கடந்த வாரத் தலைப்பு ‘காதலின் வானிலை’வாசகர்களின் கவிதைகள்!

பெண்ணே பெண்ணேஉனை  நினைத்து,
கடந்த வாரத் தலைப்பு ‘காதலின் வானிலை’வாசகர்களின் கவிதைகள்!

பெண்ணே பெண்ணே
உனை  நினைத்து,
மெரினா கடற்கரை
மாலைக்காற்று,
கவிதை ஊற்றாய் மாறாதா?

கண்ணகி சிலையின் அருகில்,
காவியம் இன்னொன்று தோன்றாதா?

பாரதி இல்லக்கவிதைகள் எல்லாம்,
சாரதி தேரில் வாராதா?

கோட்டை கொத்தள வாயில்களெல்லாம்,
உன்னை நினைத்துக்கூவாதா ?

எழிலகம் உந்தன் எழிலைக்கண்டு,
ஏதென்சுக்குப்போகாதா?

அண்ணாச்சதுக்கம் அனாஇவானோவா உனை,
அழகிய தமிழில் வார்க்காதா?

பாரிமுனையெலாம் துறைமுகம் சென்று,
காதல் கவிதை இறக்காதா?

வேற்றுமையிலும் ஒற்றுமை காண,
உந்தன் மனம் இறங்காதா?

என்னை உந்தன் காதலனாய் ஏற்க,
உந்தன் மனம் இறங்காதா?

நீ எனை மறந்தாலும் நான் மறியேன்,
நான் மனிதனல்ல

மே தினம் கொண்டாட
நான்,
மார்க்சிஸ்ட் அல்ல 

உன் மனதில் அடைக்கலம்
தேடும்,
உழைப்பாளர் சிலையின் வியர்வைத்துளி 

முயற்சித்துக்கொண்டே இருப்பேன்,
உன் மனதை அடைய;
என் காதலை நீ உணர

- ம.சபரிநாத்,சேலம்

**

காதலின் வானிலை வசந்தம் ஆகியே 
கடிமலர்க் காடும் கண்களில் விரிந்திட  
நேசம் ஏந்திடும் மானிட செல்கள் 
வாசம் வீசிடும் வானவில் வாசலில்!

ஏதலம் அதனில் ஏற்றியக் காதல்
ஏக்கப் பெருவெளியில் நிறைந்திடும் தருணம்
பார்க்கும் காட்சியில் பரவசம் பரவியே 
பச்சை விரித்திடும் பசுமைக் காதலும்!

நோக்கும் விழிகளில் பூத்திடும் காதல்
பூக்கும் முன்னே புலன்களைத் திறந்திடத்  
தாக்கும் பிணிகள் தானாய்த் தீர்ந்திட 
வாக்கும் வாழ்வும் வரமாய் மாறிடும்!

- கவிஞர். மு. திருமாவளவன் 

**

தலைமுறை இடைவெளி பெரிதாகி விட்டது 
தலைவரை குடும்பத்தவரை மதிப்பதில்லை இப்போது ! 

மாதா பிதா குரு மதிப்பதில்லை இப்போது 
மனம் போன போக்கில் இளையதலைமுறை ! 

காது கொடுத்து கருத்தைக் கேட்பதில்லை 
கண்டபடி பேசிடும் இன்றைய இளையோர் ! 

பணத்தின் மதிப்பை அறியவில்லை இவர்கள் 
பணத்தை தண்ணியாக செலவழித்து வருகின்றனர்! 

இரவு பத்து மணிக்கெல்லாம் தூங்கிடுவோம் அன்று 
இரவில் விழித்து பகலெல்லாம் தூங்குகின்றனர் இன்று ! 

தெருவிற்கு ஒரு தொலைபேசி இருந்தது அன்று 
தனி நபருக்கு பல அலைபேசி ஆனது இன்று ! 

ஊதியம் குறைவென்றாலும் நிம்மதி இருந்தது அன்று 
ஊதியம் மிகைஎன்றாலும் நிம்மதி இல்லை இன்று ! 

நவீனம் இல்லாவிட்டாலும் இன்பம் இருந்தது அன்று 
நவீனம் இருந்தாலும் இன்பம் இல்லை இன்று ! 

பெற்றோரை நன்கு மதித்து வாழ்ந்தனர் அன்று 
பெற்றோரை மதிப்பதே இல்லை இன்று ! 

