கடந்த வாரத் தலைப்பு ‘முதல் தனிமை’ - வாசகர்களின் கவிதைகள் பகுதி 2

முதல் தனிமை கருவறையில் வந்து விட்டது யாருமில்லாமல் கட்டிலிலோ தொட்டிலிலோ
கடந்த வாரத் தலைப்பு ‘முதல் தனிமை’ - வாசகர்களின் கவிதைகள் பகுதி 2

தனிக்குடும்பத்தில் தாய் தந்தை
அலுவலகம் செல்ல
தாத்தா பாட்டி அரவணைப்பின்றி 
பள்ளி சென்று வீடு திரும்பும்
குழைந்தையின் பிஞ்சு பருவத்திலேயே 
உண்டாகும் முதல் தனிமை!!

எண்ணில் அடங்க எண்ணங்களை
நாம் எண்ணத்தில் கொண்டு சேர்க்கும் 
முதல் தனிமை
எண்ணற்ற நாம் சிந்தனைக்கு 
என்னவெல்லாம் உயிர் கொடுக்கும் 
முதல் தனிமை
நாம் யார் என்பதை உணரவும்
இவ்வுலகத்துக்கு உணர்த்தவும் உதவியாய் நிற்கும்
முதல் தனிமை
வீரர்களையும் கோழையாக்கும்
கோழைகளையும் சாதனை படைக்க வைக்கும்
முதல் தனிமை!!

 - கோமலீஸ்வரி

பிறந்ததுமே தெரியவந்த பிறப்பிடமே முதல்த்தனிமை
  பிறகேதான் தெரியவந்த பிறப்பினுடை உண்மையிலை.!
அறவழியில் போராடி ஆண்டுகளும் கழிந்தபின்னே
  அம்மாயார் என்பதுமே அறிந்துகொள முடியவிலை.!
புறவுலகம் தள்ளிவைத்துப் புறந்தள்ளி நகையாடி
  பித்தன்போல் ஆனபோது  பிதாவங்கே வரவில்லை.!
பிறருமென்னைப் பார்த்தவுடன் பழிக்காத நாளில்லை
  பெற்றோரும் உற்றோரும் பிறர்கூட வாழ்ந்ததில்லை.!


கனாவொன்று கண்டேன்நான் கன்னியவள் வந்தாளாம்
  கையிலுள்ள குழந்தையையும் குப்பையிலே வீசினாளாம்.!
வினாக்களும் அந்நேரம் விளைந்ததுவே பலப்பலவாய்
  விடையொன்று கிடைக்காது விதியறியா அலைந்தேனே.!
அனாதியானேன் என்றுதெரிந்த் அம்மாவும் அப்பாவும்
  அரவணைக்க வரவில்லை ஆருணர்வார் எம்பிறப்பை.!
அனாதையெனை இன்றுவரை ஆருமெனைச் சேரவிலை
  அதற்கான காரணத்தை அறியநானும் முயலவில்லை.!

தனதுதப்பை மறைப்பதற்குத் தாங்களீன்ற சந்ததியைத்
  தந்தைதாயும் மறந்தனராம் தனிமையாக்கத் துணிந்தாரே.!
அனகச்செய் கையேதும் அரும்பவில்லை மனத்துள்ளே
  ஆருமறி யாவண்ணம் அரங்கேற்றம் செய்தனரே.!
சனனமுதல் சாவுவரைச் சங்கடங்கள் கொண்டதுதான்
  சந்ததிகள் காலைவாரச் சதித்திட்டம் போட்டனரோ.!
புனர்ஜென்மம் உண்டென்றால் புதுப்பிறவி மீட்பிறப்பில்
  பிறவிமுதல் தனிமையிலாப் பிறப்பொன்றே வேண்டுமப்பா!

