கடந்த வாரத் தலைப்பு ‘நாட்குறிப்பு எழுதிய நாட்கள்’வாசகர்களின் கவிதைகள் 

கேட்டதை,பார்த்ததை, படித்ததை, ரசித்ததை, உள்ளமது களித்ததை, கனவில் கண்டதை
கடந்த வாரத் தலைப்பு ‘நாட்குறிப்பு எழுதிய நாட்கள்’வாசகர்களின் கவிதைகள் 

நாட்குறிப்பு எழுதிய நாட்கள்

நாட்குறிப்பு எழுதிய நாட்கள் மிகவும் குறைவு 
நாட்களில் மகிழ்வானவற்றை குறித்து வைத்தேன் !

தினமும் எழுத வேண்டும் என்ற ஆவலில் 
தன்னம்பிக்கையுடன் தொடங்கினேன் !

சோம்பேறித்தனத்தில் எழுதவில்லை தினமும் 
சோம்பலே காரணமானது எழுதாதற்கு !

அடுத்த வருடம் முதல் தினமும் எழுதுவேன் 
அடுத்த அடுத்த சபதம் கடைபிடிக்கவில்லை !

ஒவ்வொரு வருடமும் எழுதாமல்  கழிந்தது 
ஒரு வருடமாவது தினமும் எழுதிட வேண்டும் !
 
நாட்குறிப்பு தினமும் எழுதுவது நல்லது 
நாடறிந்த அறிஞர்கள் பலர் தினமும் எழுதுவர் !

நினைவாற்றல் இல்லாதவர்களுக்கு என்றும் 
நினைவூட்ட துணை நிற்கும் நாட்குறிப்பு !

மறக்க கூடாதவற்றை நினைவூட்டும் 
மறதி நோய் தீர்க்கும் மருந்தாகும் !

கவிஞர் இரா .இரவி

*

கடந்து போனக் காலத்தின் சுவடுகள் 
காய்ந்து போகாமல் காத்து மீட்டு 
எதிர்காலம் ஏந்தும் எண்ணங்கள் அதனிலும்  
எழுத்துக்களின் பிம்பம் வழிந்திட வைத்திடும்! 

நீளும் கனவுகளும் நெஞ்சின் ஆசைகளும் 
ஆளும் மானிட வாழ்வின் சாட்சிகளாய்
நாளும் நகர்ந்து செல்லும் சணிகம்
நம்மை நமக்கே அறிமுகம் செய்திடும்!

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் 
நடுநிசி வேளைவரை நடந்திடும் நிகழ்வுகள்
அழுதிடும் அவலமமும் ஆனந்த கிளர்ச்சியும் 
எழுதிட ஏதுவாய் எத்தனிக்கும் நாட்குறிப்பும்!

நாட்குறிப்பு எழுதிய நாட்கள் நம்முள் 
நனியாய் நினைவுச் சிறகுகளை விரித்திடத்  
தனிமை வாழ்வின் தவறும் சரியும்
தாளில் தானாய்க் கல்வெட்டுகளாய் வடியும்!    
      
- கவிஞர். மு. திருமாவளவன் 

*

நெஞ்சில் நேசம் மட்டும் சுமந்து
வஞ்சியையே எண்ணி வலம் வந்த நாட்கள்
கொஞ்சிப் பேசுவதை தூரத்தில் கண்டு
அஞ்சியபடி வீடு சென்ற நாட்கள்!
எங்கும் அவள் என்று
ஏங்கும் மனம் அமைதிப்படுத்தி
தூங்கா இரவுகளில் 
தாங்கா பாரத்தை
நாட்குறிப்பில் இறக்கிவைத்து
நறுமுகையை நினைத்தவாறே
மொட்டைமாடியில் 
மெதுவாகத் தவழும் மேகங்களின் ஊடே
தலைகாட்டும் நிலவு எழிலா
தலைவியின் முகம் எழிலாவெனப்
பட்டிமன்றம் மனதில் வைத்து
பாவையின் நினைவுகளுடன் உறங்கிய நாட்கள்!
நாட்கள் நகர்கின்றன இப்போதும்
நாட்குறிப்பேடு மட்டும் பரணில் ஏதோ மூலையில்!

கவுதம் கருணாநிதி, திருச்சூர், கேரளா

*

வாழ்க்கையை திரும்பி பார்க்க
ஒரு வாய்ப்பு

செய்த தவறுகளை திருத்திக் கொள்ள
ஒரு வாய்ப்பு

மறந்தவைகளை திரும்பிப் பார்க்க
ஒரு வாய்ப்பு அளிக்கின்றது - நாட்குறிப்பு 
எழுதிய நாட்கள்

ஆனால் நாட்குறிப்பை திருப்பி 
பார்க்க வாய்ப்பில்லை - இயந்திரத்தனமான 
இந்த வாழ்க்கையிலே

நாட்குறிப்பு எழுதிய நாட்களையே 
திரும்பிப் பார்க்க நமக்கு நேரமில்லை - ஆம்

திரும்பி பார்க்கும் தருணத்திலே
நம்மை கீழே தள்ளிவிட துடிக்கும் - இச்சமுதாயம்

அதனால் திரும்பிப் பார்க்காமல் - மேலே மேலே
செல்ல வேண்டுமென்று - தவறான பாதையில் 
செல்லத் துடிக்கின்றோம்

ஆசைகள் விடாது துரத்துகின்றன - ஆசையின் விளைவால்
இச்சமுதாயத்தில் மற்றவர்களால் துரத்தப்படுகின்றோம்

அதனால் நாட்குறிப்பு எழுதிய நாட்களை திரும்பிப் பார்ப்போம்
நாட்குறிப்புகளை திருப்பிப் பார்த்து நம் தவறுகளை திருத்திக் கொள்வோம்

நாம் மறந்தவைகளை நினைவு கொள்வோம் - இச்சமுதாயத்தில் ஏற்றமிகு 
நல்ல பாதையில் செல்ல நாட்குறிப்பு எழுதிய நாட்களை நினைத்துப் 
பார்ப்போம்.

ஆம்பூர் எம். அருண்குமார்.

*

நல்லவை செய்திட நாளெல்லாம் இனிக்கும் – அவை
நாட்குறிப்பில் பொன்னெழுத்தாய் ஜொலிக்கும்!
அல்லவை மனதில் கிடந்தால் அலைபாயும் – மனம்
அலைபாய்ந்திட நிம்மதியும் தொலைந்திடும்!
சொல்லினிமை செயலினிமை சேர்ந்திட – வாழ்வு
செழித்திட சுற்றங்கள் நம்மை வாழ்த்திடும்!
வெல்லம்போல் இனித்திட வேண்டுமெனின் – நாம்
வெள்ளைமனத்தோடு உலவிட வேண்டும்!
வல்லவனாய் வாழ்ந்தால் நாடே புகழும் – என்றும்
நல்லவனாய் வாழ்ந்தால் நாட்குறிப்பும் புகழும்!
இல்லாமை இருந்திட்ட போதிலும் வாழ்வில் – முகம்
இனிமையாய் இருந்திட வாழ்வாங்கு வாழ்வுதானே!

