கடந்த வாரத் தலைப்பு ‘மெய் உறக்கம்’வாசகர்களின் கவிதைகள்

சிறு  குழந்தையாய் மணல்  வீடு  கட்டுவதும்,பள்ளி  பருவத்தில்  கல்லை  கொண்டு  மாங்காய் அடிப்பதும் ,
கடந்த வாரத் தலைப்பு ‘மெய் உறக்கம்’வாசகர்களின் கவிதைகள்

மெய் உறக்கம் 

மெய் உறக்கமே  மரணம் 

உறக்கமே சுவர்க்கம்
உறக்கமே  நரகம்
உறக்கமே கனவு
உறக்கமே நிணைவு
உறக்கமே  மனசாட்சி
உறக்கமே மரணத்தின் சகோதரன்
ஆம் ! மரணமே மெய் உறக்கம்
மரணமே ஏகாந்தம்
ஏகாந்தமே நிலையான மெய் உறக்கம்! 

- புகழேந்தி இக்பால் 

**

ஒரு கை பல் துலக்கும்- மற்றொன்று
சிற்றுண்டி தயாரிக்கும் ,
ஒரு ஆக்டோபஸ் திறமை !!
சுருண்டு படுக்கும் குழந்தையை
சுண்டி எழுப்பி, அவசரச்சமையலுக்கு
தன் கையால் சுவை கூட்டி
ஊட்டி விடும் அருமை !!
அலுவலகத்தில் சில கருப்புக்கண்களின்
பார்வை ஊர்வலத்தை தடுத்துத்
திருப்பி அனுப்ப,  அலங்காரமில்லா அழகுடன்
ஆடை அணியும் பொறுமை !!
மாலையில் கணவருக்கு
அருகே அமர்ந்தபடி
காப்பி சுவைத்து மகிழும் செழுமை !!
அகங்காரத்தோல் உரித்து, பழங்களை
பணிவுத்தேனில் குழைத்து,
பெரியவர்களுக்கு வழங்கும் பழமை !!
கடமைகள் கசக்கிய உடல்:
ஒரு வெள்ளை மனதுடன்
இரவில் இவளைப்போல் படுக்கச்செல்!  
மாத்திரைகள் போடாத
மெய்யுறக்கம் அது !!

- கவிஞர் டாக்டர்.  எஸ். . பார்த்தசாரதி

**

மெய் உறக்கம் உறங்கி வருடங்களாகி விட்டன !
பொய் உறக்கம் உறங்கி பொழுது கழிகின்றது !

தொலைக்காட்சி வந்து தூக்கம் தொலைந்தது 
தொல்லைக்காட்சியானது  தொலைக்காட்சி !

தொடர்களுக்கு அடிமையாகி விட்டனர் நாளும் 
தொடர்கின்றது இரவில்  நெடுநேர விழிப்பு !

தொடர்களில் எதிர்மறை சிந்தனை போதிப்பு
தொலைந்து விடுகிறது நிம்மதியான உறக்கம் !

கெட்ட சிந்தனை  நாளும் விதைக்கின்றனர் 
கேட்ட காரணத்தால் போனது உறக்கம் !

இரவு உறக்கத்தை இல்லாமல் ஆக்கியது
இளசுகளோ கைபேசியில் மூழ்கியது !

அளவிற்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல 
அலைபேசியும் நஞ்சு உணர்ந்திட வேண்டும் !

கணினியும் கண்களுக்கு  இன்று கேடானது 
கண்ட நேரம் நேரத்தை விழுங்கி விடுகிறது !

நாளும் அறிவியல் கண்டுபிடிப்பால்
நன்மையை விட தீமை அதிகமானது !

அன்று இல்லை தூக்கம் இன்மை 
இன்று உள்ளது தூக்கம் இன்மை !

அன்று அதிகாலை எழுந்தனர் பலரும் 
அதிகாலை எழுவது இல்லை என்றானது !

கோழித் தூக்கம் மனிதத் தூக்கம் ஆனது 
கண்கள் காணவில்லை மெய் உறக்கம்! 
 
- கவிஞர் இரா .இரவி

**

குடுவையே மனிதன் என்றுகொண்டால்
குடுவையுள் குலுங்கும் திரவங்கள்
ஏதோ ஒருசமநிலை எட்டிப்பிடிக்க‌
கடவுள் தந்த கருவியே  
உறக்கம்.

ஏறி இறங்கும் மூச்சுக்காற்றில்
குடுவையுள் சுழலும் சக்கரங்கள்
ஏதோ உயர்நிலை எட்டித்தழுவ‌
இயற்கை செய்த விந்தையே  
உறக்கம்.

ஆசையும் மோகமும் காமமும்
கோபமும் இன்னும்சில‌பல‌ கசடுகளெல்லாம்
இறுகப்படிந்த உடலை மனதை
மெல்லத் தளர்த்திக் கசடுகள்கரைய‌
உடலும்மனமும் விழையும் செயலே
உறக்கம்.

தன்னால் உலகால் தன்னில்
எழுதிப்படிந்த எண்ணங்கள் பிம்பங்கள்
குடுவை கொள்ளும் ஏதோஅதிர்வினில்
கனவாய் மெதுவாய்க் கல‌ந்துபேச‌
உடலும்மனமும் தளரும் நிகழ்வே
உறக்கம்.

எது மெய் உறக்கம் ?
உள்ளங்கைகள் அளவே உணவும்
உழைத்துச் சலித்த உடலும்
கசடுகள் களைந்த மனமும்
மெல்லக்கிடந்து மெதுவாய்த் தளர‌
ஒன்றைப் பற்றிய ஒருமுகத்தால்
தன்னைமறந்து தன்னிலை மறந்து
மெல்லமுகிழும் தாமரை மலர்போல்
தன்னைத் தன்னால் மலர்த்தி
மகிழ்ந்து மலரும் நிகழ்வே
மெய் உறக்கம் !!.

உலகம் பற்றிய ஒருமுகம்
கடவுள் என்று சொன்னால்
என் "உள் கட" ந்த உன்னை நானும்
கடவுள் என்பேன்.
என் குருவும் என்பேன்..

