குழந்தையின் குரல்: சென்னிமலைதண்டபாணி 

மரங்களிலே தூரிகட்டி
மனம்மகிழ ஆடியதும்
கரங்களிலே கல்லெடுத்து
காடுகளில் திரிந்ததுவும்..

ஓணான்கள் அடித்தபடி
உற்சாகம் கரைபுரளத்
தேனான புளியம்பூ
தித்திக்கத் தின்றதுவும்

சிறுகிணறு என்றாலும்
சிலிர்த்தபடி நீந்தியதும்
வறுத்தெடுக்கும் வெய்யிலிலும்
மனம்போலத் திரிந்ததுவும்

பசிமறந்து விளையாடிப்
பகலிரவைக் கொண்டாடி
வசித்திருந்த காலத்தை
வாய்மணக்கச் சொல்லுகிறீர்..

அன்றைக்கு நீங்களெலாம்
அனுபவித்த இன்பங்கள்
இன்றைக்கோ எங்களுக்கே
இல்லாமல் போனதுமேன்?

அலையடிக்கும் ஆறில்லை
அழகொளிரும் மலையில்லை
விளையாட ஒருதிடலும்
வீதியிலே இங்கில்லை.

மரமெல்லாம் என்னாச்சு?
மலையெல்லாம் என்னாச்சு?
சரஞ்சரமாய்ப் பழையகதை
சாற்றுவதும் கேட்டாச்சு…

விடுமுறைதான் என்றாலும்
விளையாட வழியில்லை
அடுத்தடுத்துப் படியென்ற
அறிவுரைக்குப் பஞ்சமில்லை

குழந்தைகளின் உலகத்தைக்
குழிதோண்டிப் புதைத்துவிட்டே
அளக்கின்ற கதைகளினால்
யாருக்குப் பலனுண்டு?

என்னைப்போல் இங்கிருக்கும்
எத்தனையோ குழந்தைகளின்
எண்ணத்தைச் சொல்லுகிறேன்…
ஏக்கத்தைச் சொல்லுகிறேன்.

குழந்தைகளைக் குழந்தைகளாய்க்
கொண்டாடி மகிழுங்கள்..
வளமான எதிர்காலம்
வளர்வதையும் பாருங்கள்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com