கவிஞர் கே. அசோகன்

*

ஆங்காங்கே எழுதியிருக்கிறேன்.
புகைப்படங்கள் அவ்வளவு 
இல்லாத நாட்கள்.
உள்ளங்கள் உணர்வுகள்
நினைவுகள் நின்றுபேசும் 
நிமிடங்கள் எல்லாம்
தாளுக்குள் அடங்கித் 
திமிறும் வார்த்தைகளாய்.

நான் தேடிப் படித்தது.
நண்பனின் கத்தரிப்பூவண்ணச்சட்டை.
புத்தாண்டில் எழுதிக்கொண்ட உறுதிகள்.
பயந்து படுத்திய பாடங்கள்.
விடுமுறையில் படித்த சிவகாமியின் சபதம்.
உதிரிப்பூக்கள் பார்த்து அழுதது.
சிவசங்கரியின் ஏரிக்கடியில் பூத்தமலர்கள்.
குறிஞ்சிமலர் பூரணியும் அரவிந்தனும்.
விடுதியில் தனித்திருந்த நாட்கள்.
உறங்க விடாத அழுத்தங்கள்.
வீடுபிரிந்து பயணித்த நெடியரயில் பயணம்.
மாமரத்தில் குருவிகள் கட்டியகூடு.
தூர்வாரிய கிணற்றில் தெரிந்த ஊற்றுக்கண்.
ஒரு பயணம் முழுதும் பேசிவந்த யுவதியவள்.
தங்கைக்கு நான்தந்த முதல்புடவை. 
பொதிகை மலையின் மழைப்பயணம்.

இதுவெல்லாம் உனக்கு முன் சில..

உன் அறிமுகத்தின் பிறகு
பக்கங்கள் நிரம்பிவழிந்து
பக்கத்துத் தேதிகளிலும்
கடன் வாங்கி இருக்கிறேன்.

உன்னுடன் பேசிய முதல் வாக்கியம்.
ஒரு மார்கழியில் நீ தினமும் சூடிவந்த‌ மலர்கள்.
உன்குறிப்பில் நான்சமைத்த திரட்டுப்பால்.
உன்னை நிரப்பும் பாடல்கள்.
நீ சொன்ன ரமணர் கதைகள்.
உலகம் தழுவிய உன் வாசிப்புக்கள்.
நான் வியந்த உன் ஆளுமைகள்.
நம் உயரங்கள் நமக்கு முரண்பட்டநாள்.
வெறுத்து விரும்பிய தனிமைப்பொழுதுகள்
என உனக்குப் பின்
உன்னைப் பற்றியே நீளும் ஒரு பெருந்தொடர்..

என 
அவ்வளவு குறிப்புக்கள்
இன்றும்
பிள்ளைகளுக்குக் கதைகள் சொல்ல‌
எங்கு எப்படி நின்று போனது 
தினமும் எழுதும் குறிப்புக்கள் ?
உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் ஈரங்கள்
பெருவெளிச்சங்களில் பேரிரைச்சல்களில்
உள்ளத்தில் ஊற்றாய்த் தங்குவதில்லை
மையூற்றி எழுதி முடிக்கும்முன்
வழிதவறி அழைத்துச்சென்று விடுகிறது
பெருவெளிச்சங்களும் பேரிரைச்சல்களும்..

ரமேஷ் கோபாலகிருஷ்ணன்

*

பரம்பரை பெண்ணாதிக்க மடமை
சமுதாயம் மாற
நாட்குறிப்பு எழுதிய நாட்கள்
எனது வாழ்க்கையில்
இயந்திர நரம்புகள் ஓட்டம்!
அதிலொரு துளியென
முகிலென வந்தது!
பாசத்தின் ஊற்றுக்கு
மலை அழகன் அருளால் வந்தவளே!
இல்ல விளக்கே!
புதுமைப்பெண் போல பிறக்க
சுடுசொல் கேட்க அவசியம் 
இல்லை பதுமையே!
பிறப்பின் மரபு 
வாய்ச்சொல் அம்புகள்!
இளமை பிடிவாதம் இன்றுவரை
தொடர யார் காரணம்
என்பதனை மறந்தனையோ!
வேற்றுச் செடியின் மணம்
 அடுத்த வீட்டின் ரசத்திற்கு ஆகுமோ!
விரலுக்கு தகுந்த வீக்கம் அடுத்த
வீட்டின் மனதிற்கு வேண்டாமோ!
அடுத்த வீட்டில் ஊன்றிய
கொத்துமல்லி தழை
 நாற்று  விட்ட வீட்டு ரசத்தின்
மணத்திற்கு ஆகுமோ! 
பெட்டி நிறைய கரிகோல் இருப்பினும்
துண்டு கரிகோல் மூலையில் தேடி
எழுதிய ஜீன் மாறுமோ!
தாய் அன்பில் கற்ற கல்வி
தந்தை அளித்த நற்பண்பு வாழ்க்கை
பண ஜோதி ஏற்றிடுமே!
அடுத்தவர் கையை எதிர்பார்க்கும் மடமை
பெண் பெருமை பேசாது!
கற்ற கல்வி முடமாகி  
பணி குடும்பச் சக்கரத்தில்
முடங்கியது ஏனோ!
வயிற்றின் பசி ஓலத்திற்கு
பண மந்திரம் அளிக்க
சுயமாய்  எழுத எனது
நாட்குறிப்பு ஏடு
காத்திருக்கிறது! 

சீனி

*
தந்தையின் கை பிடித்து நடை பயில கற்ற  நாளும்,
பள்ளியில் சாக்கு  பையில்  கால்  விட்டு கீழே விழாமல் ஓடி ஜெயித்த நாளும்,
அரும்பு  மீசையை  முறுக்கி  விட்ட  நாளும்,
என்  கனவில் முதல் முறை அவள் தோன்றிய நாளும்,
வேலைகிடைத்ததை  தந்தையிடம்  கூறியபோது  அவர்  கண்களில்  ஆனந்த  கண்ணீர்  பார்த்த நாளும்,
காலப்போக்கில்  மணம் முடித்து, பெயர்  சொல்லி  அழைப்பவரே இருக்க,  என்  மனைவி ,
முதல்  முறை  என்னை  ‘அத்தான் ’ என்று   உரிமைமிகுந்த  பரிவோடு  அழைத்த  நாளும்,
மனைவியின்  வயிற்றில்  கைவைத்து  என் வாரிசு உதைத்ததை  பெருமிதத்தோடு  அனுபவித்த  நாளும்,
அவள்  பிறந்த  செய்தி  கேட்டபோது  வாழ்க்கையின் புது  அர்த்தம்  உணர்ந்த    நாளும்,
நினைவலையாய் இதுவரை 
நாட்குறிப்பு  எழுதிய  நாட்கள்!

பிரியா ஸ்ரீதர்

*                     
நாட்குறிப்பு எழுதிய நாட்கள்
நாட்குறிப்பில் எழுதி வைத்து அழகு பார்க்க
நாயகியே  உன்னையவன்  நாடி  வந்த 
நாட்கள் பல என்பதனை என்னிடத்தில்
நயம்படவே எடுத்துரைத்த நாட்க ளுண்டு!

ஊர்ப்பேச்சை உதறிவிட்டு உறவுகள் தனையும்
உனக்காக   அவன்   உதறிப்   போட்டு விட்டு
கார்மேக இருள் தனையும் பொருட் படுத்தாது
கணமேனும்  உறங்காமல்  திரிந்த  துண்டு!