- ரமேஷ் கோபாலகிருஷ்ணன், அமெரிக்கா

**
காலையில் எழுந்ததும் எறுப்பைப்பார்
காலையில் அவை தூங்குவதுண்டோ!
அவை வாயில் சிறு உணவைத் தூக்கி 
வரிசை வரிசையாய்ச் செல்வதைப் பார்!
குட்டிக்குட்டித் தேனீக்கள் குழுவாய்
மலர்கள் தேடிப் பறந்து திரிவதைப் பார்
உழைத்து உண்டு இரவில் உறங்குவது
ஆழ்ந்த உறக்கத்தில் மெய்மறந்தே!
உழைத்துப்பார் உறக்கம் கிட்டும் 
உறங்கிப்பார் உற்சாகம் கிட்டும்
கண்களை விடியும்வரை விழித்து இரவில்
கணினியின் முன் காலத்தைப் போக்காதே
கோழி உறக்கம் விரைந்து காலனுக்கு வழிவிடும்
காலனை விரட்ட ஆழ்ந்த தூக்கம் துணை நிற்கும்
தேனீ போல் சுற்றிப் பறந்து திரித்து விளையாடு!
எறும்புகள் போல் சுறுசுறுப்பாய் உழைத்து நீ திரி
மெய்உறக்கம் மெல்லவே ஆழ்உறக்கமாய்த்  தழுவ
மெய் புத்துணர்வு பெறும் நீ மேதினியில்
மேன்மையாய் வாழ்வாய் நன்றாய் என்றுமே!

**

நிம்மதியை பிச்சையாகக் கேட்டு வாசலில் 
நின்று அம்மா தாயே என்று துன்பமும் 
துயரமும் குரலெழுப்பும் 

இல்லையென கூறாது மனமிறங்கி 
இன்று போய் நாளை வா யென்னும்
பதாதையை தொங்க விட்டிடினும் 

மெய் உறக்கம் உறங்க விட்டிடாது 
ஏதேனும் மொரு குறை யில்லாமல் 
ஜீவிதம் துவங்காது சற்றும் முடியாது 

அக்குறையிடமே நிறையாக்கிடும் மூல 
மந்திர முளததை கற்றிட கற்றவற்றை 
கல்லாதாருக்கும் கற்பித்திடவே யது

மனிதர் மேல் மனிதர் மனிதநேயம் 
கொள்ளா விடில் மெய் உறக்கம் 
கொண்டிடல் குதிரை கொம்பேயாம்

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கம்

**
மெய் உறங்கும் வேளையிலே
பொய் எழுந்து ஆடிவிடும்
நேர்மை ஓடி ஒளிந்துவிடும்
நேசம்கூட தேசம் நீங்கி சாடிவிடும்.

பாசம் வளர்க்கும் சூழலிலே
பாசாங்கு செய்யும் வேளையிலே
மோசம் காட்ட எண்ணாமல்
தேகம் காட்டுதே சாகசங்கள்.

மெய் உறக்கம் மறந்திடுவார்
மெச்சி மெச்சி பேசிடுவார்
கனவுகளில் கரைந்திடுவார்
காதலுக்குள் மூழ்கிடுவார்.

இயந்திரங்கள் போல் வாழ்க்கை
இந்நாளில் சுழலுதென்றே
இயல்புடனே இயம்புகின்றார்
இரவு பகல் பாராமல்
இயன்றவரை உழைக்கின்றார்.

மெய் உறக்கம் கேட்டிடினும்
மெய்யாலுமே நாம் ஏற்பதில்லை
பொய் கூறிட  மறப்பதில்லை
பொதுவில் பொதுவாக நினைப்பதில்லை
தாய் தந்தை அருகிருக்க
தனயன்மார் நினைப்பதில்லை.

விதிகள் நாம் மதிப்பதில்லை
விபத்தில் சிக்க தவறவில்லை
அவசியமெய் உறக்கம் தவிர்த்து
அலைபேசி அடிமையாக மறப்பதில்லை.

- புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன் சிறுமுகை

**
மெய் உறக்கம் மிகாமல் மிதமாய் இருந்தாலே
மென்மையாய் உள்ளம் மேன்மைக்கு வழிகோலி
நல்லதையே  நாடும்!  நயமாய்ச்  சிந்திக்கும்!
கல்லாததைக்கூட   கற்க    ஓடி     வரும்!
நில்லா இவ்வுலகில் நிம்மதி அடைந்திடவே
பல்லா வகையானும் பக்குவமாய்த் தினமுழைக்கும்!

உறக்கந்தான் வாழ்வுக்கு உசுப்பேத்தும் நல்மருந்து!
கிறக்கமின்றி  வாழ்ந்திடவும்  கீழ்நிலையைத் தவிர்த்திடவும்
இரக்கமின்றி நடப்போர்க்கு இனிதினையே செய்திடவும்
அரக்கக்  குணத்தோர்க்கு  அன்பைப்  பகிர்ந்திடவும்
பரக்கப் பரக்கத் தினம் பலவேலை பார்ப்போர்க்கு 
திறக்கத்  திறக்கத்   தினம்தெவிட்டாத  அருமருந்து! 

பொய்உறக்கம்  கொள்வோரே பொழுதெல்லாம்  சோம்பிப்போய்
நெய்வடியும்  முகத்துடனே  நிம்மதியைத்  தொலைத்துவிட்டு
உறவுகளின்     மத்தியிலே    உயிர்ச்சடலம்    நிற்பதுபோல்
அரவுகளின்   இடையினிலே     அல்லாடும்    விலங்கினமாய்
பல்லாண்டு  வாழ்ந்தாலும்     பாருக்குப்   பயனின்றி
எல்லா     நிலையிலுமே       ஏக்கத்தில்    மூழ்கிடுவர்!

தூங்கும்    வேளையிலே   துக்கம்    தனைமறந்து
ஆங்கே   நல்லாக்கம்  அயராத   உழைப்புக்கு
அமிர்தம் உறக்கமென்றால் அதிலேதும் தவறில்லை!
தர்மம்   பூவுலகில்   தக்கபடி   தழைத்திடவும்
உடலில் உரமேற்றி உயர்ந்தபணி ஆற்றிடவும்
மெய்யுறக்கம் கொண்டிடுவோம்!மெல்ல வாருங்கள்!

-ரெ.ஆத்மநாதன்

**

கண்மூடி  மெய்உறக்கம்  கொண்டி  ருந்தால்
    கனவினிலும்  நல்வழிகள்  தெரிந்தி  டாது
விண்மீதில்  பறப்பதற்கே   ஆசை  கொண்டால்
    வெறுங்கையை  வீசிநின்றால்  நடந்தி  டாது !
மண்மீதில்  பெயர்நிறுவி  புகழ்கு  விக்க
    மனம்மட்டும்  விரும்புவதால்  நடந்தி  டாது
திண்மைமிகு  உண்மையுடன்  தளர்ச்சி  யின்றித்
    தினமுழைத்தால்  தானிங்கே  வெற்றி  கிட்டும் !