- பெருவை பார்த்தசாரதி

முதன் முதலாய்
உன்னைப்பார்த்து பிரியும் போது
இதயத்தில் ஏதோ
இனம் புரியாத வலி!
புரிந்து கொண்டேன்
தனிமை எனக்கு புதிது

முதல் தனிமை கருவறையில் வந்து விட்டது
யாருமில்லாமல் கட்டிலிலோ தொட்டிலிலோ
இருக்கும் பொழுதும் தனிமைதான்!
பள்ளியில் பலர் இருந்தாலும்
பெற்றோர் விட்டுச் சென்றபின் தனிமைதான்!
விரும்பிய பெண் நம்மை விட்டு
நீங்கும் பொழுதும் தனிமைதான்!
புகுந்த வீட்டில் விட்டுவிட்டுச்
செல்லும்பொழுதும் தனிமைதான்!
ஆனால், எல்லாத் தனிமையிலும் துயரத் தனிமை
துணையைப்பிரிந்து தவித்து இருப்பதே!

- இளவல்

பள்ளியில் முதல் நாள் 
கல்லூரியில் புதிய நண்பர்கள்                                                   
திருமணத்துக்குப் பின் மனைவி 
ஊருக்குச் செல்வது
எது முதல் தனிமை 
அந்தந்த நிலையில் இவையெல்லாம்
இன்னமும் கூட
வாழ்வின் பல தருணங்களில்
முகிழ்க்கும் முதல் தனிமைகள்

- பாரதிராஜன் பெங்களூரு

குறைப்பாடு உள்ளதாக நீக்கப்பட்டவனின்  
தோழமையான தொடு உணர்ச்சியை காணாமல் 
முதல் தனிமையை 
உணர தொடங்கியது 
கருவில் இருக்கும் 
மற்றொரு குழந்தை!

-சுபர்ணா

தாயின் பால் அமிர்தம் என்பார்கள்
எனக்கு மட்டும் விஷமானது
பிறந்து ஆறு மாதங்கள் ஆன எனக்கு 
பாலூட்டி பசியாற்ற மறந்து
விஷம் குடித்து மறைத்து போன 
அன்று முதல் என் "முதல் தனிமை" 
முற்றிலும் தனிமை ஆனது 

- தினேஷ் உமேஷ்

தாயின் கருவறையில் இருந்து  பிரிந்தது,  முதல் தனிமை. மனதில் காதலோடு அவள் முதலா முடிவா  என்று நினைத்து கொண்டு நின்றது தனிமை. 
காதல் பிரிவில் உள்ள தனிமை தரும் வேதனை மிக கொடுமை. "தனிமை இது நானாக தேடிக்கொண்ட சாபம் அல்ல, இது நான் உயிராக நேசித்தவர்கள் அளித்த வரம். காதலியிடம் காதலை சொல்ல தைரியம் இல்லாமல் நிற்கின்ற அந்த முதல் தனிமை,  கற்றுக்கொடுத்த பாடம் வாழ்வின் மகத்துவம். இது வெறும் புரிதல் மட்டும் அல்ல இது அன்பின் வெளிப்பாடு . தனிமையில்  மட்டுமே நாம் அனைத்தையும் உணரமுடியும், அந்த  தனிமை வாழ்க்கையின் இனிமை ... 
              
- ந. அருள்செல்வன்,  தரசூர்

முதல் தனிமை   தாயின் ஸ்பரிசம் விலக அழுகையில் துவக்கம்!
அடுத்தத்தனிமை வயிற்றின் பசிக்காக அழவைக்கும்! 
மூன்றாம் தனிமை  இருட்டைக்கண்டு கண்கதறும்!
மழலையில் ‘நடக்கும்’ தனிமை  வேடிக்கைக் காட்டும்!
பதின்பருவத்தனிமை  பயத்தை எதிர்கொள்ளச்செய்யும்!
தொடர்ந்து வரும் தனிமையெல்லாம்  துயரங்களின் துவக்கமே . . .
துவக்கம் மட்டுமே!!
ஒரு புன்னகை ஒரு புத்தகம்  ஒரு திரைப்படம்  ஒரு ஓவியம்  
ஒரு  சிட்டுக்குருவி  ஒரு காற்றசைவு  ஒரு கவிதை  ஒரு நெல்லிக்கனி
ஏதோ ஒன்று  இட்டுநிரப்பிக்கொண்டே வர 
வாழ்க்கை ஓட்டம் ஓடாது நகரும்!
கடைசித்தனிமைக்கு சாய்வு நாற்காலியாவது துணை சேரும்!
முதல் தனிமை அழவைத்தது!  கடைசித்தனிமையோ 