இணைந்திடுவீர் நீங்கள் என்றே நானுமெண்ணி
இவ்வுலகே  உங்களிருவர்  சொர்க்க  மென்று 
பனைநெடிய ஆசையினை மனத்துள் வைத்து
பாங்குடனே காத்திருந்தேன் வாழ்த்திப் பாட!

இறப்பினிலே  இணைந்ததாய்  சேதி   கேட்டு 
என்னுளமே  உடைந்  தாங்கே   சுக்கலாக 
பிறப்பிதுவே  முழுதுமாய்  வீணாய்ப்  போக 
பிதற்றுகிறேன்!கிறுக்குகிறேன்!நாட் குறிப்பில்!

சாதிக்கு  நாமிங்கு  பாடை  கட்டும்
சரியானநாள்  விரைவில் முகிழ்க்க வேண்டி
பாதிக்கு மேலான இளைஞர் கூட்டம்
பதிய வேண்டும் நாட்குறிப்பில் பவித்திரமாய்!

-ரெ.ஆத்மநாதன்

*

நம்  இறந்த காலத்தை
செம்மையாக  நினைவூட்டும் 
"நாட்குறிப்பு" இன்று 
தேய்பிறையாய் தேய்ந்துவிட்டது!
வீட்டில் நடந்த நிகழ்வுகளை 
ஏட்டில்  எழுதும் "நாட்குறிப்பு"
நம்மை  "மலரும் நினைவுகளில்"
மூழ்க செய்யும் அற்புத கண்டுபிடிப்பு.
அந்நாளில் பாட்டி தாத்தா  ஏன் 
அம்மா  அப்பா எழுதிய நாட்குறிப்புகளை
சும்மா  புரட்டினால் மனம்  மகிழும்!
"நாட்குறிப்பு" எழுதிய நாட்களாக 
காணாமல்  போனதே வருத்தம்!
பொறுமையாய்  எழுதிய  நாட்குறிப்பை 
பெருமையுடன்  புரட்டினால் 
அருமையான  நினைவுகள்  மனதில்  ஓடுமே!
எழுதிய  நாட்களான இறந்த  காலத்தை 
புழுதியில்  தேடினாலும்  மனம்  மகிழ
செய்யும் நிகழ்காலத்தை 
கண்முன்னே  கொண்டு  நிறுத்துமே!

உஷாமுத்துராமன்
*
 

கடந்த காலங்களைக் காட்டும்
காலக் கண்ணாடி என்பேன்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
எம்மை விட்டு விலகிடாத பந்தம்!

நான் முதலில் எழுதிட முனைகையில்
நான் சந்தித்த ஏளனங்கள் எத்தனை?
நாட்குறிப்பு எழுதும் பழக்கம்
நாளைக்கு நன்மை தரவேதராது என
நண்பனும் வாதிட்டானே!

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
அக்கால வரலாறு வழங்கும்
அற்புதம் அறியாதவர்களிடம் நான்
மாட்டிக்கொண்டு விழித்ததை
மறக்க முடிவதில்லையே!


விடுதிக்காப்பாளர் அறியாவண்ணம்
விரும்பி வாத்தியார் படம் பார்க்க
நாட்கள் பலகடந்தும்கூட நான்
நயமாக மாட்டிக்கொள்ள
நாட்குறிப்பு காரணமாகி நகைத்ததே!

உள்ளத்தின் உண்மைகளை
உறுதிப்பத்திரமாக்கி
உவகை தந்த அற்புதமும்
நான் முன்னாட்களில்
நாட்குறிப்பு எழுதிய நாட்களே!

புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன் சிறுமுகை

*
பள்ளிப் பருவத்தில் 
பால்ய சிந்தனையில் 
நாட்குறிப்பில் 
"நாளை என்ன வீட்டுப்பாடம் " 
"நண்பனின் பிறந்தநாள் தேதி " 
"பண்டிகை நாட்களின் தேதிகளை வட்டமிட்டது " 
"கற்பனை முகங்களை ஓவியம் தீட்டியது " 
என என் நினைவலைகளில் நீந்திச் செல்கிறது .......... 

பள்ளிப் பருவம் 
எனக்கும் என் பேனாவுக்கும் 
பக்குவமில்லாத பழைய காலம் ... 

சற்று மீசை வளர்ந்து 
ஆசை அரும்புகையில் 
கல்லூரி நாட்களில் 
நாட்குறிப்பு எல்லாமே 
கவிதைகளை பிரசவிக்க 
என் பேனாவுடன் போராடிக் கொண்டிருந்தது .. 
கவி துவங்கும் எல்லோருக்கும் 
காதல் கவிதைகளே முதல் பிள்ளையாய் பிறப்பெடுக்கும் .. 
நான் மட்டும் என்ன விதிவிலக்கா ..? 
பெயரிடப்படாத காதலியின் 
கற்பனை பெயர்களையே 
அகராதியாக தொகுத்து 
தனிப்பக்கம் போட்டிருந்தேன் 
என் நாட்குறிப்பில் .... 
கனவு தேவதையின் 
ஓவியம் ஏந்தியே 
பல பக்கங்கள் நிரம்பியிருந்தது ... 
போலிச் சாமியாரின் போதனைகள் போல 
சமூக சிந்தனை அவ்வப்போது 
என் கிறுக்கலில் சிதறியிருந்தது ... 

இளமைப் பருவம் 
எனக்கும் என் பேனாவுக்கும் 
தவழ்ந்த பிள்ளை எழுந்து நடக்கும் காலம் ... 

தூசு தட்டும் போது கிடைத்த 
என் பழைய நாட்குறிப்பு 
என்னை எனக்கே அடையாளம் காட்டியது ... 
அது நானா ? 
இது நானா ? 
எது நான்? என்று 
என்னையே கேள்வியும் கேட்டது ... 

பல அழகிய நினைவுகளை 
மயிலிறகாகவும் 
சில கொடிய வலிகளை 
பசுமரத்தாணியாகவும் 
சராசரி கலவையில் சேர்த்து 
கட்டிய கட்டிடமாக தனித்தே நிற்கிறது ... 

நாட்குறிப்பு எழுதிய நாட்கள் 
காலம் கடந்தும் 
மனக்கூட்டின் ஓரத்தில் 
வாடகையின்றி குடியிருக்கிறது...
குணா
*
நாட்குறிப்பு எழுதிய நாட்களில் வாழ்க்கை
 நிம்மதியாயிருந்தது உண்மையாய் சிறந்தது
 உண்மைகள் சில சமயம் ஊறுகள் விளைத்தன
நாட்குறிப்பு எழுதி வந்தவரெல்லாம் உண்மை மறந்தனர்
 நாட்குறிப்பில் பொய்மையே இடம் பெறலாயின
நாளாக நாளாக ஏன் இந்த பொய்க்குறிப்பு என
 நானிலமெங்கும் கேள்விக் குறியானது  
வாளாக குறிப்பின் அடக்கங்கள் மாறி நம்மை வதைத்தன
வாழ்க்கை கேள்விக்குறியானது, முடிகவுக்கு வந்தது
நாட்குறிப்பு எழுதும் நற்பழக்கம் நாளடைவில் நின்றுபோனது
உண்மை சில சமயம் மறைக்கப்படுவதால்
வேண்டாத  சம்பவங்கள் நடை பெறாவண்ணம் தடுக்கபட்டன!
நாட்குறிப்பு எழுதுவது நல்ல பழக்கம்தான் என் செய்ய
நலம் பயக்காவிடில் தவிர்ப்பததுதான் சாலச்சிறந்தது!

