கடந்த வாரத் தலைப்பு ‘முதல் தனிமை’ - வாசகர்களின் கவிதைகள்

கட்டவிழ்த்த காளையல்லகட்டுப்பாடற்ற மனிதனுமல்ல
கடந்த வாரத் தலைப்பு ‘முதல் தனிமை’ - வாசகர்களின் கவிதைகள்

கட்டவிழ்த்த காளையல்ல
கட்டுப்பாடற்ற மனிதனுமல்ல
கடற்கரையின் ஓயாத அலைகள் போல
காற்றுக்கும் அலைகளுக்குமான தொடர்பு போல,
மனதில் தோன்றி அழியும் பல எணணங்கள்!
முதன் முதலில் ஏற்பட்ட தனிமையே 
எனை ஞானியாக்கியதோ?
கவனமும், மன உறுதியும், நிதானமும்
வழங்கும் இறைவா!
நான் இதைத்தான் பிரார்த்தனை செய்கிறேனா?
மலரென உள்ளுணர்வு விழித்தெழுகிறதா?
அமைதியும், மெளனமும் உள்ளுள் உறைகிறதா?
தீமைகள், தவறுகள், அறியாமைகள் உட்பட்ட
'நான்' என்ற எண்ணங்கள்
மெளனத்தில் கரைகிறதா?
என்னுள் ஆழ்ந்த பொருளை இதயத்தின் ஆழத்தில்
உணர முடிகிறதோ? 
இங்கே நான் எதைக் கற்றுக் கொள்கிறேன்?
மோனம் ஏகாந்தமோ? அது இனிமையானதோ?
ஆசை, காமம், மோகம் தொலைந்தபடி
தனிமை எனும் தவத்தால்
வாழ்வின் புரிதலை மெளனத்தின்
பயணங்களோடு மீட்டெடுக்கிறேன்!
தனிமை தவம், தவமே தனிமை!

- ஆகாசம்பட்டு கி.சேகர்

பணிமாற்றம் பழகிய அப்பா
பணம் கட்டி ரசீதை
வாங்கி விடைபெற்றார்
நான் பாத்துக்கறேன் என்று சொன்ன
அப்பாவின் ஆசிரிய நண்பர் 
வேறு வகுப்புக்கு போய்விட்டார்

நீண்ட சிமென்ட் வழியும், 
உடைந்த ஜன்னல் வழி தெரியும் 
பெரிய மைதானமும் பார்த்தபடி
எனக்கான பெஞ்சை 
தேர்வு செய்து உட்கார்ந்தேன்
கூடவே  உட்கார்ந்திருந்தது
மாற்றலில் 
என்னுடன் வந்த 
முதல் தனிமை.

 - டோட்டோ 

மரகதந் தரித்த
மண் மகளின்
குணமிகு கொண்ட
குமரி களின்
ஏகாந்தந் தவிர்த்து
காந்தமாயி ணைத்து
சரிநிகர் சமத்துவம்
சரியாய் தந்து
ஆச்சாரம் பகரும்
ஆச்சரிய மென்று
மெஞ்ஞானம் பரப்பும்
மெய் வாலை யென்று;
பூப்பதும் காய்ப்பதும்
பெண்மையி னியல் பென்று
பூரிப்பு முப்பும்
பெண்மையி னிலக்கணம்;
இயற்கையும் பெண்மை தான்
இயல்பினி லொன்றுதான்
இடும்பைக் குறைத்தால்
கரும்பா யினிக்கும்
கரும்பாய் நினைத்தால்
காவிரி பொங்கும் - அடுத்தது
பெண்ணும் மண்ணும்
புவியின் சொத்து
புரிந்து பார்;
புகழு முன்னை
பாதுகாப்பாய்
கடைசி வழியாய் - இராமன்
கணை தந்த வழியாய்.......

- முகில் வீர உமேஷ், திருச்சுழி

முதல்தனிமை தான்நம்மின் வாழ்வினில் காணும்
       முத்தான நாளதனை மறக்கத்தான் தகுமோ?
இதனைப்போல் இனிதான நாளேதும் இல்லை
        இல்லறத்தின் தொடக்கமதும் இன்னாளில் தானே!
பதமான இளஞ்சூட்டுப் பாலுடனே நுழையும்
         பாவையவள் வருகையதே வசந்தத்தின் தொடக்கம்!
விதம்விதமாய் இனிப்புக்கள் தனைகண்டப் போதும்
         வேல்விழியாள் இதழூற்றுக் இணையாகத் தகுமோ?

கமழ்கின்ற முல்லைமல்லிச் சரங்கள் தொங்க
       கட்டிலிலே வண்ணமலர் எங்குமே நிறைய
தமக்கெனவோர் துணையெனவே வந்தவளின் வரவை
       தவிக்கின்ற உள்ளமுடன் எதிர்பார்த் திருக்கும்!
அமைதியான இரவுக்கோ ஆயிரமாம் மணிகள்
       அவள்வந்தப் பின்னாலோ அரைமணிதான் பொழுதும்!
நமதுமண வாழ்வினிலே மறக்கவுமே ஒண்ணா
        நல்லறத்தைத் துவக்கும்நாள் புனிதநன் நாளே!

- அழகூர். அருண்.  ஞானசேகரன்

தனிமை  - அது  புத்திசாலிகளுக்கு 
இனிமை தரும் தருணம்!
இதில்...
முதல்  தனிமையில் பல 
முதன்மையான  செய்திகளை 
பதமாக  படித்து  உணரலாம்!
முதல்  தனிமையில்  கிடைக்கும்
முதல்  அனுபவம் இனிமையாயின் 
மேமேலும் தேடுவாரே 
முதல் தனிமையினை!
காதசிரியனுக்கு கிடைக்கும் 
முதல்  தனிமையில் எழுதி 
 விடலாமே  பயன் 
தரும்  நீதிக்கதைகளை!
கவிஞனுக்கு  கிடைக்கும் 
முதல் தனிமையில்  எழுதி
விடலாமே.... அர்த்தமுள்ள  கவிதையினை!
தனிமை கொடுமை 
என்பது மூடர்களின்  சொல்!
முதல்  தனிமையில் நல்ல 
அனுபவங்களை  பெற்றுவிட்டால் 
தேடுவார்  அடுத்தடுத்து 
தனிமை  பொழுதினை!
தனிமையினை  இனிமையாக்குவது
மனிதனே,........ உன் கையில்தான்!
இதை  உணர்ந்து  கொண்டாடு 
முதல்  தனிமையினை! 

- உஷாமுத்துராமன்,  திருநகர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com