புல்லர்க்கு  வழிவிட்டுப்  புறத்தே  நின்றால்
    புல்கூட  நம்காலைப்  புரட்டி  வீழ்த்தும்
பொல்லாமை  கண்டஞ்சி  மௌன  மானால்
    பொய்புரட்டே  மேடையேறி  வீரம்  பேசும் !
நல்லவர்கள்  வீட்டிற்குள்  பதுங்கிக்  கொண்டால்
    நரிகளிங்கே  நாடாளும்  தலைமை  யாகும்
வல்லடிமை  நினைவகற்றித்  துணிவு  பெற்று
    வந்தால்தான்  நல்லவையும்  நடக்கு  மிங்கே !

நமக்கென்ன  என்றொதுங்கி   நாமி  ருந்தால்
    நம்கண்ணை  நாம்குத்திக்  கெடுவ  தாகும்
தமகென்றே   வாழ்வோரின்   தாளில்  வீழ்ந்தால்
    தலைகனத்து  நம்வயிற்றில்  காலை  வைப்பர் !
சுமக்கின்ற   கொடுமைகளைச்  சிலுவை  என்றே
    சுமந்துநின்றால்   முள்மகுடம்  சூட்டிப்  பார்ப்பர்
நமதென்னும்   பொதுமையிலே   மானத்  தோடு
    நாமெழுந்தால்   நற்காலம்   பூக்கு  மிங்கே !

(உண்மை  உறக்கம் கொண்டால் எனும் பொருளில் எழுதப்பட்டது )

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

மெய் மறந்த உறக்கம் இறக்கி வைக்கும் 
இறுக்கம்  எதுவாயினும் மனதில் இருந்து 
மெய் மறந்து உறங்குபவன் விழித்துக் 
கொள்வான் அவனை எழுப்பினால் !
ஆனால் பொய் தூக்கம் போடுபவனை 
எழுப்ப முடியுமா தட்டி ?
மெய்யுடன் பொய் சரிக்கு சரி நின்று 
சண்டை இடும் இந்த காலத்தில் 
வாய்மையே வெல்லும் என்று வசனம் 
பேசி நீ மெய் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டால் 
வாய் மெய்யை வெல்லும் நிலைமை 
வந்து விடும் தம்பி ! மெய் உறக்கத்திலும் 
விழிப்புடன் இருக்க வேண்டும் நீ தம்பி !
மெய் மறந்த உன் உறக்கத்தில் உண்மையை 
உறங்க விட்டு விடாதே நீ தம்பி !

- K.நடராஜன்

**
எவ்வுறக்கம் சொல்வேனோ!
தாயின் கருவறையில் உறங்கிய உறக்கமா!
தாலாட்டுப் பாடலின் தானே வந்த உறக்கமா!
ஓடியாடி விளையாண்டு களைப்படைந்த உறக்கமா!
படிப்பின் போது அயர்ந்து தூங்கிய உறக்கமா!
எதைச்சொல்வேன்? என்னவளின் களிப்பில் உறங்கிய உறக்கமா?
காலை முதல் மாலை வரை பணி செய்த உறக்கமா?

பஞ்சு மெத்தை தந்ததா! பாவையால் பாதி உறக்கம் போனதே!
நெடு உறக்கம் உறங்கியே நிறைய நாள் ஆயிற்று!
ஏனுறக்கம் வரவில்லை
எதற்கென தெரியவில்லை!
வயது கூட காரணமோ!
வந்த உறக்கம் நிற்கையிலே!
நித்தம் நித்தம் உறங்கியதால்
செத்து செத்து பிழைத்திருக்கோம்!
எவ்வுறக்கம் மெய் உறக்கம் தெரிவதில்லை எவருக்குமே!

பொய் உறக்கம் உறங்கையிலே,
அது மெய் உறக்கம் ஆகிற்று
உடல், பொருள், ஆவியாக பிரிந்திற்று!

-செந்தில்குமார், ஓமன்

**

கண்ணொடு பிரியாத தணியாத மோகம்
மண் மீது வளர்ந் தென்னில் வசைபாடி மகிழும்
விண் நிலவோ எனுமாறு இரு விழிகள் கெஞ்சும்
பண் இசைத்து மின் பெட்டி தூண்டி எனை மிஞ்சும்,
நுண்னொலியும் - தாண்டி அவள் நினைவெல்லாம் தகிக்கும்,
பெண் அவளோ பார்த்ததினால் சிலிர்த்த தெந்தன் உள்ளம்,
ஆண்டு பல மீண்டு வந்த குரலுந்தன் சாயல்,
அடியேனுக்கு அளித்ததுவோ மெய்யான  உறக்கம்,
கனவினிலோர் - காட்சி அதில் சொன்னதிந்த வசனம்,
எங்கிருந்தாலும் வாழ்க,

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**

கோடையைக் 
கொடைக்கானல் ஆக்கும் குளிரறை
மலர்மணம்
மக்கள்திரள் போற்றும் திருப்புகழ் 
மேகத்தைத் தைத்துப்போட்ட
மென்மெத்தைப் பரப்பில் படுத்துருள்கிறேன்
மெய்யாக உறக்கம் மட்டும் வரவில்லையே...

விழிமூடிக் கிடந்தாலும்
வழிதிறந்து வந்து மனம் கூச்சலிடுகிறது
தூக்கத்தைத் 
துரத்தி

சாளரத்தைத் திறந்து
சாலையைப் பார்க்கிறேன்

மாநகராட்சியின் தூர்வாராத
மகா சாக்கடை ஓரம்
நோய்பரப்பும்
ஙொய்யெனப் பறக்கும் 
சுரீரெனக் கடிக்கும் கொசுக்கள்
சிறுபோதும் ஓய்வற்ற
செவிப்பறையில் அறையும் வாகன இரைச்சல்
கைத்தடியால்
காவலர்கள் விரட்டி அடிக்கும் அச்சுறுத்தல்
வயிற்றுச் சோற்றுக்கு
வழியில்லை மறுநாள் காலை
பிள்ளைக்குட்டிகளுடன் தூங்குது
பிய்ந்த ஆடைகளுடன் ஒரு குடும்பம்
மெய்உறக்கம் அங்கே கண்டேன்

-கோ. மன்றவாணன்

**
தாயின் கருவறையில்
குழந்தையின் அமைதி உறக்கம்..
பிறந்த குழந்தையின் எந்த
பயமுமில்லா புன்னகை உறக்கம்…
ஓடிஆடி விளையாடும் 
குழந்தையின் ஆர்பரிப்பு உறக்கம்…
ஆசிரியர் பாடம் கற்ப்பிக்கையில்
மாணாக்கரருக்கு வரும் அச்ச உறக்கம்…
உழைத்து கலைத்து வரும் 
உழைக்கும் மக்களின் அசதி உறக்கம்…
வாழ்க்கை வாழ்ந்து முடிய வரும்
கடைசி கல்லறை உறக்கம்…
எல்லாமே மெய் உறக்கம்…