கவிஞர்அரங்க. கோவிந்தராஜன்
*
ஒவ்வொரு விடியலும்
ஒவ்வொரு விதம் என
ஒவ்வொரு நாளும்
எழுதி முடித்த
எனது நாட்க்குறிப்பு புத்தகம்
நான் கடந்து வந்த
நாட்களைக் கண் முன்னே 
காட்டிடும்  கண்ணாடிஎன்றால்
மிகையில்லை !

எனது எண்ணம்
எனது செயல்
எனது கனவு
எனது கற்பனை
அனைத்தையும்
அன்றாட நிகழ்வுகளுடன்
கலந்து சிறு சிறு
கவிதைகளாகவே வடித்த
மறக்கமுடியாத நாட்கள் அவை !மகிழ்ந்த தருணங்களும்
மனம் கசந்த தினங்களும்
அவற்றுள் அடக்கம் .
அன்று நாட்குறிப்பு ஏட்டினிலே
சொல்லப்பட்ட வார்த்தைகளும்
சொல்லப்படாத வார்த்தைகளும்
காலம் பல கடந்தும்
பருவம் பல கடந்தும்
மலரும் நினைவுகளாக
மனதில் பூத்து நிற்கின்றன
மீண்டும் எடுத்துப் புரட்டிப்
படிக்கையில் !

ஜெயா வெங்கட்
*

உண்ணுவது உறங்குவது என்று தொடங்கி
எண்ணுவது ஆசைகள் என்று நடைபயின்று
கண்ணுறங்கும் வரை நடந்ததனைத்தும்
மண்ணுலகில் ஆசையோடு எழுதிய நாட்கள்

குடும்பக் கணக்குகளின் புத்தகமாய் மாறி
அடுக்கடுக்கான செலவுகளின் பட்டியலாய்
படுக்கப் போகும்வரை மறக்காமல் நினைத்து
மிடுக்காக நாட்குறிப்பு நாளும் எழுதினேனே

காதல் கணைகள் பாய்ந்த அந்தக் காலத்தில்
மோதல் ஏதுமின்றி நடந்ததனைத்தும் எழுத்தாய்
நாத வேள்வியாய் நாட்குறிப்பாக ஏட்டில் ஏறியது
வேதமாய் அதை எப்போதும் படிப்பதென்றானது

வளர்ந்த நட்புகளில் நண்பர்களாய்க் கிடைத்த
கிளர்ந்த நட்பின் மேன்மைகள் எழுத்தாகியது
தளர்ந்த நாட்களிலும் நாட்குறிப்பு நிற்காது
இளமை குலுங்கிய  நினைவுப் பெட்டகமானது

அலைபேசி நிலைபேசியாகி வலையாகியது
இலையசைவுகூட இணையத்தில் வருகிறது
மலையாக நாட்குறிப்பு காலச் செலவானது
விலையாக நினைவுகளின் ஓடமானது அது.

கவிஞர்  ராம்க்ருஷ்
*
நாட்குறிப்பு  நான்  எழுதியதில்லை ஒரு நாளும் !
பின் குறிப்பு மட்டும் இருக்கும் அவசியம் என் 
கடிதத்தில் ! அது ஏன் என்று இன்று வரை 
தெரியவில்லை  எனக்கு ! ...ஆனால் 
நாட்காட்டி தாள் தினம் தினம் காலையில் நான் 
கிழிக்கும் நேரம் விழித்துக் கொள்கிறேன் ,நான் 
கிழிந்த தாள் சொல்லும் குறிப்பு புரிந்து கொண்டு !
ஆம் ... புது விடியல் தினமும்  நான் காண 
துணை நிற்கும் அந்த ஆண்டவனுக்கு நான் 
சொல்ல வேண்டும் நன்றி ஒரு ஆயிரம் !
நாட்காட்டியில் நான் கிழித்தது ஒரு தாளை 
மட்டும் அல்ல ... என் வாழ்வில் முடிந்து போன 
ஒரு நாளையும் சேர்த்துதான் !
நாட்குறிப்பு நான் எழுதா விட்டாலும் என் நாட்காட்டி 
சுட்டிக் காட்டுதே என் வாழ்வின் அர்த்தம் என்ன 
என்று தினம் தினம் ! 
என் நாட்காட்டிதான் ஒரு வேளை நான் 
எழுதாத என் நாட்குறிப்போ !

K .நடராஜன் 
*
நாட்கள் உதிரும்போது 
நினைவுகள் நிற்க 
நாளும் குறிப்பு 
நாம் எழுத வேண்டும்!
 
நாட்குறிப்பு 
மீண்டும் புரட்டிப் பார்க்கும்போது
இனம் புரியா இன்பம் 
ஓர் இனிய அனுபவம்!

நாட்குறிப்பில் எழுதும் 
எழுத்துக்கள் எல்லாம்
எழுத்துக்கள் அல்ல  
எண்ணங்களின் குவியல் 
சில எண்ணங்கள் 
அனுபவப் பாதைகள் 
அவைகள் உதயமானதோ
துடிக்கும் நம் உள்ளத்திலே!

பலவித வண்ணங்களில்
பல்வேறு வடிவங்களில் 
எழுதலாம் 
வண்ணங்கள் மாறலாம்
வடிவங்கள் மாறலாம் 
அன்று உதயமான
எண்ணங்கள்  
மாறுவதில்லையே ! 
 
பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

*
இது லாப நஷ்ட நோக்க குறிப்பன்று
என் எதிரியை எதிர்க்க இயலாதது
என் சாந்த குணமா கோழை தனமா
சொல்லத் தெரியவில்லை ஆனாலும் 

எதிரியை வெட்டி பொட்டு வைத்தால்
ஒழிய கோபம் தீராது மனது ஆறாது
என்றே நாட்குறிப்பு எழுதிய நாட்கள் 
நினைவில் நிழலாடும் பொழுதில் 

தேவா இதற்கொரு விமோசனம் பகறு
எம்மால் முடியாதது உம்மால் முடியும் 
இறுதியில் இறைவனை சரணடைந்திட 
காலையில் காலில் விழுந்தான் எதிரி

நெஞ்சிக்குள் மண்டி கிடந்திட்ட தீரா 
கோபம் என்கின்ற பாரம் லேசாகிற்று 
கொலைகாரன் நாமம் விலக்கிற்று 
சிறைவாசல் படியேறும் படியில்லை

ஆபிரகாம் வேளாங்கண்ணி
*
எண்ணங்களுக்கு
வண்ணம் தந்து
பள்ளி க்கட்டணம் முதல்
பால் கணக்கு  வரை
மணக்கும் சமையல் முதல்
மாதபட்ஜெட் வரை
உறவுகள் வருகை
உல்லாசப்பயணம் என்று
அன்றாட நிகழ்வுகள்
அனைத்தையும்
நாட்குறிப்பு புத்தகத்தில்
நாள் தவறாமல்
எழுதி வைத்து 
திரும்பவும் வாசித்தோம் அன்று .!