 -கே.ஆர்.கார்த்திகா

பெற்றவர் பஞ்சு கைகள் பட
ஒரு பிஞ்சுபருவம் –
ஆதவனாய் ஒரு ஆசிரியன் ,
பளிச்சென்ற படிப்பு வெளிச்சத்தைத்தர,
அதை  கண்ணுக்குள் இழுத்த கல்விக்காலம் –
தொழிற்சாலையையே நுகரும்  
தொடர் வேலை,
இருந்தும் அங்கு
நற்குணச்சோலையாய்  ஒரு
நட்புக்குழாம் –
துன்ப வியர்வையை
துடைக்கப் புறப்பட்டது
குடும்ப விசிறி !
எல்லாம் முடிந்தது !
தனிமையில் நானோ ?
இல்லை , இல்லவே இல்லை !
கைகளுக்கு முத்தம் தர முத்தமிழ்
இருக்க,  எனக்கேது முதல் தனிமை !

- கவிஞர் டாக்டர். எஸ்.பார்த்தசாரதி 

எனது முதல் தனிமை காதலினால் அல்ல! 
எனது முதல் தனிமை வாலிபத்தால் நேர்ந்தது!

பிறந்தது முதல் பார்த்து பார்த்து வளர்க்கப்பட்ட பாலகன்! 
கையில் சாப்பிட சிரமப்பட்டு ஊட்டிவிட்டு வளர்ந்தான் பாலகன்!
நாட்கள் ஓடின அதனுடனே படித்தான், வளர்ந்தான்!
பருவம் கொண்டான், கல்லூரியும் முடித்தான்!
வேலை கிடைப்பதோ பட்டிணத்தில் தான், நோக்கினான்!

வாழ்க்கை என்னும் வட்டத்தில் பொருள் தேடி புறப்பட்டான்!
உறவும், தோளும் ஊரிலே வழியனுப்பி நின்றது!
கடனும் கனவும் விடாமல் துரத்தின!
அயலூர் வீதிகளில் அல்லும் பகலுமாய் திரிந்து!
ஐந்தையும் பத்தையும் பார்த்து பார்த்து செலவு செய்து!
எஞ்சியதில் மிஞ்சினால் மாதக்கடைசியில் உணவு உண்டு!
கண்டு கண்டு பயணித்து கன்றுபோல் நடந்து!
வேலை என்னும் சிகரம் நோக்கி குன்றேறினான்!

முதல் முறை கூட்டை விட்டு பறக்கும் பறவைக்கு கூட துணையுண்டு!
ஆனால் வேலை தேடி பட்டிணம் போகும் பிள்ளைக்கு யார் துணை!
காலம் தான் துணை! 
 
பெற்றோர்களே பிள்ளைகளை உங்கள் கண்முன் சிறகடிக்க பழக்கிவிடுங்கள்! 
ஒரு முறை விழுந்து பின்பு எழுவதை கற்றுக்கொடுங்கள்!

பருவத்திலும் கைப்பிடித்து நடக்காமல்!
கையில் உணவு ஊட்டாமல்!
தூர நின்று நடக்க கற்றுக்கொடுங்கள்!
தட்டில் எடுத்து போட்டு உண்ணச்சொல்லுங்கள்!
அம்பாரியில் இருந்து இறக்கிவிட்டு!
நடந்து போக கற்றுக்கொடுங்கள்!
அவன் விழுவான் சற்று பொறுங்கள் எழுவான்!

தனிமையே அவனை தனிமனிதனாக தேற்றும்!

