கடந்த வாரத் தலைப்பு ‘வாழ்வின் நிஜங்கள்’ - வாசகர்களின் கவிதைகள் பகுதி 2

நல்லவரும் கெட்டவரும் நமைச்சுற்றி இருப்பார்கள். பொல்லாரைத் தள்ளிப் புறமொதுக்கி வைத்திடலாம்
கடந்த வாரத் தலைப்பு ‘வாழ்வின் நிஜங்கள்’ - வாசகர்களின் கவிதைகள் பகுதி 2

வாழ்வின் நிஜங்கள்

பிறந்தோம், வளர்ந்தோம், மடிவோம்
பிறப்பின் நோக்கம் அறிந்தோமா?
உண்பதும், உறங்குவதும், தொடர்ந்தோம்,
உண்மையில் உழைப்பைக் கொடுத்தோமா?
மகிழ்கின்ற மனம்
பிறர் வாழக்கண்டு மகிழ்வித்து
மகிழ்ந்திட நினைத்தோமா?
இன்ப துன்ப சுகதுக்கங்கள்
கலந்திட்ட வாழ்வில்
இளமை, செல்வம், அழகு, உடல்
யாவும் நிலையாமோ?
ஆசை, கோபம், பொறாமை
எண்ணங்கள் அழிந்து!
அன்பு, கருணை, இரக்கம் மேலும்
நல்லெண்ணங்களை வளர்த்தோமா?
செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டோமா? 
வாழ்வில் செய்யக் கூடாததை செய்தோமா?
வாழும்போதே வலிகள், கவலைகள் உள்ளத்தை
வறுத்தெடுக்க, வாழ்வில் கவலைகள் தீருமோ?
வாழும்போது நமக்கு எது மிச்சம்?
வாழ்ந்தபின்னே எது நிலையானது?
வறுமையும், நோயும் நமக்கு வேண்டாம் 
இயற்கையோடு இணைந்த வாழ்வும்
கள்ளம், கபடமற்ற குழந்தை மனத்துடன் 
வாழ்வை வாழ்ந்திடவேண்டும். 
நடந்ததை மறந்து, நடப்பதை நினைத்து 
ஜீவனுள் அகவொளியைத் தேடுவோம்
நல்லெண்ணம், நல்லறிவுடன் வாழ்வில்
வளத்தைக் காண்போம்.
வந்தது, வருவதற்கிடையில் வாழும்
வாழ்வே நிஜம், வாழ்வே சுகம்
வாழ்வதே நிஜம், இயற்கையின் இயல்பில்
வாழ்வதே வாழ்வின் நிஜங்கள்

- ஏ.கே.சேகர், ஆகாசம்பட்டு

**
வாழ்வில் நிகழும் அத்தனையும் 
நம் நினைவில் வைக்க முடியாதே! 
சுழலுகின்ற உலகத்தில் சில
நிகழ்வு மனதை விட்டு அகலாதே! 
 இரவில் கண்ட கனவு எல்லாம் 
விடியல் சென்று அடையாதே! 
இன்பங்களை அள்ளி வைக்க 
ஒரு கோப்பை இங்குக் கிடையாதே! 
துன்பங்களை அள்ளி இரைத்து
வாழ்வைத் தொடர முடியாதே! 
பல தோல்வி காணா பாதம் 
என்றும் வெற்றி காண முடியாதே! 
நீர் நிறைந்த இடமெல்லாம் 
மீன்கள் காண முடியாதே! 
சுயநலமாய் வானுமிருந்தால் என்றும்
பூமி பசுமைக் காண முடியாதே! 
வாழ்வின் பொருள் அறிந்திருந்தால்
பேராசை இங்குக் கிடையாதே! 

- பவித்ரா ரவிச்சந்திரன், மதுரை

**

நிழலும் நிஜம் தான், சூரியன் மேலிருக்கும் வரை! 
நினைவுகள் நிஜம் தான், உடலில் உயிர் இருக்கும் வரை!
வாய்ப்புகள் நிஜம் தான், தேடல் உள்ளவரை!
வெற்றி நிஜம் தான், மனதில் உறுதி உள்ள வரை!
வார்த்தை நிஜம் தான், நோக்கம் நல்லதாக உள்ளவரை!
அன்பு நிஜம் தான், இரு மனம் இணைந்து இருக்கும் வரை! 
வாழ்வு நிஜம் தான், நாம் மண்ணில் உள்ளவரை! 