மூச்சுவிட நேரமின்றி
முகம் அறிந்த
முகம் அறியாத
நபர்களின்
நண்பர்களின்
முடிவில்லா வலைப்பதிவுகளில் 
மூழ்கிக் 
கண்ணில் கண்டதைக்
கருத்தில் பட்டதைக்
கைபேசியில்
குறுஞ்செய்தியாக 
அனுப்பிக் கொண்டிருக்கும்
அவசர நிலை 
இன்று !

முன்னதில் 
இதயம் பேசியது !
பின்னதில்
இணையம் பேசுகிறது !

கே. ருக்மணி
*
வரவை எழுதி வைத்த
மாதத்தின் முதல் தேதி – அதில்
பாதியை சேமிக்கும் உறுதி,
வானவில்லாய் மறைந்தது இருபதே நாட்களில் –
இருப்பில் இல்லையே எதுவுமே–
இதயத்தில் அரிக்கத்தொடங்கியது ,
இதமான சொற்களால் அடக்கி வைத்தேன் !!
 
ஒன்று விட்ட தங்கைக்கு
ஒன்று புதிதாய் பிறந்தது –
மனதில் மகிழ்ச்சி மழை !
சொட்டும் நீரை ஆனந்தப்பேனாவில்
அடக்கி டைரியில் பதித்தேனே !!
 
சின்ன தந்தை இறந்தார்-
தொண்டையால் மட்டும் அழுபவரை
படம் பிடித்தேனே வரிகளால் !!
 
முறுக்கு டப்பாவை முந்தானையில் மறைத்து
வெளியேறும் வேலைக்காரிக்கு
சிசிடிவிக்கள் தேவையோ ?

நாட்குறிப்பின் பக்கங்கள்
நாளும் ஒரு திரைப்படம் !
 
இன்று அந்த நாட்களை
சந்தமாய் மாற்ற ஒரு முயற்சி ,
ஆனால் அன்றோ
எண்ணங்களுக்கு சுவைத்தேனை க்கூட்டி
எழுத்தாக்கி வடித்த
எல்லோருமே கவிஞர்கள்

கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

*
புத்தாண்டு வாழ்த்துகள்!
புத்தேடு (டைரி ) புதுவரவு !
முத்தானச் செய்திகள் !
முன்பதிய மனவிரைவு ! 
உண்டது எழுதினால்
ஹோட்டல்  கணக்காகும் ! 
உறங்கியது எழுதினால் 
ஓய்வுக் கணக்காகும் ! 
கண் கண்டதை
 மனம் கொண்டதை எழுதுகிறேன் ! 
காலைப் பொழுதில்  கதிரவன் எழுத பகலாயிற்று ! 
மாலலைப் பொழுதில்  மதியவள் 
எழுத இரவாயிற்று ! - உழவர் 
ஏர் எழுத காடு நிலம் கழனியாயிற்று ! - கவிஞர் 
சீர் எழுத காகிதம் 
கவிதையாயிற்று! - பள்ளிச் 
சாலை போகும் பிள்ளைகள் எழுதியது  பாடமாயிற்று ! மருத்துவ
சாலை போகும் மருத்துவர்கள் 
எழுதியது மருந்தாயிற்று ! 
என்னைப் படைத்த இறைவன் 
எழுதிய நாட்குறிப்பு என் 
வாழ்க்கை அநுபவமாயிற்று !
கவிஞர் எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்
*
அந்நாட்களில் எனது தந்தையும் தாயும் -
எழுதிய நாட்குறிப்பு நாட்களைப் படித்தபோது
எனக்கு வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தது -
அவர்கள் எங்களுக்காக பட்டத் துயரினை
அன்று முழுவதுமாய் புரிந்துக் கொண்டேன்
பாா்த்து பாா்த்து எங்களை வளர்த்தாா்கள் -
பாா்த்து பாா்த்து செலவிடவும் கற்றுக்கொடுத்தாா்கள்
பல மாதங்கள் செலவுக்கணக்கு அதிகமானதை
படம்பிடித்துக் காட்டின அன்றைய நாட்குறிப்புகள்
இருப்பினும் குடும்பச்செலவை சமாளிப்பதற்கு அப்பா
இரவு பணியையும்  சோ்ந்தே செய்திடுவாா்...
இன்று என்பெயருக்குப்பின் இருக்கும் பட்டங்கள்யாவும்
என் தாய்தந்தை பட்ட கஷ்டங்களாகும்...
சில நேரங்களில் உறவும் நட்புமே
எனது தாய்தந்தையைக் காயப்படுத்தி இருந்தன - 
அந்நாட்களில் எழுந்த சண்டைச் சச்சரவுகளும்
அதன்பின் நடந்த சமாதான முயற்சிகளையும்
படம்பிடித்துக் காட்டியது அன்றைய நாட்குறிப்புகள் -
நாட்குறிப்பு, நாட்களை மட்டுமல்ல - பல
மனித உறவுகளையும்  குறிப்பெடுத்து வைத்திருந்தது
நிஜமெது? நிழல் எது? என்று...
ஏமாற்றங்களையும், ஏற்ற இறக்கங்களையும் - வாழ்க்கையில்
எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்பதைக் காட்டியது;
இடையிடையே சமுதாயப் பிரச்சனைகளும் எழுதப்பட்டதை
புரட்டிப் பாா்த்தேன்- சற்று தூக்கிவாறிப்போட்டது
மாறவேயில்லை... - அன்றைய நாட்குறிப்பு நாளிலும்
தமிழக எல்லையில் மீனவா்கள் தண்டிக்கப்படுவதையும் - 
காஷ்மீரில் எல்லையில் அப்பாவிகள் தண்டிக்கப்படுவதையும்;
இப்படித்தான் தொடர்கிறது பல பிரச்சனைகளும்.......!
இன்றளவும் எழுதுகிறாா்கள் நாட்குறிப்பை தாய்தந்தை -
அவைகள் இரகசியங்களாகப் பதுக்கிவைக்க கூடியவையல்ல...
வாழ்வியலைக்  கற்றுத்தரும் அனுபவ இலக்கியங்களாக....
எங்களோடு இருந்து எங்களை வாழவைக்கும்.....

கவிஞர்.  இரா. விநாயகமூர்த்தி

*
நாட்குறிப்பு எழுதியநல் நாட்கள் எங்கே
……….நல்லதையே நினைவாக நவின்ற தெங்கே.!
பாட்டாக எழுதுவோர்கள் பலரும் இங்கே
……….படிப்பதற்கு எழுதாமல் பிதற்று கின்றார்..!
கூட்டாகச் சொற்களையே குவிய வைத்து
……….கவிதைமழை எனவிளம்பும் கவியும் உண்டு..!
கோட்பாடும் குறிக்கோளும் காணும் போது
……….காணாமல் போனதுவாம் கவிதைச் சொல்லே.!
 
கேள்விகளைக் கோபுரமாய்க் குவித்த டுக்கி
……….கவிதையதன் சொல்லழகில் கருத்தி லாது.!
வேள்விகளாய்ச் சொற்றொடரே விழும் வந்து
……….வியக்கவுமே  வைக்காது விஷயம் இல்லை.!
வாள்வீச்சு போன்றதொரு வேகச் சொல்லும்
……….வகையான உதாரணமும் வழிய வில்லை.!
மீள்பதிவு செய்யாமல் மனதில் வைத்து
……….மீண்டுமது தொடராமல் முயற்சி செய்வீர்.!