-செல்வா, நெல்லை

தாயின் கருவறையில் தனிமை உருவாக, அவ்வப்போது தாய் புலம்ப தனிமை - உடைபடும்
"நீ - பெரியவனானா இவங்க போல இருக்காத " 
நீ வெளிய வந்து - இவங்கள என்ன சேதீன்னு கேக்கனும் - சரியா?" இப்படி
பிறகு - விட்டுச் செல்வார்கள் வீட்டில் - தனிமையை துணையாக்கி,
பொம்மைகள் - நண்பர்களாய்
போட்டோக்கள் - உறவுகளாய்,
டி.வி-யின் தாலாட்டில் உறக்கம், பின் பள்ளி நாட்களில்
தந்தை மரணித்த பின் - சூழ்ந்து கவ்விய தனிமை,
ஆழ்த்தியது சொல்லொணா சோகத்தில்,
வளர்ந்து மணம் முடித்த பிறகோ - வீட்டில் வெளியூரில் நான்கு சுவற்றுக்குள் நாகரீக சிறையில் நாளும் தனிமை,
இதில் எல்லாமே புதிதாய் முதல் தனிமையாகவே இருக்க - எதற்கு முதலிடம் தருவது ?
நாளை பிள்ளைகள் நமை விட்டுச் செல்லும் போதும் - இதே தனிமை என்னை விடப் போகிறதா என்ன?

- கவிதா வாணி - மைசூர்

நீ இல்லாத வீட்டின் 
தேடிக் கலைக்கும் 
துணியடுக்கில்,
தொலைந்த சாவியில்,
படர்ந்த தூசியில்,
குளியல்றைக் கண்ணாடியில்
ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் 
பொட்டுகளில்
படர்ந்திருந்தது 
என் 
முதல் தனிமை

- விஸ்வநாதன், அம்பத்தூர்

முதல் தனிமையின் கதகதப்பில்
கவலை இன்றிக் கிடந்தேன்
கருவறைக்குள்

வெளிவந்தேன்
விழிதிறந்தேன்
அகல வாய்விரித்தது
அமைதியற்ற உலகம்

கண்ட நொடியே
கதறினேன் கலங்கினேன்
இனி தனிமை 
எப்போது வாய்க்கும் என

மறைந்து
எரிந்து கரைந்து போனால்தான்
புதைந்து சிதைந்து மட்கினால்தான்
தளிர்விடுமோ
தனிமை 

-கோ. மன்றவாணன்

கணவனோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தவள் 
கணவனை விட்டு பிரிந்து இயற்கையில் கலந்தாள்!

சோடிப் புறாவாக வாழ்ந்த அவர்கள் இன்று
தனித்த புறாவாக தவித்து வாடி வாழ்கிறான் !

குறிப்பு அறிந்து உதவி மகிழ்ந்த இனியவள்
கேட்காமலே அவன் தேவையைத் தந்தவள்!

அவன்  நிழல் கூட சில நேரம் பிரிவதுண்டு
அவள் அவனைவிட்டு எப்போதும் பிரிந்ததில்லை!

மனைவி இறந்தபின் கணவனின் வாழ்க்கை
மயான வாழ்க்கை தான் நொடியும் வதைதான்!

மனைவி இறந்ததும் கணவன் இறந்திட்டால்
மனதில் கவலைகள் வரவே வராது!

மனைவியை இழந்துவிட்டு நடைப்பிணமாக வாழும்
மோசமான வாழ்க்கை உணர்ந்தவர் அறிவர்!

மனைவிக்கு ஈடான உறவு உலகில் வேறில்லை!
மனையின் அழகு மனைவியால் வருவது!

சந்தனம் போல தன்னைத் தேய்த்து நாளும்
சிறந்த வாசனை தந்து மகிழ்வித்தவள்!

மெழுகு போல தன்னை நாளும் உருக்கி
முழு நிலவென குடும்ப ஒளி தந்தவள்!

ஏணியாக நின்று உயர்த்தி விட்டவள்
தோணியாக இருந்து கரை சேர்த்தவள்!

உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்தவள்
ஓய்வு என்றால் என்னவென்றே அறியாதவள்!

யாரிடமும் அவனை விட்டுக் கொடுக்காதவள்
யாதுமாக அவனுள் நிறைந்து இருந்தவள்!

காலத்தின் கொடுமை அவளை இழந்து
கண்ணில் கண்ணீருடன்  முதல் தனிமை !

