ஆறோடும் நீரோடும்; மு.செல்வராசன்    

ஆறோடும் பாதைகளை அடைத்து விட்டு 
     அடுக்கடுக்காய் வீடுகளைக் கட்டி வைத்து 
நீரோடும் கழனிகளை மனைகள் ஆக்கி 
     நித்தநித்தம் விவசாயம் அழியச் செய்தாய் 
ஏரோடும் வயல்களெல்லாம் பொட்டல்  காடாம் 
     இனியென்ன செய்வதென அறியா உழவர்  
ஆரோடும்  சொல்லாது  குடும்பத்  தோடு 
    ஆருயிர்க்கு விடைகொடுத்தார் அந்தோ! அந்தோ!

உயிர்களுக்கு உணவளிக்கும் உயர்ந்த தொழிலாம் 
     உழவுதனை உயிர்த்தொழிலாய்க் கொண்ட உழவர் 
பயிர்வளர உழவோட்டி எருவும் இட்டுப்
     பக்குவமாய் நீர்பாய்ச்சிக் களையும் பறித்துத் 
துயிலதனைத் துறந்துவிட்டுப் பகலும் இரவும் 
     சுறுசுறுப்பாய்த் தேனீபோல் உழைப்பார்; ஒற்றை 
மயிரளவு மழையேனும் பெய்யா  ததாலே 
   மடிகின்ற பயிர்பார்த்துத் தாமும் மடிவார்.. 

போருழவர் ஏருழவர் வாழ்க என்ற 
   பொன்மொழியை வழங்கினார்நம்  பிரதமர் சாஸ்திரி  
காருவந்து அவர்மனம்போல் வானம் பொழிக!
   கண்மாய்கள் ஏரிகுளம் நதிகள் எல்லாம் 
நீருயர்ந்து வரப்புயர்ந்து நெற்பயிர் உயர்ந்து 
   நிலையான வருமானம் உழவர் பெறுக! 
ஊருவந்து உலகுவந்து ஏற்றம் பெறவே 
   'ஓ'வென்று பொழிந்திடுக மழையே! மழையே!    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com