 குறிப்பெழுத உட்கார்ந்துக் குவிந்த நாட்கள்
……….கணக்கிலுமே அடங்காது கவியின் நெஞ்சில்.!
வெறித்தனமாய் எழுதியநல் விஷய முண்டு
……….விமரிசித்தார் படிக்காமல் விளையாட் டாக.!
தறியினிலே தரம்பார்த்துச் சேர்த்த நூல்போல்
……….தீந்தமிழால் பாட்டிசைக்கத் தமிழை நெய்தேன்.!
அறிவுவளர்ச் சிந்தனைகள் அமைந்த தங்கே
……….அனைவருமே ஏற்றாரா.?அஃதோர் கேள்வி..?

கவிஞர் பெருவை பார்த்தசாரதி
*
நாட்களை விடியல் எழுதியது - எனது
……..நாட்குறிப்பை விரல்கள் எழுதியது..
நாட்களும் நிமிடங்களாய் நகர்ந்தது - வாழும்
……..நாட்களும் நினைவுகளாய் நிறைந்தது..
நிகழ்வதை எல்லாம் நாளும்படி - எல்லாம்
……..நடக்கும் நாளை நல்லபடி..
நகரும் காலத்தை கையில்பிடி - இதுவே
……..நாட்கள் சொல்லும் அனுபவப்படி..
எழுதியவார்த்தைகள் நம்மோடு பேசும் - நம்
……..எண்ணங்களின் மணமாய் வீசும்..
பொழுதுகள் தந்த பரிசாம் - நம்
……..பயணம் சொல்லும் கொட்டுமுரசாம்..
அனுபவங்கள் தரலாம் கண்ணீர்த்துளிகள் - முள்ளின்றி
……..அமைந்து விடாது புல்வெளிகள்..
அன்றாடம் கரைவதுதான் மணித்துளிகள் - வாழ்வை 
……..அறுவடை செய்யும் நெல்மணிகள்..
நாட்குறிப்பு நம்வாழ்வின் காவியம் - நம்
……..நினைவுகளின் அழியா ஓவியம்..
நாட்குறிப்பு என்பது ஓர்இலக்கியம் - அதில்
……..நாமும் எழுதலாம் அத்தியாயம்..
- கவிஞர் நா. நடராசு

*
கைகளால் புரட்டுகிறேன்
கண்களால் வருடுகிறேன்
நடந்தகதை சொல்கிறது
நாட்குறிப்பு

பக்கம் பார்த்துப் பேசு என்றனர்
பக்கமோ அடுத்த பக்கத்தோடு பேசுவதில்லை
ரகசியங்கள் கசிவதில்லை
ரசனைகள் கரைவதில்லை

இரவின் தனிமையில்
என்னுடன் பேசுவது வழக்கம்
இந்த நாட்குறிப்புக்கு!
இன்னமும்தான்...

எழுதுகோல் சிந்தும் மையில் 
எழுந்தது எப்படி
இருவருக்கு மட்டுமான
இன்னொரு தேவ உலகம்

புரட்டப் புரட்ட 
விரல்களிலும் தொத்திக் கொள்கிறது
காதலின் தித்திப்பு.

இந்த நாட்குறிப்புக்குப் பெருமிதம்
என்னை அதுதான்
கவிஞன் ஆக்கியதாம்.

-கோ. மன்றவாணன்

*
கல்லூரி நாட்களைப் பற்றி காகிதத்தில் கிறுக்கியதை - வெள்ளை அடிக்கும் போது கண்டேன் அன்று.
கொள்ளை கொண்ட நட்புக்களும்
தொல்லை கொடுத்த பாடங்களும் வரிசையாக
வலசை போக
வெள்ளைக் காகிதத்தின்
கறுப்புப் புள்ளியாய் தெரிந்தது உன் நினைவுகள்
ஒரு கோடை மழையாய்
ஒரு ஓடைத் தெப்பமாய்
எப்போதும் எனக்கான உணவை தப்பாமல் நீ எடுத்து வைத்ததும்,
எப்படியும் முன்னேறலாம் என நீ ஊட்டிய தெம்பும்,
ஒரு வழிப் பாதையில் நான் சென்று நீ அபராதம் கட்டியதும்
இப்படி எல்லாம் இருந்தது எப்படி எல்லா ஆசிரியர்களும் உன் மேல் அன்பாக இருந்ததும் - இப்படி எல்லாமும் இருந்தது, நானும் நீயும் ஒன்றாய் படித்தவரை -
பிறிதொரு நாள் பிரபு சொன்னான் நீ இல்லை என்றும் உனை மாய்த்துக் கொண்டாய் என்றும். ஏனோ அதன் பிறகான பொழுதுகளில் என் நாட் குறிப்பு நாட்கள் - வெற்றுக்
காகிதங்கள் ஆனது. உனக்கு நிகழ்ந்ததை அறிவது தான் எப்படி ?

செந்தில்குமார் சுப்பிரமணியன்
*
தண்டவாளங்களில் தாெடர்வண்டி பயணிக்கிறது  - எனது
நாட்களின் நினைவுகளோ நாட்குறிப்பில் பயணிக்கிறது
புண்ணிய நதிகளில் நீராடினால் உடல்தூய்மையாகும்
நினைவுகளை நாட்குறிப்பில் பதித்தால் மனம் தூய்மையாகும்
தீபவொளி எப்படி இருளை நீக்குகிறதோ- எனது 
அறியாமையாெளி நாட்குறிப்பை எழுதுவதால் நீங்குகிறது.
எனது இரகசியங்கள் மற்றவர்களிடம் முற்றுப்புள்ளிப்பெறும்போது
உன்னிடம் மட்டும்  தொடக்கப்புள்ளியாய் நீள்கிறது 
என் நாட்குறிப்பில் புதைந்துள்ள இரகசியங்களை
என் மரணத்திற்குபிறகு என்னோடே புதைத்துவிடுங்கள் 
ஏனெனில் -  என் சோகங்கள் மரணத்திற்குபிறகும்
என்னைச் சாா்ந்தவர்களைப் பாதித்து விடக்கூடாது...!
- குருசுரேஷ்.ப 
*
என்னைப் பற்றிய
அகப் புற நிதர்சனங்களை
நாட்குறிப்பில் பதிய முயன்று
தோற்றுப் போயிருக்கிறேன்

பொய்யற்ற மெய்யெழுதும் விருப்பம்
அரூபமாய் செதுக்கப்பட்டிருகிறது
என் உயிர்ப்பரப்பில்

மெய்யைப் பொய்யாய் பகடிப்பதும்
பொய்யை 
மெய்யெனப் புளங்காகிதம் கொள்வதும்
இருப்பாய் இருக்கிறது

முரண்களின் வெளியில்
நிஜங்களை மறைத்து 
நிழல்களின் அசைவுகளில் நிறம் பூசி
காதினிக்கும் பாராட்டு
நாட்குறிப்புக்குக் கிடைக்கக் கூடும்

பாராட்டைப் பெறவே தான்
பெரிதுவந்து முன் நிற்கிறது எவர்க்கும்
சுயம்

மழை வெயிலில் தலைக் காக்கும்
விரித்தக் குடை;
நிழல் தருமா உளைச்சலுக்கு

இப்போது எந்த போதியும்
பிரசவிப்பதில்லை
புத்தனை

சூரரென
அசூர வேலியே உள் நுழைந்து
குருதிக் குடிப்பதும்

காப்பவனே
களவாடிக் குவிக்க கம்பீரமாய்
காப்ரேட்டுக்களுக்காக
பரிபாலனம் செய்வதும்

கர்ப்ப கிரகத்திலேயே
பருவமற்ற கருவறையைக் களமாக்கி
சிதைப்பதும்

வாழ்வாதரங்களின் வாழ்க்கையை வெட்டி வீழ்த்தி
வேடிக்கைப் பார்ப்பதும்

தன்னைக் கடத்துவதையும்
தடுக்க முடியாமல் தவிப்போடுக் கிடந்து
மனம் கொதித்து
புழுங்கும் கடவுளாய் நான்

நாட்குறிப்பை
எழுதத் துவங்கும் போதெல்லாம்
எப்படி எழுத
புறத்தின் ஈட்டிகள் அகத்தின் அணுக்களைக் குத்தும் போது..

