நிழல் தேடி: -பெருமழை விஜய்,

நிழல் தேடி வைத்தேன் வாசலில் வேம்பொன்று
நித்தமும் நீரூற்றினேன் பார்த்துப் பார்த்து
ஒவ்வொரு தளிரும் உளத்தை நிறைக்க
மனதெல்லாம் வியாபித்து வளர்ந்தது அது மரமாய்!

வாசலுக்கும் வீட்டுக்கும் வந்தது பேரழகு
போவோர் வருவோரும் நின்று இளைப்பாற
காலை எழுந்ததும் கனிவுடன் அதைத் தடவி
மாலை நேரங்களில் மகிழ்வுடன் பேசுவேன் அதனுடன்!

டூவீலர் காரென்று நித்தமும் அதன் நிழலில்
நிறுத்தும் பலரும் நிம்மதியாய் ஓய்வெடுக்கவும்
கட்டுமானப் பெண்களின் மதிய உணவுக் கூடமாயும்
பரிணமித்த அதனைப் பார்த்து பரிபூரணமாய் மகிழ்ந்தேன்!

வீட்டைப்  பூட்டி  வெளியே செல்கையில்
அதனிடம் கூறியே அகல்வோம் நாங்கள்
அன்றைக்கும் அப்படியே சென்று திரும்பினோம்
அந்தோ!ஒடிந்த என் மரம் குற்றுயிராய்!

பெய்த மழையும் பேய்க் காற்றும்
ஒடித்தே போட்டது என்னுயிர் வேம்பை!
அண்ணன் வந்தார் விழுந்த மரத்தை நிமிர்த்திக் கட்டி
புத்தூர் கட்டொன்றை அதற்குப் போட்டார்!

பசுவின் சாணங்கொண்டு மெழுகச் சொல்ல
அம்மாவின் வேலை நித்தம் அதுவாயிற்று!
வீட்டார் ஒருவர் நோய் கொண்டதைப் போல
எல்லோர் மனதிலும் ஏகமாய் நெருடல்!

போட்ட கட்டும் பொங்கிய எம் அன்பும்
அதனை மீண்டும் தழைத்திடச் செய்ய
நெஞ்சின் ஓரத்தில் நிம்மதி தோன்ற
தெருவாசிகளின் நிழல் களம் ஆயிற்று அது!

ஆண்டுகள் சில அப்படியே கழிய
வானளாவ வளர்ந்தது எம் மரம்!
வர்தா வந்து அதனைச் சூறையாடுமென்று
கனவிலுங் கூட யாம் நினைத்ததே இல்லை!

அது நின்ற இடம் இன்று வெற்றிடம்
எம் மனதோ சோகத்தின் புகலிடம்!
மீண்டும் ஒரு வேம்பைத் தேடிக் கொண்டிருக்கிறோம்
முன்னதன் சோகத்தை முழுதாய்ச் சுமந்தபடி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com