்துக்குள் பொங்குகிறது
வியர்வை நதி

இனி, கனவிலும் வராது
நீ செல்லும் இடமெல்லாம்
குடைபிடித்த மரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com