இருக்கும் வாழ்வை அன்பால் வாழ்வோம்!
இணக்கம் கொள்வோம்!இன்புற்றிருப்போம்! 

- இனிய தமிழ் செல்வா, நெல்லை

**

நேற்று இருந்தவர் இன்றில்லை
நாளை நடப்பது முன்பே தெரிந்தவர் ;
இல்லை;  தெரிவதும் இல்லை.
இங்கே எதுவும்;  நிரந்தரமில்லை
வாழும்வரை;  வாழும்தரையில், அன்போடு;
நல்ல பண்போடு, மனிதனாக;  புனிதனாக வாழ்வதுதான், வாழ்வின்-நிஜங்கள்

- களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்

**

அப்பாவை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கு 
அழைத்து வந்தேன் அவரின் இசைவோடு
அப்பாவிற்கு முதியோர் இல்லத்தில் வசதிகளை
ஆக்கித்தர நான் முயன்றேன் ஒவ்வொன்றாய்
நான் சொல்ல அவரும் வேண்டா மென்றார்
அப்பாவுக்கு  படுக்கை வசதியோடு ஏசி,ஈசிசேர்
தனியாக உணவு  அவர் விரும்புகின்ற உணவு
முடிந்தது எங்களின் ஒப்பந்தம், அப்பாவை தேடினேன்
முன்புற ஓருவருடன் சகஜமாய் பேசிக்கொண்டிருந்தார்
ரொம்பவும் சுவாஸ்யமாய் பேச்சு, ரொம்பப்பழக்கமோ!
முன்னிருந்த விடுதியின் பொறுப்பாளரிடம் கேட்டறிந்தேன்
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒருகுழந்தையை
இங்கிருந்து எடுத்துச்சென்றுள்ளார் என அறிந்தேன்
அந்த குழந்தை யார் என நான் கேட்டேன்
என் வாழ்வின் நிஜம் எனக்கு இனிதே புரிந்தது!    

- கவிஞர் அரங்க.கோவிந்தராஜன், ராஜபாளையம்  

**
வாழ்வின் நிஜங்கள் எங்களுக்கு குழந்தைப்
   பருவத்திலேயே முடிந்து விடுகின்றன
வாழ்வின் குறிப்பிட்ட பருவத்திற்கு பின்னால்
   பொய் முகங்களை மாட்டிக்கொண்டுவிட்டோம்

பொய் முகங்களை சுமந்து கொண்டு நாங்கள்
   பூவுலகில் சுமையாய் வாழ்கின்றோம்
வாய்த்தவரை கைப்பித்து, “ யார்? எப்படி! ஆள்! ‘
    யாரெனப் பாராது புதியவ்ருடன் ஒரு பயணம்

“ நீ சிரித்தால் சிரிப்போம்! நீ அழுதல் அழுவோம்
    ரசிக்கசொன்னால் ரசிப்போம் செயற்கையாய்
 நீ அனுமதிததால் அப்பா,அம்மாவிடம் பேசுவோம்
 நாங்கள் சமூகக்கோட் பாட்டில் நாங்கள் ஒருவிதம்”
   அடிமைகள்! நவின ரக அடிமைகள்! என் வாழ்வின்
 நிஜங்கள் என் மனம் எனும் திரையில் வந்து வந்து போகும்! சிலசமயம்

- கவிஞர் சூடாமணி, ராஜபாளையம்  

**

நிஜத்தைத் தேடி
நெடுந்தூரம் வந்துவிட்டேன்
நிலம் 
நீண்டுகொண்டே இருக்கிறது

நேற்று மெய்யென மிளிர்ந்தது
இன்று
இருட்டுக்குள் பதுங்குகிறது பொய்யென

மெய்யெது பொய்யெது போட்டியில்
கலந்துகொள்ளும்
கடவுளும் தோற்றுப் போகிறான்

பிறப்பதற்கும் இறப்பதற்கும் இடையில்
மறைத்து வைத்த புதையலைத் தேடி
அலைந்து களைப்பதல்லால்
அறியேன் வேறொன்றும் 

