ஆறோடும் நீரோடும்:  கு.முருகேசன்

மலையில் பிறந்து
மடுவில் நிறைந்து
மண்ணைக் கடந்து
கடலில்  கலக்கும் நீரே!

நீ நின்றால் குட்டை!
நடந்தால் ஓடை!
ஓடினால் ஆறு!
கலந்தால் கடல்!

தனக்கான பாதையை தானே
உருவாக்கிக் கொண்டு
முன்னோக்கியே நகரும்
தளபதி நீ!

ஆறே! நீ ஓடுவதால்
மனித வாழ்கை நடக்கிறது!
நீ மனிதர்களைக் கழுவியே
அழுக்காகிப் போனாய்!

ஆறில் நீரோடும் போதெல்லாம்
ஊரில் சீரோடும் சிறப்போடும்
பேரோடும் புகழோடும்
வீதியெங்கும் தேரோடும் !

ஆற்றில் நீரோடும் போது
மீன் பிடிப்போம் !
ஆற்றில் நீரோடாத போது
மணல் எடுப்போம்!

அன்று ஆற்று நீர்
மனித நாகரிகத்தை வளர்த்தது!
இன்று ஆற்று மணல்
மனித நகரத்தை வளர்க்கிறது!

ஆற்றில் நீரோடினால்
விவசாயிகள் விவசாயம் செய்கிறார்கள்!
ஆற்றில் நீரோட்டம் நின்றால்
அரசியல்வாதிகள் அரசியல் செய்கிறார்கள்!

ஆற்று நீர் விவசாயிக்கு
வாழ்க்கைப் பிரச்சனை!
அரசியல் வாதிக்கு
வாக்குப் பிரச்சனை!

உழவனுக்கு ஆற்று நீரும்
ஊற்று நீரும்  கிடைத்தால்தான்!
உலகத்திற்கே
சோற்று நீர் கிடைக்கும்!

உழவனை ஏமாற்றி  
குளிர்பானக் கம்பெனிக்கு
கொடுக்கும் ஆற்று நீரெல்லாம்!

ஜாமீன் இன்றி  
சிறைபட்டே கிடக்கின்றன
குளிர்பானங்களாக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com