சமூகக் குற்றம்: செந்தில் குமார்

கால் வயிற்றுக் கஞ்சிக்கும்
கட்டும் துணிக்கும் கதியில்லா 
அன்றாடங்காய்ச்சிகளைக் 
கொண்டது ஒரு முகம்!
காகிதமாய் காற்றில் பறக்கவிட்டாலும்
குப்பையாய் கிழித்தெரிந்தாலும்
குறையாத பணம் கொண்டோரைக் 
கொண்டது மறு முகம்!

குடும்பம் நடத்த 
குடிசைக்கும் வழியின்றி 
தெருக்கோடியில் நடைபாதையில் 
படுத்துறங்கும் கூட்டம் 
என்பது ஒரு முகம்!
மாடி மேல் மாடி கட்டியும்
மெத்தை மேல் மெத்தை வைத்தும்
தூக்கமின்றித் தவிக்கும் கூட்டம் 
என்பது மறு முகம்!

நரம்பு புடைக்க நாடி தெறிக்க 
மூச்சு இறைக்க முதுகு வளைய 
மூட்டை சுமந்து 
குடும்பம் நடத்துவோர் ஒரு முகம்!
சொக்கத்தங்கம் சொகுசு வாழ்க்கை 
சொர்கபுரி சொத்து சுகம்
என மகிழ்ச்சியில் திளைபோர் மறு முகம்!

கந்து வட்டிக் கொடுமை
கட்டப் பஞ்சாயத்துக் கொடுமை
என வாழ்க்கையைத் 
தொலைப்போர் ஒருமுகம்!
கோடி கோடியாய் வங்கிகளில் 
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் 
வழக்குகள் நிலுவையில் உள்ளபோதே 
வெளிநாடு செல்வோர் மறு முகம்!

என் தாய் திருநாடே!!
ஏன் இந்த இரட்டை முகம்? - நீ 
வல்லரசாக மாறும் முன் 
குறைந்தபட்சம்
நல்லரசாக மாறுவாயா?
நீதி தேவதையின் கண்களில் 
கட்டிய கருப்புத்துணியை கிழித்தெறி!
அப்போதாவது உணருவாள்
அவள் இங்கு நடக்கும் கொடுமைகளை!

வந்தே மாதரம்!!!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com