-த.கோகிலா

**
மெய்உறக்கம் எழுத எத்தனிக்கையில் 
மெய்யாலுமே ஒரு மெய் உறக்கம்- அது 
காலச்சுமையால் இமைகளின் கிறக்கம்!
அதில்......
'பலஞானம் பிறக்கும் பழவினை மறக்கும்
பலநினைவுகள் பறக்கும்!
கற்பனை சுரக்கும்,
ஆசைகள் அசைபோட,
கடைசிபல் நற நறக்கும்,
பக்கத்து அறைக்குறட்டை 
உறக்கத்தை அறுக்கும்!
அட அடா வடை போச்சே 
என அசடாய் விழித்துதடு சிரிக்கும்!'
உளறல் கேட்டு 
அவளின் உருக்கம் 
இதுக்கிப்பதிலா
ற றா றி றீ ...றௌ வரைக்கும் எழுதியிருப்பின்
ஒன்றாப்பு வாய்ப்பாட்டுக்கு உதவியிருக்கும் !
மெய் உறக்கமும் -கனவும் மறைந்தது !
மெய்ஞானமும் கானாவும் பிறந்தது !

-இளம்பரிதி ஆழ்வார்சாமி

**

தன்னை மறந்து உறங்கும் மெய்
உயிரின் வாடை
எதுவென்று அறியுமோ...!?

உடலை
எங்கேனும் மாட்டிவிட்டு
இளைப்பாறுமோ உயிர் ?

மெய்யாகவே அசைவற்று இருந்தால்
அதன் பெயர் 
உறக்கமில்லை மெய்யின் பொய் ?

தூங்குவதே சாக்காடு
விழிப்பதுவே பிறப்பென்றார்
உலகத் தலைவன் வள்ளுவன்

நல்லப் பொழுதையெல்லாம்
தூங்கி கோட்டைவிடும் அறிவிலி தான் மனிதனென்றான்
பாட்டுக் கோட்டை

மெய்
உறக்கத்தை அணைத்துக் கொண்டதா?
உறக்கம்
மெய்யை பிணைத்துக் கொண்டதா?

கும்பகர்ணணோ
தூங்கியே தொலைத்தாலும்
தூங்காமலிருக்க பாடமானான்
நமக்கு

விண்ணுறங்கி போனாலும்
மண்ணுறங்கிப் போனாலும்
காற்றற்றுப் போனாலும்
தீயின்றிப்போனாலும்
நீரின்றிப் போனாலும் 
நிகழக் கூடுமோ உயிரினங்கள்

ஜனனித்துக் கொள்ளவே
மெய்யணைத்து உறங்கும் மனிதன்
நிஜம் தொலைத்து பொய்ப்பின் தொடர
புறமுதுகுக் காட்டியப்படியே 
ஓடுகிறது வாழ்க்கை....

- கவிஞர்.கா. அமீர்ஜான்

**
தினமும்  பொருள் தேடும் உலகில்,
மனம் போல தினம் அமைந்தால்;
மகிழ்ச்சி மட்டுமே நிறைந்தால்;
மெய்உறக்கம் யாருக்கும் வருமே.

மெய் என்பது, உ டல் என்ற பொருளாக வைத்து;

உயிர் போன பின்பு, , உடல்அசையாது. --- மெய்யுடலோடு;
உயிர் இருக்கும் போதே, கடமைகளை  
[படிப்பு, சொத்து, திரு மணம்……… ]

சரியாகச்செய்தவரெல்லாம், 
மெய் உறக்கம் கொள்[வாரே]பவரே.

(மெய் என்பது, உண்மை என்ற பொருளாக வைத்து)

- களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்

**
பகலும் இரவும் இயற்கையின் நியதியாகும்
அகலும் உறக்கம் பகலின் தொடக்க விழிப்பு
சுகமும் துன்பமும் மாறிமாறி வரும் வாழ்வு
நகமும் சதையும் இணைந்தாலே விரலாகும்

இமை மூடுவது உறக்கத்தின் அடையாளம்
சுமையால் கண்மூடுவது உறக்கமல்லவே
சமைத்திடமுடியாது உறக்கம் செயற்கையாய்
இமைமூடி கனவுலகு செல்வதும் உறக்கமல்ல

மனம் உறங்கினாலே அது மெய் உறக்கமாகும்
இனம் கண்டு கொள்ளலாம் உடல் அசையாது
தினம் நடப்பு அதுவானால் உடல் வலுப்பெறும்
சினமிருந்தால் உடலும் உண்மையாய் உறங்காது

கவலை சூழ்ந்த உறக்கம் உடலையும் அசைக்கும்
சவலைப் பிள்ளையாய் சடுதியில் மாறிப் படுக்கும்
திவலைகள் கண்ணிலும் சுரக்கும் உடல் உறங்காது
அவசர உலகில் மெய்யுறக்கம் நடைமுறைக்குறைவே

தானே மூடும் இமைகளில் மெய் உறங்கும் தானாக
மானே மயங்கும் மெய் உறக்கம் உடம்பில் தவழ
தேனே தித்திப்பே என்று  இனிக்கும் மெய் உறக்கம்
வானே மேக மூடலில் மெய்யுறக்கம் உறங்குமே.

- கவிஞர்  ராம்க்ருஷ்

**
   
மெய் உறக்கம் உயிர்களுக்கு இறையளித்த வரம்
மெய்மறந்து   உறங்க வேண்டும் இரவெகல்லாம்
ஆய்வொன்று சொல்கிறது ஆரோக்கியம் அதுவென்று
ஆம், நாமும் இரவெல்லாம் உறங்க முயல்வோம்
தூக்கம் வரவில்லை என்று ஏக்கமுறுவோர் பலருண்டு
ஏக்க உணர்வாலே  தூக்கம் வராது தவிப்போரும் உண்டு
பாக்கள் புனைந்து இதனை விவரிக்க வார்த்தை இல்லை
பண்பாய் சில சொல்வோம் தூக்கம் வருவது உறுதி
மருதணிப் பூக்கள் கொண்டு மகத்தான திண்டுசெய்து
தலையணை ஆக்கித் தூங்க, தவறாது தூக்கம் வரும்
மருந்துகள், மாத்திரைகளின்றி தூக்கம் வராமல் பலர்
மணிக் கணக்காய் விழித்திருக்க நாளும்நாம் காண்போம்
சாதித்துக் காட்டுவோம் அனைவரும் தூக்கம்பெற
முன்னோர் மேற்கொண்ட உபாயம் மேற்கொள்வோம்
சாதிக்காய், மஞ்சள் , கசகசா , இவற்றில் ஒன்றின்
பொடிபாலில் கலந்து இரவில்குடிக்க தூக்கம் வரும்
      
