ஆறோடும் நீரோடும்;  ரெத்தின.ஆத்மநாதன்

அக்கரையில் அவள் வீடு!
எனதன்பு  உயிர் வீடு!
இக்கரையில் நின்று நான்
எவ்வளவுதான் கத்தினாலும்
ஆற்றுச் சுழலோடு
அத்தனையும் ஐக்கியமே!

சுழித்தோடும் ஆற்றுநீரில்
சுகமான அவள் வதனம்
மிரட்டும் என் மனதை!
மீண்டுமது சுழற்காற்றில்
கலந்து வந்து கண்முன்னே
காவியமாய்  உருக்காட்டி
கன ன்றிடும் மனதினுள்ளே!

காகிதமாய் என் மனது
ஆற்று நீர் மேலே
அற்புத நடை போடும்!

பொங்கும் புனலது 
நுங்கும் நுரையுமாய்
கரைதழுவி ஓடுகையில்
நீந்திப்போய் அவளை
நித்தம் பார்த்திடவே
மனது அலைபாயும்!

மங்கையவள் எழில்காண
கண்கள் தவமிருக்கும்!
கைகள் துடிதுடிக்கும்!
ஆனாலும் ஆறென்றும்
தண்ணீரைக் குறைத்ததில்லை!

தகைவான அவளுருவை
அருகில் பார்க்க 
அனுமதித்ததே இலையென்னை!
இன்றைய ஆற்றினிலோ
திட்டுக்களாய் தண்ணீர்!?
இருந்தாலும் என்மனதில்
ஏகமாய்ச் சந்தோஷம்!

நடந்தேபோய் என்னவளை 
நாளும் தரிசிக்கலாமே!
எழுந்து காலையிலே
என்னவள் வீடுபார்த்தால்...
புல்டோசர் ஒன்றாலது
போயிற்று துகள்துகளாய்!

ஆற்றை விரிவுசெய்து
அணைகட்டத் திட்டமாம்!
இடிந்து போயிற்று
எம்காதல் கனவுகள்!
ஆறோடும் நீரோடும்
வளர்ந்த எம்காதல்
அணைகட்டும் திட்டத்தால்
அமிழ்ந்தே போயிற்று!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com