விட்டு விடுதலை ஆகிவிடும்
உயிர்ப்பறவை
நிஜத்தை
நெருங்கும் தருணத்தில்

- கோ. மன்றவாணன்

**

வெட்டுங்கள்  குளமென்றால்  வெட்டி  டாமல்
    வெட்டாதீர்  எனும்மரத்தை  வெட்டு  கின்றார்
கொட்டுங்கள்  குப்பையெனும்  இடத்தை  விட்டுக்
    கொட்டாதீர்  எனும்தெருவில்  கொட்டு  கின்றார் !
நட்டிடுவீர்   செடியென்றால்  நட்டி  டாமல்
    நட்டுகல்லை  விளைநிலத்தை  விற்கின்  றார்கள்
திட்டங்கள்  தீட்டுவோரே   திருடிச்  செல்லத்
    திருடரினைப்  பிடிக்காமல்   புகழ்கின்  றார்கள் !

உழைத்துவரும்  பணம்தன்னில்  உண்டி  டாமல்
    ஊரேய்த்தே   உண்டியலில்  கொட்டு  கின்றார்
பிழைப்பதற்கே    ஆயிரமாய்   வழியி  ருக்கப்
    பிறர்முதுகில்   ஏறுதற்கே   முனையு  கின்றார் !
உழைப்பதற்காய்   இருக்கின்ற   கையி  ரண்டில்
    உழைக்காமல்  இரப்பதற்கே  நீட்டு  கின்றார்
கழைக்கூத்தே   வாழ்க்கையென்  றறிந்தி  ருந்தும்
    கற்காமல்  வேடிக்கை   பார்க்கின்  றார்கள் !

பிறர்மீது  பழிசுமத்தித்  தம்மு  டைய
    பிழைகளினைத்  தெரியாமல்  மறைக்கின்  றார்கள்
அறத்தால்தான்   வரும்இன்பம்   என்ற  றிந்தும்
    அநீதித்தீ   சுகமென்றே   வீழு  கின்றார் !
புறம்பேசிப்  பொறாமையை   மனத்தி  ருத்திப்
    புகழ்வோர்க்கே   செவிமடுத்து  மயங்கு  கின்றார்
திறமையினை   மதித்திடாமல்  காலைக்  கையைத்
    தினம்பிடிக்கும்   போலியையே  வாழ்த்து  கின்றார் !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**
பணமிருந்தால் நல்வாழ்வு வருமென்ற நினைப்பும்
குணமிருந்தால் கோயில் கோபுரம் ஏறலாமென்பதும்
ரணமாகும் நெஞ்சம் இவற்றின் நிலை மாறும்போது
கிணற்றில் விழுந்த கல்லாகும் வாழ்வின் நிஜங்கள்

அழகிய மனைவி வாய்க்கும்போது மனம் நினைக்கும்
கிழக்கின் சூரியனாய் வாழ்வு மெல்ல ஒளிவிசுமென
முழக்கும் முரண்கள் முன்வந்து நின்று கூத்தாடிட
வழக்கும் வாய்தாவுமே வாழ்வின் நிஜங்களாகுமே

ஓங்கி உயரும் அறிவும் ஆற்றலும் கைவசமிருந்திட
ஏங்கிய பதவிகள் படியேறி வருமென்ற நினைப்புகள்
தூங்கிய மனிதனின் செவிகளை எட்டாத நிலையாக
வாங்கிய கையூட்டு இடைவந்து நின்று தடுக்குமே

சாதி இரண்டொழிய வேறில்லை எனச் சாற்றுவார்
வாதியாகி வளமான வாழ்வுக்குத் துணை நிற்பார்
நாதியற்றுப் போகும் அவை சுயநலச் சேற்றிலே
வீதியில் எறிவார் பேசியதை வாழ்வின் நிஜமாகவே

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

உலகில் 
ஜனனம் மரணம்
விண்ணும் மண்ணும் 
இயற்கைத் தோற்றங்கள்  
வாழ்வின் நிஜங்கள்!