கவிஞர்.கா.அமீர்ஜான்
*
எதற்கெடுத்தாலும் அடிப்பார்
படி படி என வார்த்தைகளால் என்னை இடிப்பார்

அப்பாவின் போக்கு 
எனக்கு அன்று புரியவில்லை,
எனக்குள் ஆயிரம் கேள்விகள்; வேள்விகள்.
விடைதெரிந்த போது, 
வீரிட்டு அழுதேன். --- என்
மீதான அன்பை, பாசத்தை; என் தந்தை;
நாட்குறிப்பில், நாள் விடாமல் எழுதி வைத்திருந்தார்.
படித்துவிட்டேன், துடித்துவிட்டேன்.--- அந்த
நாட்குறிப்பு , எனக்குக்கற்றுக் கொடுத்த முக்கிய அறிவிப்பு.
இனி யாரும்; நாட்குறிப்பில் அன்பை, பாசத்தை குறிக்க வேண்டாம்.

நாள்தோறும்; அன்பை வெளிப்படுத்தி, குவியுங்கள் – அதனை;
நாட்குறிப்பில், தினந்தோறும்; குறியுங்கள். – இதனை;
தினந்தோறும்; நாங்கள்;  நாட்குறிப்பில் குறிப்போம்.
என அன்போடு, ஒன்றாக அறிவியுங்கள்.

களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
*

உயிரும் உடலும்
பிச்சையிட்ட
பெற்றோர்;
முத்தமிட்ட நிலைகள் கடந்து
பள்ளி சேர்ந்தது
முதல்
ஒவ்வொரு நாளும்,
ஒவ்வொரு செயலும்
நாட்குறிப்பில்
பதியம் போட்டதை
இன்று விளைச்சலைக்
காண்கிறேன்−என்
பிள்ளைகளின் வடிவில்,
பெற்றோரைத் துயர் கொடுத்த
என்னை;
பள்ளியில் ஆசிரியர்
கண்டித்த வேளை;
கல்லூரி குறும்பினால் வந்த
குதூகலங்கள்,
காதல் என்ற பொய்யை
மெய் என நினைத்து
மேனியைக் குலைத்து;
மோசமாய் திரிந்ததும்;
அப்பனென்ற ஒற்றைச்
சொல்லால்;
மீண்டு வந்தேன்;
என் மகன்களின்
நல்வாழ்வோடு , நானிலம் சிறக்க;
நற்சிந்தனையோடு,
பல்லாண்டு வாழ்ந்து
புகழ் பெற;
என் குறிப்பேடு தந்த
புத்தியினால் வந்த
வினையே!  இந்த
சிந்தனை....
ப.வீரக்குமார்
*
கடந்த காலத்தைக்
காட்டும் கண்ணாடி;
வாழ்வின் கரடுமுறடான
படிகள் தந்த வலிகள்;
பின்னாடி
பயணித்துப் பார்த்தால் தெரியும்
பாதையின் தன்மைக் கேற்ற
வாழ்வு நெறி;
மகிழ்ந்த தருணமும்
மலர்ந்த நேசமும்
என்னால் அடைந்தோர்
பட்ட வேதனை;
எனக்காக காயம்பட்ட
நட்புகள்;
எதற்காக என்று உணரா
என் மனதை;
வாழ்வின் பிற்பகுதி
திருப்பிய நாட்குறிப்பில்
எனைத் திருத்திய பக்கங்கள்,
கனவை நனவெனத்
திரிந்து கொண்டு
பொய்யால், மெய்யைக் கிழித்து;
மெய்யாய் பொய்யுரைத்து
படிப்பைக் கெடுத்து
நற்பண்பைக் குதறி;
தாடியோடு மாதுவை மறக்க
மதுவோடு கூடி
இழந்த வாழ்க்கை எத்தனையோ?
புரிந்தபின் தெளிந்தபின்
வயது ஓடியது, வருத்தம் கூடியது,
பொய்யான மெய்யை
மெய் என்று உணராமல்;
வெறும் கடமாய்,
பொருள் நிறைக்கும் குடமாய்,
இன்ப துன்ப நினைவலை
இல்லாமல்
வாழ்வதுவா?
வாழ்வு − சிந்திப்போம்
மந்திரித்த ஆடுகளாய்
இல்லாமல்.....

முகில் வீர உமேஷ்
*

துள்ளித் திரிந்த காலமது;
பள்ளிப் பருவத்துக் கனவுகளை
அள்ளி அள்ளி ஓர் குறிப்பில்
வெள்ளைத் தாளில் கரு மையால்
மெள்ள மெள்ளப் பதித்திடுவேன்;
உற்ற நண்பி காவியா முதல்
ஊர்மாங்காய் பறித்த கதைவரைக்கும்
பெற்றவர் பெரியவர் ஆசிரியர் 
போற்றி யிருந்த நாள் வரைக்கும்
கற்றது கை மண்ணளவே - இனிக்
கற்பேன் இவை எனுங் கனவுமுதல்
மற்றவர் போற்றிட, மணங் கண்டு நல்
மனையாளாய் வாழுவன் எனும்வரைக்கும்
தோன்றிய நினைவெல்லாம் 
துள்ளி வந்து தாளில் விழ
ஞான்றும் நாட்குறித்து
நானெழுதிய நாட்கள் அவை...!

தமிழ்க்கிழவி
*
பதின் பருவத்தில் 
பார்வைக்குள் விழுந்தவளின் 
முதல் பார்வை 
முதல் வார்த்தை
என நினைவுகளை 
சேமிக்க தொடங்கியது
என் நாட்குறிப்புகள்!

பரிசத்திற்குப் பிறகு
நம்மை ஆனந்தத்தில் 
ஆழ்த்திய 
விஷேச செய்தியையும்!
அதைத் தொடர்ந்து 
வாரிசு வந்ததையும்
வரவு வைத்துக்கொண்டன 
 என் நாட்குறிப்புகள்!

குழந்தையின்
முதல் பார்வை 
முதல் சிரிப்பு 
முதல் அழுகை 
என பல முதல்கள் 
கிடைத்தன என் நாட்குறிப்புக்கு!

நாட்கள் நகராமல் 
தூக்கம் தொலைத்து 
துக்கம் நிறைந்த நாட்களையும் 
குறித்துக்கொண்டன 
என் நாட்குறிப்புகள்!