- கவிஞர் இரா .இரவி

உயிர்க் கவிதைகள், அனாதை இல்லத்தில்
உலவி வரும் குழந்தைகள் தனி! ஒருதனிமை!
உயிர்க் குயிராய் வளர்த்தவள் தாய்! –அவள்
உலவுவதோ முதியோர் இல்லம்!
ஆறுதலாய் மகன் வந்து தன்னிடத்தே
அன்புமொழி பேசானோ! என ஏங்கும்
தாயின் சிறப்பை சாற்றாதார் யாருமில்லை!
தனித்த அந்த அபலைத்தாய் தனிமை!
  
கண்டதும் காதல் கொண்டது கோலம்
கருத்து மாறுபாடு வந்ததும் பிரிவர்!
கொண்டிருந்த அன்பின் அடையாளம் குழந்தை
குப்பைத் தொட்டியில் குழந்தை ஒரு தனிமை!
திவ்யா-இளவரசன், இவர் போன்ற இன்னும் பலர்
நேசித்து வந்த நிஜமான வாழ்வு
பொய்யாகி போக வினை செய்வார்கள்
பிரிந்தனர்,மறைந்தனர்,சிலர் தனித்தனியாவாழ்கிறார்
எண்ணற்ற தனிமை நினைக்க ,நினைக்க தெரியும்
அனாதை இல்லக்குழந்தைகள் தானே முதல்தனிமை                             

- கவிஞர். அரங்க.மணி, பராசக்திநகர்

தந்தை, தாயினைப் பிரிந்து அன்புள்ள உடன்பிறப்பைத் துறந்து
வந்த கணவனுடன் இணைந்து ஏகிடும் ஒருவகை தனிமை
தனித்துவத் திறமை பெற்று தலைமைப்பொறுப்பை ஏற்றதும்
அணியாய் இருந்தவர் பிரிந்து நண்பர்களை தியாகம் செய்து
தனிமையினை உணரும் ஒருவகை தனிமை ஒருவகையில்
தனித்தே நிற்கும் போது உணர்வோம் தனிமையினை
அணியினரை அப்புறம் பார்த்திடினும் எப்பபோது பார்த்தாலும்
அன்று ஏற்படும் உணர்வு ஒட்டவைத்தது போல்  ஒரு தனிமை!
பெற்ற பிள்ளையின் அன்புக்கு ஏங்கும் உற்ற தயின் தனிமை!
அருகில் வந்து பேச அன்புடன் ஏங்குகின்ற பாசத்தாயின் அவா!
கணவன் மனைவி ஏதோ காரணத்தால்பிரிந்து வாழும் தனிமை
அன்னை,தந்தயை இழந்து யாரோ கொண்டு வந்து சேர்க்க
அனாதை இல்லங்களை அடையும் பிஞ்சுக் குழந்தைகள்
கண்முன்  காட்சி தந்திடும் குழந்தைகள் தான் முதல்தனிமை
தனிமையில் கொடியது எது? கேள்வி எழுகிறது நமக்கு
காதலித்தவரை பிரித்து பிடிக்காதவரை கொல்லும் ஆணவம்
காதலனோ காதலியோ தனித்து விடப்படும் அவலம் ,தனிமை !
குப்பைத் தொட்டியில் போடப்படும்  குழந்தைகளின் தனிமை
யாராவது எடுக்கும் வரை அங்கே ஏற்படும் தனிமை கொடுமை
இத்தனை தனிமைகள், அனாதைகுழந்தைகள் முதல் தனிமை! . 

- கவிஞர் ஜி. சூடமணி

இரவில் அகல் விளக்கின்
சிறு வெளிச்சத்தில்
நினைவின் நீர்ப்பரப்பில் 
மூழ்கியெழும் போதும்
விழித்திருக்கும் போது
காணும் கனவுகளின்
உயிர்த்துடிப்புக்கள் 
குறைந்து வருகையிலும்
எண்ணங்களின் சாகரத்தில்
தீச்சுடராய் ஒளிரும்
ஒற்றை உருவினை
உணரும் தருணங்களிலும்

அகத்தனிமை நீளும்
மெய்க்கணமதில் நிலைக்க
மனம் உவகை கொள்ளும்
தனிமை ஓர் வரம்!

- உமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com