வாழ்வில் 
எண்ணங்கள் நினைவுகள் 
நினைக்கும் எண்ணங்கள் 
நிறைவேறினால் 
வாழ்வின் நிஜங்கள் ! 

சந்திக்கும் 
இன்பங்கள் துன்பங்கள்
விருப்புகள் வெறுப்புகள் 
சிந்தித்துப் பார்த்தால் 
வாழ்வின் நிஜங்கள்!

கற்பனைகள் கவலைகள்  
காதல்கள் மோதல்கள் 
பழக்கங்கள் வழக்கங்கள் 
வாழ்வின் நிஜங்கள் !

சிந்தனைகள் நிந்தனைகள்  
உறவுகள் பிரிவுகள் 
உண்மைகள் பொய்கள் 
வாழ்வின் நிஜங்கள் !

துடிப்புகள் நடிப்புகள் 
படிப்புகள் படிப்பினைகள் 
நம்மிடையே இருக்கும் 
நம்முள்ளே விளையாடும்     
வாழ்வின் நிஜங்கள் !

- பொன்விலங்கு பூ.சுப்ரமணியன், ஸ்ரீவில்லிபுத்தூர்

**

வழிந்தோடும் பொழுதுகள்
நீரலையாக
சுழலிற்கு மாட்டாது ஆழத்தில்
மூழ்கும் நினைவுகள்
மீன்களாய் துள்ளி எழும் எண்ணங்களாய்,

வண்ணமிலா
வான் வெளியை ஊதாவாயும், நீலமாகவும் 
வரைந்து மூழ்குகிறார்கள்
கற்பனையில், கவிஞர்களும் ஓவியர்களும்,

தூரிகைக்கும் காரிகைக்குமாய் 
மனம் மாய்ந்து திமிற
நாளைய செய்தி
தர வேண்டி நிருபரும், 
புதிதாய் யோசிக்க 
உதவி இயக்குனரும், போராட 
அடுத்த வேளை உணவிற்கும் 
ஒரு நாள் கூலிக்கும்
காத்திருக்கும் சனங்கள்
முச்சந்தியில் இருக்கவே செய்கிறார்கள்,
கார்மேகமாயும்
காய்ந்த பூமியெனவும், 
மழை வராமலும் வந்தும் கெடுக்கிறது
விவசாயத்தையும்
அன்றைய பிழைப்பையும் .

நிஜம் தேடி துரத்தித் திரிய
உறவுகளும் உணர்வுகளும்
ஒடும் காலத்தில் 
ஒதுங்குகிறார்கள் 
கரையற்ற நதிதோறும், 
கரை ஏற விடாமல் 
முதலையாய் ஆழத்தில் இழுக்கிறது
சுழன்றடிக்கும் சூழல்
கழன்று கொள்ள முடியாதுதான் போகிறது 
எவராலும்

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**
பொய்களொடு நிஜஙகளும் பின்னியதே வாழ்க்கையாகும்.!
             பகுத்தறிவு கொண்டதனைப் பிரித்தறிய வேண்டுமன்றோ.!
மெய்யொன்றே மிகைப்படுத்தி மெய்யானத் தத்துவத்தை
             மிகவுரைத்தார் போதனையாய் மெய்ஞான யோகியரும்.!
செய்கையிலே நேர்மறையே சீராகக் கொண்டுசென்று
             செயலாற்ற வாழ்விலதைச் சிந்தையிலே ஏற்றவேண்டும்.!
உய்விடமொன் றனைவருக்கும் உண்டென்று தெரிந்தாலும்
              உனக்குமதில் தனியிடமாய் ஒன்றுண்டு எங்கேயோ.!