- கவிஞர்  அரங்க.கோவிந்தராஜன், இராஜபாளையம்

**

உறக்கம்
தாயவள் தாலாட்ட..
சேயது கண்மூட...
பிறந்தவுடன் தாய்மடியில்...
இறந்தவுடன் தாய்மண்ணில் ..
உறக்கம்
உண்டபின் மயக்கமாக....
உழைத்தபின் ஓய்வாக...
உடலுக்கு மருந்தாக..
உணர்வுகளுக்கு தடைபோட..
உறக்கம்
கவலைகள் மறைந்திட..
கனவுகள் பூத்திட...
களைப்பைப் போக்கிட...
கால நேரம் பார்க்காமல்....
உறக்கம்
அனைத்து உயிர்களும் இரவில் அடங்க...
அண்ட சாகரத்தின் நியதியாக..
ஆதவனும் மறைந்து உறங்க..
ஆண்டவனும் ஆனந்தமாய் சயனிக்க ...
உறக்கம்.

- ஜெயா வெங்கட்

**

பள்ளியிலே மெய் உறக்கம் கண்டார்
கல்வி தனை இழந்தார்

பணியிலே மெய் உறக்கம் கண்டார்
பணியை இழந்தார்

அரசியலிலே மெய் உறக்கம் கண்டார்
அரசியல் தனை இழந்தார்

கவலை தனை கொண்டார்
மெய் உறக்கம் தனை இழந்தார்

காவலர்கள் மெய் உறக்கம் கண்டார்
மக்கள் பாதுகாப்பு இழந்தார்

ஆட்சியாளர் மெய் உறக்கம் கண்டார்
மக்கள் நலன் தனை இழந்தார்

இளைஞர்கள் சோம்பலில் மெய் உறக்கம் கண்டார்
வாழ்க்கை தனை இழந்தார்

வணிகர்கள் வணிகத்தில் மெய் உறக்கம் கண்டார்
வருவாய் இழந்தார்

தியானத்திலே மெய் உறக்கம் கண்டார்
இறைவனை கண்டார்

இரவினிலே மெய் உறக்கம் கண்டார்
உடல் நலம் பெற்றார்

இரவினில் மட்டும் மெய் உறக்கம் காண்போம்
உடல் நலம் காப்போம், வாழ்க்கை தனை பெறுவோம்

- ஆம்பூர் எம். அருண்குமார்.

**
காலையில் கனவுகளுடன் எழுந்து
……கவலைகளை வாழ்வில் மறந்து..
மாலை வரையிலும் உழைத்து
……மகிழ்ச்சியை மனதில் நிறைத்து..
இமைகள் ஒன்றாய் சேர்ந்தது
……இரண்டு கண்களும் உறங்கியது..
சுமைகள் எல்லாம் பறந்தது
……சுகமான உறக்கமும் வந்தது..
ஓய்வின்றி உழைத்தது உடலும்தான்
……ஓய்வும் உடலுக்குத் தேவைதான்..
ஓய்வே உடலுக்கு அருமருந்துதான்
……ஓய்வு உணர்த்தும் உண்மைதான்..
உறக்கம் தரும் புத்துணர்ச்சி
……உடலுக்குத் தரும் புதுஎழுச்சி..
உறக்கம் வாழ்வின் நிகழ்ச்சி
……உற்சாகம் தரும் பயிற்சி..

- கவிஞர் நா. நடராசு, கோவை

**

தூக்கமில்லை என்றுசொல்லி ஏங்கி துன்பமுறும் தோழியரே! தோழர்களே
ஏக்கமுடன் இடர் தாங்கும் இளைஞர்களே, பெரியோரே தாய்மரே
ஆண்டவன் நமக்களித்த அன்புக் கொடை இந்த தூக்கம்
அனுபவிக்காமல் விட்டு விட்டால் அறிவிலிகள் ஆய்விடுவோம்
ஆரோக்கியம் தூக்கத்தில்தான் அமைந்துள்ளது ஆய்வு சொல்லுகிறது
உறங்கும் போதுதான் நமது உள்ளுறுப்புக்கள் ஓய்வெடுக்கின்றன
உறக்கமில்லையேல் அஜீரணம், ஏற்பட்டு ரத்த அழுத்தம் உருவாகும்
உடல் உழைப்பு இல்லாதபேருக்கே பெரும்பாலும் தூக்கமினமை வரும்
நடைப்பயிற்சி நாளும் மேற்கொள்வோ மானால் தடையின்றி தூக்கம் வரும்
இரவில் சத்தான உணவு அளவோடு உண்டால் சுகமான  தூக்கம் வரும்
இரவில்மன அமைதியோடு உறங்க போனால் இனிக்கும்தூக்கம் எப்போதும்
ஆசனங்கள் செய்து வந்தால் அப்போதும் இனிமயான தூக்கம் வரும்
மூச்சுப்பயிற்சி செய்து பின்படுக்க போவோமாயின் முழுதாய் வரும்தூக்கம்

- கவிஞர் ஜி.சூடாமணி

**

சுமையதை இறக்கி வைத்து
இமைகள் கண்களை மூடிட
உள்ளமது ஓய்ந்திட
உடலது சாய்ந்திட,
இனமோ மொழியோ
இடமோ பேதமின்றி 
சுற்றியுள்ளதை அறியாது
சுற்றும் பூமி சுழன்றிட  
சுவாசமது சீராக
சுகமது மெல்ல வருட
மெய் உறக்கம்  கொள்வது
தெய்வம் தந்த வரமன்றோ ?

