நதிக்கரையின் நினைவலைகள்: பி.பிரசாத்

பள்ளி பருவத்து ஞாபக‌ங்கள் - மனக்
  கண்ணின் முன்னாலே ஓடிடுதே !
துள்ளி வருகின்ற காவேரி - வீட்டுக்
   கொள்ளைப் புறத்தோடு சென்றதுவே !

"தட்டுப் பாடாகும் தண்ணீர்" - எனத்
   துளியும் படவில்லை அன்று !
கட்டுக் கடங்காத இன்பம் - நதிக்
   கரையில் நின்றாலும் உண்டு !

ஆடி பதினெட்டு வந்தால்... - கையில்
  ஆறு வகைசாதம் கொண்டு
கூடி ஒன்றாகக் கரையில் - நாம்
   உண்ட பொழுதெல்லாம் வருமோ?

பெண்டிர் குளிக்க ஓர்கரையாம் ! - தாவி
   நீச்சல் அடிக்க ஒருகரையாம் !
அண்டி வாழ்கின்ற மாடு.. ! - அவை
  அழகாய் குளிக்க ஓரிடமாம் !

இன்று பார்க்கின்ற போதோ - வெறும்
  மண்டிக் கிடக்கின்ற குப்பை !
குன்று போலாக எங்கும் - மணற்
   குவியல் மட்டுந்தான் கண்டேன் !

நதியின் ஓட்டத்தை தடுத்தார் ! - அது
   நமக்கே வினையென்றும் கண்டார் !
கதியே நீயென்று அதையே - இங்கு
  கதறி அழைக்கின்றார் வருமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com