எத்தனைய நீதிகளாம் எத்தனையோ கொடுமைகளாம்
          எல்லாமே இவ்வுலகில் என்றுமென்றும் அரங்கேறும்.!
அத்தனையும் தாங்கித்தான் அன்னைபூமி நடக்கின்றாள்
          ஆதரவாய் மனிதருக்கே அரவணைப்பும் தருகின்றாள்.!
புத்தர்போல் காந்திபோலப் போன்றபலர் தோன்றிடினும்
          புவியிலின்னும் மாறவில்லை பொங்குகின்ற தீமைகளே.!
உத்தமர்கள் நிஜங்களாக உதித்தபின்னே! வாழ்க்கையிலே
          ஒளிவிளக்கு ஏற்றபலர் உலகிலின்னும் தோன்றவேணும்.!

எண்ணியவை எத்தனையோ ஏற்றங்கள் பெற்றததில்
             எண்ணிக்கை மிகக்குறைவே எல்லாமும் ஏமாற்றும்.!
விண்மண்நீர் காற்றுவானம் விலக்கல்ல இயற்கையுமே
            விதிவசத்தால் தப்பிக்க வழியில்லாமல் அல்லாடும்.!
நண்ணியபோ தேநடுங்கும் நம்முடலும் நம்மனமும்
            நிலையில்லா வாழ்வினிலே நிஜம்கூட நிலைபெறாது.!
புண்ணியங்கள் பலசெய்தும் பொய்யின்னும் போகாது
            பாருலகில் எப்போதுமே பதற்றம்தான் மாறவில்லை.!

- பெருவை பார்த்தசாரதி

**

குட்டி குழந்தையாய் கூடி கும்மாளமிட்டது நிஜம்
பொட்டு மழலையாய் பூரித்து நின்றது நிஜம்
சிட்டு சிறுவனாய் சிறகடித்து மகிழ்ந்தது நிஜம்
வெட்டி இளைஞனாய் காதலித்து களித்தது நிஜம்
திக்கு அற்றவனாய் திசைமாறி அலைந்தது நிஜம்
கல்யாணம் கண்டவனாய் கண்பிதுங்கி நின்றது நிஜம்
பருவம் வந்தவனாய் பக்குவம் பெற்றது நிஜம்
பக்குவம் பெற்றவனாய் பட்ஜெட்போட்டு வாழ்ந்தது நிஜம்
தகப்பனாய் தலையில் சுமந்தது நிஜம்
மூத்தவனாய் முதியோர் இல்லம் சென்றதும் நிஜம்

- ஆர்.ராமலிங்கம்

**

நம்
வாழ்வியல் தூரங்களை
வார்த்தைகள்
உறவுகளாய் இணைக்கின்றன

நெருங்கி நெருங்கி வர
தூரமாக்குவதில் 
வல்லமைக் கொள்கின்றன
மவுனங்களின் மனங்கள்

வாழ்வில்
நெருங்கி வருவது நிஜமா?
தூரமாகிவிடுவது நிஜமா?

புறமும்  அகமும்
வினாக்கள் எழுப்புவதால்
ஆழ்மனத்தின் சுயநலம்
அரூபமாய் இருக்கிறது?

மெய்மையையும் பொய்மையையும்
முரணாக 
அலங்கரித்துக் கொள்வதிலிருந்து விடுபடவில்லை
உதடுகளும் கண்களும்

உதட்டில்
புன்னகை பூக்க வைத்து
விழிகளில்
அருவிகளை  வார்ப்பதில்
நிஜத்திற்கு மட்டுமல்ல
நிழலுக்கும் வாய்த்ததுதான்

என்றாலும்
வாழ்வில் நிஜங்கள்
யாதென அறிய
துழாவுகையில் தெரிகின்றன
முகமூடிகள் அணிந்து கொண்டு
சாகச வரிசைகளில்
சந்நிதான ஈர்ப்புகளில்
முகமூடியை
கழற்றி அணிந்து கொள்வது
தானுமென்று...

எனினும்
மயான வேலியில் கூட பூக்களாய்
மலர்ந்து
இருக்கத்தான் செய்கின்றன
நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும்
மழையாக...