- கே.ருக்மணி, கோவை

**

உலகறியும்முன் தாயின் கருவறையில் மெய்யுறக்கம்;

பால்குடித்த வண்ணமாய் தாய்மடியில் மெய்யுறக்கம்;
தோள்மீது சாய்ந்தவண்ணமாய் தந்தையிடம் மெய்யுறக்கம்;
பாட்டியின் புடவைக்கொண்ட தூளியிலே மெய்யுறக்கம்;
சிறுவயதில் ஒரே போா்வைதனில் - என்
உடன்பிறப்புகளின் அன்பான அரவனைப்பில் மெய்யுறக்கம்;
காதல்கொண்ட வேளையிலே காதலியின் மடியில்
கனவுகளைச் சுமந்த இனிமையான மெய்யுறக்கம்;
வகுப்பறையில் பிடிக்காத பாடம் வரும்போதெல்லாம்
தன்னை மறந்த நிலையில் மெய்யுறக்கம்; 
ஜன்னலோரம் காற்று வாங்கியபடி - பயணத்திலே
இனிய பாடலைக் கேட்டவண்ணம் மெய்யுறக்கம்;
கிராமத்து வயலிலே பணிகளை முடித்தகளைப்பில்
வரப்பினையே தலையனையாக்கி உறங்கிய மெய்யுறக்கம்;
திருவிழா இரவில் கூத்தினைக் கண்டுகளித்தவண்ணம்

விடியலையும் மறந்து தெருதனிலே மெய்யுறக்கம்;
மரம் சூழ்ந்த தென்றல்வீசும் தோட்டத்தில் 
நாற்கட்டிலில் வரும் அருமையான மெய்யுறக்கம்;
இன்னும் கொஞ்சம் இரவு நீளாதாயென
ஏங்கிக்கிடக்கும்  மழைக்காலத்தில் ஈரக்காற்றில் மெய்யுறக்கம்;
உழைத்த களைப்பில்வரும்  ஆழ்ந்த மெய்யுறக்கம்;
உடல்நோய் தீர நிம்மதியான மெய்யுறக்கம் -
நாட்கள் செல்ல செல்ல மெய்யுறக்கங்கள்யாவும் -
பொருளைத் தேடலிலும் காத்தளிலும் குறைகின்றனவே...
மரணமெனும் நீண்டதொரு மெய்யுறக்கம் வரும்போது
மண்ணுலகில் எதுவும் நிரந்தரமில்லையென புரிகின்றனவே...!

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி

**

தீண்டாத சோகங்கள்;
மனம் ஏங்கா பாவங்கள்;
கொக்கரிக்கா வீரங்கள்;
இறை தேடும் ராகங்கள்;
இளமை கலக்காத கனவுகள்;
நிந்திக்காத உறவுகள்;
சந்திக்காத தோல்விகள்;
வினை கொள்ளாப் பகைகள்;
வேடமிடா மனங்கள்;
பாசம் அளந்த மக்கள்;
செலவில்லா திருவிழாக்கள்;
ஆடம்பரம் இல்லா அழகுகள்;
ஊர் கெடா நம் பண்பாடுகள்;
உலகம் மகிழும் பண்டிகைகள்;
தாழ்மையைத் தூக்கி எறிந்து;
மேன்மையாய் நம்மை உயர்த்தி;
கடவுளின் அருளோடு;
கண் மூடிய உடனே! தூங்கும்;
கலை கொண்ட மனிதனின்; 
தூக்கம் மெய் ஆகும்..

- ப.வீரக்குமார், திருநின்றவூர்.

**

மெய் உறக்கத்தால் 
உன்னதமாக உயர்வாக
அழகாக அன்பாக
என்னுள் நானே
புதிதாகப்
பிறந்து கொண்டேன்

உழைப்பின் 
வெற்றிக்கு கிடைத்த
பொக்கிஷமாய்
ஆழ்ந்த உறக்கம் என்
கண்களுக்கு கிடைத்தது
சில மணி துளிகளில்

மெய்உறக்கத்தை நேசிக்காத
மனிதன்
எதிா்த்துப்
போராடிக்கொண்டிருக்கிறான்
ஏராளமான
நோய்களோடு

மெய் உறக்கம் அது
அளவாக இருந்தால்
மனம் சிறப்பாக இயங்கும்
மெய் உறக்கம் 
அதிகமானால் அதுவே
மனதை மரணிக்க செய்யும்!

வெளிநாட்டில் வேலை செய்யும்
தன் நண்பனுக்கு 
மெய் உறக்கத்தின் பயன்பாடு
குறுஞ்செய்தி
அனுப்பினான் இரவு ஊழிய
நண்பன்

மெய் உறக்கத்தால்
எனது கவிதைச் சாலை
இடைநில்லாப் பயணமானது
எனது கனவுத் தோட்டம்
வண்ணமயமானது.

- குரு ரேஷ். ப

**
பொய்யின்றி மெய்சொல்லி வாழு தற்கு
 பொறுமையொடு சிந்தனையும் சேர வேண்டும்.!
மெய்யுடலை காக்கவேண்டி ஆசை மூன்றும்
 மலங்களாம் மூன்றுமதைத் துறக்க வேண்டும்.!

மெய்வாய்கண் மூக்குகாது செவியி வையை
 மூலவனால் பெற்றதெண்ணிப் பேணிக் காப்பீர்.!
அய்யாவே இதைத்தானே பாது காக்க
 ஆன்றோரும் சான்றோரும் அன்றே சொன்னார்.!

பொய்யுறக்கம் இல்லாது போக ஆழ்ந்த
 புலனடக்கம் ஐந்துமதை வழுவ வேண்டும்.!
மெய்யுறக்கம்  தேவைதான் இல்லை யென்றால்
 மனத்தினிலே சிந்தனைகள் எழாதும் போகும்.!

உய்ந்துணர்ந்து செய்கையினால் ஓம்பி னாரே
 உண்மையாக வாழ்ந்தபல ஞான சித்தர்.!
மெய்ஞானம் உணர்ந்தஞானி மாந்தர்க் கெல்லாம்
 மிகவுயர்ந்த இலக்கியத்தால் எடுத்து ரைத்தார்.!
 
ரோகத்தை உருவாக்கும் உணவை உண்டால்
 ராத்திரியில் தூக்கமுமே கெட்டுப் போகும்.!
தேகத்தைச் செம்மையாக வைப்ப தாலே
 தீங்கின்றி நோய்களுமே விலகிப் போகும்.!

தாகமுடன் பசிமற்றும் நல்ல எண்ணம்
 தாமாக வரவேண்டும் தூண்ட லின்றி.!
சோகங்கள் துக்கங்கள் விலக்கி னாலே
 சுகமான தூக்கத்தைப் பெறுவீர் நீங்கள்.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி  

**

புகழுக்கு மயங்காமல்;
இகழுக்குக் கலங்காமல்;
எல்லாம் சமமானதாய்;
உள்ளம் சுயமானதாய்;
தொல்லையிலா உள்ளத்துக்குள்;
அன்பே ஆதாரமாய்;
அதுவே, புத்தனின் பேராசையாய்;
கொள்கையை ஏற்று;
கோணலை மாற்று;
எல்லாம் நாணல் போலானால்;
சுழியம் வாழ்க்கை ஆகும்;
இனபமும் துன்பமும் ஒன்றாகும்;
ஒன்றான நிலையிலே;
மயக்கம் வராது, தயக்கம் வராது;
தடுமாற்றம் கொள்ளாது;
தன் நம்பிக்கையைக் கூட்டித் தரும்;
உறக்கத்தில் உளறல் இல்லாமல்;
இரவில் கண்விழிப்பு இல்லாமல்;
மெய்யாய் மனம் அமைதியாகும் ;
துயிலும் துணை செய்யும்;
கல்க்கமும் , விலக்கமும் காணாமல்.....

