ஆறோடும் நீரோடும்; கவிஞர். கே. அசோகன்

ஆறுகளுக்கு அழகழகாய் பேரும் சூட்டி
ஆறுதலாய் இருப்பதுதான் அழகு ஆமோ?
ஆறுகளின் வளங்களையே சூறை யாடி
அதுஅழிந்து போனபின்னே கூவல் ஏனோ?
ஆறுகளின் கரைகளிலே நாகரீகம் தான்
அதுவளர்ந்த கதையெலாம் ஏட்டில் படித்தே
ஆறுகளின் நீரோட்டம் காத்த லின்றி
அவதிதான் படுகின்றோம் இந்த நாளில்!

ஆறோடும் நீரோடும் வழிகள் தோறும்
ஆக்கிரமித்து வீடுகளையே கட்டி விட்டு
ஆறோடு அடித்துதான் சென்ற தென்றே
அடிவயிற்றில் அடித்துகொள் வதேனோ?
ஆறோடும் நீரோடும் பாதை யோரம்
அழகான மரங்களையே நட்டு வைத்தால்
ஆறோடும் நீரோடும் அழகே அழகு!
அதன்பெருமை எவருமே அறிந்தா ரில்லை!

ஆறோடும் வழிதனிலே அணைகள் கட்டி
ஆண்டதுபார் அந்நாளைய மன்னர் கூட்டம்!
ஆறோடும் நீரோடும் மணலை யள்ளி
அதில்வரும் லாபமென்ன கணக் கிட்டு
சீராகத்தான் வாழுகின்றார் இந்த நாளில்
செல்வ வளம் கொழிக்கின்ற ஆறு களை
சீரழித்து விட்டோமே நியாய மாமோ ?
செந்தமிழர் கையேந்தும் நிலை ஏனோ ?

ஆறோடும் நீரோடும் அழகைப் பார்த்து
ஆனந்தமாய் மகிழ்வோமே அந்த காலம்
ஆறோடும் நீரோடையில் நீரை யருந்தி
ஆவினமும் பறவைகளும் மகிழ்ந் தனவே!
ஆறோடும் நீரோடும் அழகு தன்னை
அழகுமடிக் கணிணிதனில் கண்டிடு வோமே
ஆறோடு ஒன்றுசேரின் ஏழே ஆகும்
அதோடு அரை-சேர்ந்த கதைதான் இன்றே!
        
ஆறோடு நீர்ப்பெருக்கி ஆர்ப்பாட் டமாய்
ஆடிப்பெருக்கென ஆடியே மகிழ்ந் தோமே
ஆறோடு நீரில்லா மணல் வெளியில்
அடிவைக்க தயங்கிதான் நின்றோம் இன்றே
ஆறோடு நீரோட்டம் வேண்டு மெனின்
ஆகாயத்தின் மழைநீர்  விழுதல் வேண்டும்
ஆறோடு நீரோட்டம் அதிகம் வேண்டின்
அங்காங்கே மரக்கன்று நடுதல் வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com