கொஞ்சி விளையாடும் கோபம்: கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

யாரென்றும் “எதுவென்றும்”எண்ணி டாது
  எப்போது வருமென்று தெரிந்தி டாது
ஊரென்றும் உறவென்றும் பார்த்தி டாது
  “உண்மைக்குள்” போய்ப்பார்க்க நினைத்தி டாது
நேராக நின்றெதையும் கேட்டி டாது
  நினைவாலே பகுத்தென்றும் பார்த்தி டாது
வாராத விருந்தென்றே வந்து கோபம்
  வழக்காடி “விளையாடும் கொஞ்சிக்” கொண்டு

அன்பின்றி “ஆத்திரமே”கொள்ளும் தள்ளும்
  அனைவரையும் மதிக்காது பேசி தீர்க்கும்
கண்பார்த்த பார்வைதான் உண்மை என்று
  கருத்தாலே பார்க்காது “தீர்ப்புச் சொல்லும்”
என்போலே மண்மீதில் எவரும் உண்டோ
  என்றேதான் இறுமாப்பாய் வார்த்தை கொட்டும்
வென்றிடுவேன் எனக்கிங்கே என்ன இல்லை
  எனக்கோபம் “விளையாடும் கொஞ்சிக்”கொண்டு

ஆறறிவு என்றில்லா “பிறவி போலே”
  அலைந்திருக்க வைத்துவிடும் கோபம் என்றும்
கூறறிவு கொண்டோரின் பேச்சைக் கேளா
  குறிப்பறிந்து சொல்வோரின் பக்கம் போகா
“பேறறிவு கொண்டதுபோல்”மனதில் கோபம்
  பிரியமுடன் “விளையாடும் கொஞ்சிக்” கொண்டு
மாறிவிட மனமதிலே எண்ணம் வேண்டும்
  மகிழ்வென்றால் “சினம்மாற்றும்” திண்ணம் வேண்டும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com