- முகில் வீர உமேஷ்,

**

என்னவளே..!
உறக்கத்தில் கூட எங்கே 
உன்னை நினைக்க இயலாது
போய்விடுமோ என்ற 
அச்சத்தில், முன்பு,
மெய்யுறக்கம் துறந்து
இரவுகளிலெல்லாம் 
உன் நினைவில்
மூழ்கிக் களித்தேன்..

இன்றோ உன் மாளாப் 
பிரிவுத் துயரில் 
மெய் உறக்கம் வாராது
இரவெல்லாம் உன் 
நினைவுகளில் புழுங்கித் தவிக்கிறேன்..!

 - ஆதியோகி

**

காலம் கடந்த கனவுலகத்தில் கால்கடுக்க திரிந்தேன்
காத தூரம் எரியும் பிணங்களின்
சடசட சப்தத்தில் தோலும் முடியும் எலும்பும் வெந்து உருக  
நீர் -நீருடனும், மண் - மண்ணுடனுமாய் கலந்து இணைய, 
என் உடலை நானே பார்த்த வண்ணம்
இன்னும் இரண்டு மணி என்று கால அளவு சொன்னான்
சுடுகாட்டுக் காவலாளி - பின் யாரோ வந்தார்கள், 
கலங்கி மங்கலாய் தெரிந்தார்கள், அங்கம் பொறுக்கி 
சங்கமத்தில் இடுவதற் காம்,
விட்டுவிடும் ஆவி சுட்டு விடும் நெருப்பு
என்று நினைவிற்கு வந்தது, யோசித்துப் பார்த்தேன்
நெருப்பு வருடியது - மயிலிறகாய், சுடவும் இல்லை
படவும் இல்லை, ஏதோ - எரிந்தது
யாரோ தெரிந்தார்கள், எங்கே போவது
இப்போது என்றேன்?
உறங்குவது போலும் சாக்காடு 
உறங்கி விழிப்பது வாம் பிறப்பென்றார்
ஆசான், ஆறு மணி அலாரம் அடிக்க
மெய் உறக்கம் கலைந்தேன் 
அடுத்த நாள் - அலுவலுக்கு

- கவிதைப் பிரியன்

**

மெய் உறக்கம் 
மரணத்தின் குழந்தை!
சொர்கத்திற்கு 
அழைத்துச் செல்லும் 
இன்பச் சுற்றுலா!

தூக்கம் 
துக்கம் விரட்டும் 
மருந்தில்லா மருத்துவம்!
மனிதகுளத்தின் மகத்துவம்!

மெய் உறக்கம் 
மன நலத்தின் குறியீடு!
பசி 
உடல் நலத்தின்  குறியீடு!

பசியையும்  தூக்கத்தையும் 
ஏழையால்  
விற்க முடியவில்லை!
பணக்கரனால் 
வாங்க முடியவில்லை!

கடந்த காலத்தையும் 
கண் உறக்கத்தையும் 
காசு கொடுத்து வாங்கும் 
பணக்காரன் 
இதுவரை 
பூமியில் தோன்றவில்லை!

தூக்கம் 
மரணம் எனும் 
இறுதிப் போட்டியின் 
பயிற்சியாளன்!
 
சோர்வை நீக்கி 
சுருசுருப்பூட்டுவதும்! 
மேனி வலியை நீக்கி 
மனவலிமையை கூட்டுவதும் 
மெய் உறக்கம்!

ஒருவனை 
பார்த்த உடன் 
பயம் வந்தால் 
அவன் பலசாலி!
ஒருவன் 
படுத்தவுடன் 
தூக்கம் வந்தால் 
அவன் பாக்கியசாலி!

நீதிமன்றத்தில் 
மெய் உறங்கினால் 
நிரபராதிக்கு வருமா?
மெய் உறக்கம்!

-கு.முருகேசன்

**

மெய் என்றால் உண்மை 
மெய் என்றால் உடல் 
உறக்கம் உடல் தழுவினால் 
ஆரோக்கியம் கிடைக்கும் 
உறக்கம் உண்மை தழுவினால் 
உள்ளம் அமைதி பெறும் !

அவன்
வசிப்பது மாளிகையில் 
உண்பது அறுசுவை உணவு 
குளிரூட்டப்பட்ட அறை 
மலர் மெத்தையில் 
மெய் உறக்கம் இல்லாமல்
பொய்யாக இமைகள் மூடி
மனநிம்மதியில்லாமல் 
புரண்டு கொண்டிருந்தான் ! 

அவன் 
வசிப்பது மண்குடிசையில் 
உண்பது பழங்கஞ்சி 
தரையோ மண்தரை
கிழிந்த கோரைப்பாயில் 
உழைத்து களைத்த மெய்
மெய் உறக்கம் தழுவி 
பொய் உலகை மறந்தான் !

- பொன்விலங்கு பூ.சுப்ரமணியன் 

**

குளிருட்டப்பட்ட ஓர் அறையில் மட்டுமே 
கட்டுப்படும் உறக்கம் அது பொய் உறக்கம் 
செறிவூட்டப்பட்ட ஓர் சிந்தனைச் சிந்தைக்கு 
கட்டுப்படும் உறக்கம் அது தான் மெய் உறக்கம் 
விண்ணில் பறந்தாலும் உன் விழியிரண்டை 
விரும்பாதது தான் பொய் உறக்கம்  
எண்ணில் அடங்கா துயரங் கொண்டாலும் 
உன்னைத் தோழனைப் போல்த் தழுவிக் கொள்ளும் 
உறக்கம் தான் மெய் உறக்கம் 
தென்னையின் அடியில் கயிற்றுக் கட்டிலில் ஓங்கி 
அடித்த காற்றும் ஓர் ஒலி மாசாகி அதையும் 
ஓர் பொய் உறக்கமாக்கியது 
அன்னையின் மடியில் மெய் மறந்து மெய்யான 
அன்பில் கேட்ட அந்த மெல்லிசை 
முன்மொழிந்தது என்னுள் ஓர் மெய் உறக்கம் 

 - கார்த்திக் பாரதிதாசன் 

**

தங்கங்கள் பொலிவிழக்க,வைய மெங்கும் 
    தகரங்கள்  பொன்னெனவே மின்னு தல்,வெண் 
சங்கெனவே சுண்ணாம்பு மின்னு தல்,வெண் 
    சங்கெல்லாம் நிறமிழந்து மங்கு  தல்போல், 
அங்கமது மெய்யுறக்கம் கொள்ளல் போன்று,
     அவரவரும் பொய்யுறக்கம் பூண்டு வீணாய் 
எங்கெங்கும் நடிக்கின்றார் தன்ன லத்தில்; 
     எவர்இதனால் இறப்பின்றி வாழ்த லாகும்?