நங்கையின் முகம் பார்த்து 
நான் எழுதத் தொடங்கியது 
நான் குறிப்பு எழுதிய நாட்கள்!
என் வாழ்கையின் சாதனையை பார்த்து 
நாட்கள் குறிப்பெழுதும் நாட்களன்றோ!
நாட்குறிப்பு எழுதிய நாட்கள்!
-கு.முருகேசன்

*
காலச் சிலந்திவலைகள் 
பற்றிக்கொண்ட 
பரணில் 
அன்றோர் இரவில் சூறாவளி

ரகசியமாய்
மழைபெய்த இறந்தகாலம்
நிகழ்கால விழிகளில்
ஈரக்கோடுகளாய் 

சொட்டுச்சொட்டாய்க்
கொட்டும் 
நாட்குறிப்பு எழுதிய நாட்கள்

வார்த்தைகள் ஆவிகளாய்
நடமாடும் நடுநிசியில்
கனவுகள் நிர்வாண ஒளிக்கற்றையாய்

கல்லூரி எதிரிலிருந்த
மயானத்தில் நிதம்செய்த
தியானம்…
சாம்பல்மேட்டிலிருந்து
கிளம்பிய பிணவாடையில்
சிவனாய் ஜீவன் ஆடிய நாடகம்….
நடக்கநடக்கத் தொலைதூரம்
பின்வாங்கிப் பின்வாங்கி
வா வா என்றழைத்து
ஏமாற்றிய மேகங்கள்…

இந்நடுயிரவில் நான்
இப்படியே நின்றுவிட
மாட்டேனா என
எங்கிருந்தோ வந்த கீட்ஸ்

சோகம் சொல்லும் எங்கள் பாடல்கள்
இனியவை என ஸ்கைலார்க்கிடம்
செப்பிச் சுகம்கண்ட் ஷெல்லி

இருவெள்ளை விழிகளில்
கருக்கொண்ட தேவக்கனா
புடவைகட்டி நடைபயின்றது
இருளின் கர்ப்பத்தில்
கனவுகாணும் விடியல்
கண்திறக்காத
மார்கழிப் பனிப்பொழுதுகளில்

குயவ நேர்த்தியுடன்
பூசணிப்பூ சாணத்துண்டு
சுற்றிய மாக்கோல
வட்டங்களின் வாசல்கள்

கனவுகளில் நெய்யப்பட்ட
கன்னிமைப் பூமுகத்தில்
பதின்மவயதின்
சதிராடும் புதிர்கள்

கூட்டத்தில் நடுவே
வீணைநரம்புகளில்
வளையல் கைகளின்
நரம்புகளை இசையாய் 
மாற்றி
விழிக்கோணத்தில்
ஆரத்தி எடுத்த பார்வைகள் 
நீர்ச்சுழிப்பாய்ச் சுற்றிவந்து
சுழித்துப்போகும் இதழ்கள் 

கருத்த அருவியாய்ப் 
படர்ந்த கூந்தல்நுனிக்
கண்களிலிருந்துச் சொட்டும்
நீர்த்துளிகள்

பனிமோதிரங்கள் சூடிய
பச்சைப்பசும் பூக்கள் 

காவிவெள்ளைச் சுவர்களின்
பிரகாரங்களில் ஓடிய கொலுசொலிப்
பிரவாகங்களில் நுரைத்த
காலாதீதச் சப்தங்கள்

பொங்கிவழிந்த அந்த
ஜீவநேர்த்தி நேற்றுகளை,
நடுங்கும் உறைபனியில்
குட்டிப்பறவையைக்
கெட்டியாய்ப் பிடித்துக்
கொள்ளும்
தாய்ப்பறவையின் சிறகுகள் போல
நாட்குறிப்புகள்
பத்திரமாய் அடைகாத்தன

நிகழ்கால அம்புப்படுக்கையில்
தேகம் குருதியின் யாகம் ஆக,
நெய்யாய் அதில்
சொட்டிக்கொண்டிருக்கும்
நாட்குறிப்பு எழுதிய நாட்கள்….

கவிஞர் மஹாரதி
*
நாட்களை படம் பிடித்தது 
நாட்காட்டியில் நம் எழுத்துக்கள் !
தினம் தினம் எழுத்தாணியில் பேசும் 
தித்திப்பான சுகம் மறக்க முடியாது !

நிகழ்வுகளை வரிசையாக செதுக்கி 
நாட்டு நடப்புகளை தெளிவுடன் எழுதி 
நம் நிலையை அடிக்கடி உணர்த்தும் 
நல்ல நண்பனாக நம் நாட்காட்டிகள் !

கண்ணீர் கதைகளும் பல உண்டு 
காலத்தின் அலங்கோலமும் உண்டு 
வென்ற பல கதைகளும் உண்டு 
வீரத்தின் அடையாளமும் உண்டு 

குறிப்பெழுதி என்ன ஓட்டத்தையும்
குறுகிய இந்த வாழ்வோட்டதோடு 
நன்கு இணைக்கும் பாலமாக - நலமுடன் 
நாட்குறிப்பு எழுதிய நாட்கள் நினைவில் !
*

நினைத்து நினைத்து பாா்க்கின்றேன்
என் வாழ்வின் பொக்கிஷமாய்
அழகிய தருணமாய் நாட்குறிப்பு எழுதிய
நினைவழியா நாட்களை கனத்த நெஞ்சுடனே.

ஆழ்மனதின் எண்ணக்கிடைக்கைகளை
சந்தோசங்களாய் துக்கங்களாய்
வாழ்வின் கண்ணீா் கதைகளாய் என
நாளும் பொழுதுமாய் எழுதி வைத்திருந்தேன்
எழுத்தாணி  கொண்டு அன்று
 என் வாழ்வை நாட் குறிப்பாய்.

இன்று நாகரிகத்தின் உச்ச நிலை தொட்டு
நிற்கின்ற தொழில்நுட்ப அசூர வளாச்சியினால்
ஆட்டம் கண்டு நிற்கிறது இன்று
ஒவ்வொரு மானுடனின் வாழ்விலும்
மீண்டும் பெற முடியாத அழகிய .நாட்களாய்
மீண்டும் பெறமுடியாத பொக்கிஷமாாாய்
நாட்குறிப்பு எழுதிய நாட்கள்.

ஈழநங்கை
*
கேட்டதை,பார்த்ததை, படித்ததை, ரசித்ததை, உள்ளமது களித்ததை, கனவில் கண்டதை,கற்பனையை, சிந்தனையை, எண்ணியதை, உள்ளக்கிடக்கையினைக வித்துவமுடன் பதிவது என் நாட்குறிப்பு! யாரிடமும் பேசமுடியாத,பகிரமுடியாத ஆழ்மன உணர்வுகளை அழகியலாய் எழுதிப் பார்த்தலே நாட்குறிப்பு! வாழ்க்கைத் தேடலை, உடனடி, நீண்டகாலத் தேவைகளை திட்டமிட்டே எழுதி வைத்து செயல்படுதலே நாட்குறிப்பு! அடுத்தவர் நாட்குறிப்பை படிப்பதும் கற்பைக் களவாடுவதும் தவறே! எழுதுவதென் பலம்! நூல்களைத் தேடி  படிப்பதென் பலவீனம்! நாட்குறிப்பெழுதுவதே என்னை சுயமாக்கி, தகுதியுடன் கூர்மையாக்கும் வியப்பான ஒரு நல்லப்பழக்கமே! 
A.k.சேகர்.ஆகாசம்பட்டு.

*

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com