- கவிஞர்.கா.அமீர்ஜான்

**

ஞானியின் பார்வையில்

நிழல் நிஜமாகிறது
நிஜம் நிழலாகிறது

காதலும் மோதலும் நிஜம்
காதலியும் கல்யாணமும் நிழல்

கல்வியும் கலையும் நிஜம்
கல்லூரியும் கலைஞனும் நிழல்

பசியும் பட்டினியும் நிஜம்
பணமும் பதவியும் நிழல்

பக்தியும் பயமும் நிஜம்
கல்லும் கருப்பும் நிழல்

ஆண்மையும் பெண்மையும் நிஜம்
ஆணும் பெண்ணும் நிழல்

அறிவும் ஆற்றலும் நிஜம்
எண்ணும் எழுதும் நிழல்

உதவியும் உழ்வினையும் நிஜம்
உற்றாரும் மாற்றாரும் நிழல்

ஆம்
உயிர் மெய் உடம்பு பொய் 

- ஜோதி சுனிதா

**

அறுசீர் விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

வாழ்ந்து பார்ப்போம் என்றுநினை;
வசந்த காலந் தேடிவரும்!
வாழ்வே மாய மெனவுணர்ந்தால்  
வஞ்ச நெஞ்சம் நிலைக்காது!
வாழ்வின் நிசங்கள் புரிந்துவிட்டால் 
வந்த துன்பம் ஓடிவிடும்!
வாழ்வா சாவா என்றிராமல் 
வளங்கள் பெற்று வாழ்ந்திடலாம்! 

– வ.க.கன்னியப்பன்

**

வாழ்வின் நிஜங்களுக்குள் வாழத்தான் வேண்டும் நாம்.
தாழ்வு வரும் துன்பம் தலைதூக்க முடியாது
ஆழ அமுக்கும் அனைத்தையும் சமாளித்து
ஊழ்வினையோ வென்று உருக்குலைந்து சோராமல்
உழைப்பாலுயர்ந்து உறுதியுடன் நின்று
வாழ்வின் நிஜங்களுக்குள் வாழத்தான் வேண்டும் நாம்.

நம்பிக்கைத் துரோகம் நயவஞ்சகம் தீமை
எம்பி எழும்பவிடா எதிரிகளின் சதிகள்
கோள் பொய் பொறாமைகளின்
குதறல்கள் என்று பல
வாழ்வின் நிஜங்களுக்குள்
வாழத்தான் வேண்டும் நாம்.

நல்லவரும் கெட்டவரும் நமைச்சுற்றி இருப்பார்கள்.
பொல்லாரைத் தள்ளிப் புறமொதுக்கி வைத்திடலாம்
உள்ளத்திற் தூய்மை உடையோர் தம் வாய்மையிலே
கள்ளத்தனம் இல்லார்  கயமையிலார்  என்று பல
அன்பாலுயர்ந்த அறவோரை நம்முடைய
நண்பராய்ச் சேர்த்து நாமினிது வாழ்ந்திடலாம்.
என்றாலுமஃது எளிதான காரியமா?.

சொந்த மென்றும் சுற்றமென்றும்
சொல்பவர்களிற் பலபேர்
இந்தவுலகில் எமக்குத் துரோகிகளாய்
வந்து விடக்கூடும் வாழ்க்கையிலே, அன்னவரை
எந்த வகையில் எடுத்தெறிந்து போடுவது?
அந்த உறவுகளை அறுத்தல் எளிதாமோ!
வந்துவிட்டோம் இவ்வுலகில்
வாழத்தான் வேண்டும் நாம்.
வாழ்வின் நிஜங்களுக்கு யார்தான் விதிவிலக்கு.

- எஸ். கருணானந்தராஜா

நிலைகண்ணாடியின் முன்
பதின்வயதில் பார்த்த முகம்
இளமையின் நீர்த்துளியுடன்
நினைவலைகளில் மிதக்கிறது
முதல் நரையின் கதை
சொல்லி காலம் கண் சிமிட்டுகிறது
பிறப்பிற்கும் இறப்பிற்குமான
நெடுவழிப் பயணத்தின்
வாழ்வின் நிஜங்கள் எல்லாம்
நிகழ்த்திக் காண்பிக்கிறது
ஆயிரமாயிரம் மாயங்களை!

- உமா பார்வதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com