தவறுகளைத்  திருத்தாமல் கொள்கை  தம்மை 
    திருத்துவதால் எப்பயனும் எளிய வர்க்கு 
தவப்பயனாய் நல்வினைகள் விளைவ தில்லை;
     தண்ணீர்க்குள்  நின்றுகொண்டு தாகத் தாலே 
அவதிபடும் பெருங்கூத்தாய் வாய்த்தி  றந்து 
     தவளைகளாய் கத்துவதால் ஏது நன்மை?
அவதூறு  பேசியேதான்  மெய்யு றக்கம் 
     அனுசரித்தல் பாங்காய்ப்பொய் யுறக்க மேனோ?

அகன்றதொரு பெருவானாய்  அகல மாக 
    அண்ணாந்து படுத்தவாறு கண்தி றந்து 
பகல்பொழுதில் மெய்யுறக்கம் கொண்டாற் போல 
    பொய்யுறக்கம் கொண்டுள்ள  கீழ்ம னத்தால் 
நகமளவு பொய்நடிப்பால் விளைவ தென்ன?
   நாட்டினிலே மெய்யுறக்கம் கொள்ளு தல்போல் 
அகம்முழுதும் மெய்ம்மையாவும்  நிறைந்தி ருந்தால் 
     அகிலமெலாம் கீழ்மையின்றி வாழ்வு ஓங்கும்! 

   -நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் 

**

மெய்யோடு மெய் சேர்ந்து
மகிழ்ந்துக் களித்து.. களைத்து
பொய்யாக ஊடல் கொண்டு
பின் கொஞ்ச நேரத்திலேயே கூடலுடன்
அன்பானவள் உன்னுடன் 
ஆயுள் முழுதும்
பண்பாகப் பெருவாழ்வு
வாழ வேண்டும்.. என்றும் உன் மனம்
ஆள வேண்டும் என்றும்
பேராசை கொண்டிருந்தேன்
பாவை நீயும் அப்படியேவென
பார்வையில் புலப்படுத்தினாய்..!
தேவைப்படும் எதற்குமென
தாலிசெய்யவும் சொல்லியிருந்தேன்!
காலிசெய்து போனது நம் காதலை
சாதியெனும் அரக்கன்..எத்தனை
சாதித்தாலும்.. எவ்வளவு நூல்களை
போதித்தாலும் ..இன்னும்
கறையாய் படிந்த சமூகத்தின்
குறைகளே..சாதிப்பிரிவுகள்!
ஏதாவது ஒரு ஜென்மத்தில்
மீண்டும் நாம் பிறப்போம்.. ஒரே சாதியில்!
ஒன்றாகக் கலந்தபின்
நன்றாக உறங்கட்டும் நம் மெய்.!

- கவுதம் கருணாநிதி, திருச்சூர், கேரளா

**

ஓடி ஓடி உழைத்திட்டேன் 
உறக்கத்தை தள்ளிவைத்து 
மூத்த மகன் படிப்புக்கு 
முதல் தடவை கண்விழித்தேன் 
மத்த மக்கள் படிப்புக்கு 
மொத்தமாய் கண்விழித்தேன் 

கண்விழிச்சு உழைச்சதால 
கஷ்டமெல்லாம் மாறிப்போச்சு 
மூத்த மகன் இப்போ 
முத்தான கலெக்டர் ஐயா 
இளைய மகள் இப்போ 
இதய மருத்துவராம் 

மூத்த மகள் இப்போ 
மக்களோட வாத்தியாராம் 
இளையமகன் அவனும் 
இன்ஸ்பெக்டர் ஆகிவர 
கண்டேனே மெய் உறக்கம் 
கண்ணையும் மூடிவிட்டேன் 

கண்விழித்து நான் கண்டா 
கனவும் பலித்ததய்யா 
கண்மூட இப்போது 
கணமும் வந்ததய்யா 
பார்.விஜயேந்திரன் 
கருங்குழி 

- விஜயேந்திரன் பார்த்திபன்

**

நல்ல  உறக்கம்  உற்சாகத்தில் 
சொல்லாமலே வரவேற்கும் 
கள்ளமில்லா  நண்பன் 
அதன்  பெயர்தான் "மெய் உறக்கம்"
இந்த  "மெய்  உறக்கம்"  
கிடைத்துவிட்டால்  வேறு என்ன 
வேண்டும்..................
பொய்யாக  உறங்குபவரை எழுப்பவே முடியாது!
மெய் உறக்கம்  கொண்டோரை 
தொட்டவுடன்  எழுந்துவிடுவார்!
நடிக்க  தெரியாத  உள்ளங்களை
துடிப்பான "மெய் உறக்கம்"
தேடி  வரும்!.............
வயறு  நிறைய  உணவு  கிடைத்தால் 
ஓடி  வருமே  "மெய் உறக்கம்"
மெய்  உறக்கம்  கிடைத்தால்  அதுவே சொர்க்கம்
பொய் உறக்கம்  கொண்டோர் 

- உஷா முத்துராமன்

**

சிறு  குழந்தையாய் மணல்  வீடு  கட்டுவதும்,
பள்ளி  பருவத்தில்  கல்லை  கொண்டு  மாங்காய் அடிப்பதும் ,
கால் எட்டா சைக்கிள் ஏறி குரங்கு பெடல் செய்வதும் ,
வாலிப வயதில் நாம் நேசிப்பவருக்காக காத்து நிற்பதும், 
படிப்பிற்கோர் வேலை என்றில்லாமல் படிப்பிற்கேத்த வேலையும்,
அதில் தகுந்த அதிகாரமும்,
அன்பான வாழ்க்கையும் ,
நிறைந்தமனமும்,
கடைசியில் அமைதியான நித்திரையும்
கிடைத்தால் இலக்கு, கலைந்தால் கற்பனை 
அடைந்தால் லட்சியம், அணைந்தால் ஆசை 
கனவே கலையாதே .
நீயே என் உயிர் மூச்சு, 
நீ இருக்கும் வரையிலேயே நான் .
நீ ஓய்ந்தால்,
அன்று என் உறக்கமும் ஆகுமே 
மெய் உறக்கம்
கனவே கலையாதே !!

- பிரியா ஸ்ரீதர்

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com