அண்ணன் தம்பி உறவு அன்பானது அன்று 
அண்ணன் தம்பி இன்றி தனியாளானது இன்று ! 

ஓடியாடி விளையாடி மகிழ்ந்தனர் அன்று 
ஒரேயறையில் அலைபேசி விளையாட்டு இன்று ! 

வானொலியில் பாட்டு கேட்டு மகிழ்ந்தனர் அன்று 
வானொலி மறந்து தொலைக்காட்சித் தொல்லை இன்று ! 

நல்ல தமிழில் நாளும் பேசிவந்தனர் அன்று 
நாவில் தமிங்கிலமே தவழ்கின்றது இன்று !

- கவிஞர் இரா .இரவி

**

நீல  வானம் போல்,
சஞ்சலம்  இல்லாமல்  பறந்து  விரிந்த  என்  இதயத்தில்,
இள  வேனிற்  கால  சூரிய  கதிர்  போல  நீ  வந்தாய்!

உன்னை  பார்த்தது  முதல்,
உன்னாலே, 
என்  மனவானில்  சற்றென்று  வானிலையும்  மாறியது!

நீ  சிரித்தாய், 
மனதை,
சில்லென்று  ஒரு காதல்  காற்று  வருடியது!

என்  மனம் ,
என்னை  அறியாமலேயே   மின்னலை  துரத்தும்  இடிபோல,
உன்னை  தேடியது!

என்  காதலை,
உன்னிடம்  சொல்ல  நான்  ஒத்திகை  பார்க்கையில், 
ஒரு  புயலே  அடித்து  ஓய்ந்தது,  என்னுள்!

ஒரு  தலை  காதலாக  இருந்த  என்  காதலை ,
நீ  ஏற்ற  பொழுது, 
பருவ மழையின் சாரல் போன்று என் மனம் குளிர்ந்தது!  

விண்ணுலகத்தின்  வாசலாய்  வண்ண  வானவில்  தோன்றுவது போல்,
என்  காதலே , என்  வாழ்வின்  வானவில்லே, 
நீ  வந்த  பின்னே  என்  வாழ்வும்   ஆனது  வசந்த  காலமே!!

இந்த  காதல்  வானிலை  மாற்றமும் எனக்கு  உணர்த்தியது,
நம்  காதலுக்கு,  
வானமே  எல்லை  என்று!!

- பிரியா ஸ்ரீதர்

**

காதல்  -  அது 
மோதினால்  வரும்  வானிலை அறிக்கை
மிக பெரிய சூறாவளி!
கண்ணும்  கண்ணும்  நோக்கும் காதல்
விண்ணும் மண்ணும்  முத்தமிடும் 
அழகிய  மழை போல  குளிர்ந்து 
பழகிய  உள்ளங்களையும்  குளிர  வைக்கும்!
இதயமும் இதயமும்  பேசும்  காதல் 
பந்தய  குதிரைமேல்  அமர்ந்து 
வெற்றி வாகைச்  சூடும்  அமரக்காதல்!
காதலில்  வானிலை  அறிக்கை 
படிக்க  வேண்டுமா?
துடிக்கும்  இதயத்துடன்  பேசுங்கள்!
வெயிலும்  மழையும் மாறி மாறி 
சொல்லும் வானிலை அறிக்கை 
கேட்கும் மக்கள்...
காதல் வானிலை அறிக்கை  
கேட்டு   வெயில்  போல 
சுடுச் சொல் சொன்னால்  என்னாவது?  
காதலை காயப்படுத்தும்  சமூகத்தில் 
சாயம்  பூசும்  காதல்களே அதிகம்!
உணர்ந்து  உண்மையறிந்து  காதலித்து 
மகிழ்ச்சியான  வானிலை  அறிக்கை 
வாசியுங்கள்! நேசியுங்கள்
உண்மை  காதலை!

- உஷாமுத்துராமன், மதுரை 

**

மாமாவின் வீட்டிலே
மகிழ்வுடன் பூத்தது
மாதக்கணக்கிலே எந்தன்
மனதுக்குள் நிலைத்தது.

அறிவுச்சுடர் ஒளி வீசும்
ஆற்றல்கள் தந்தது
அகராதி தேடாமலே
அர்த்தம் பல தந்தது.

அஸ்திவாரம் இல்லாமலே
ஆனந்தம் முகிழ்த்தது
பார்வைகள் பரிமாற்றம்
பலநாட்கள் இனித்தது.

என்னவள் எனக்குத்தான் என
என்னுள்ளம் துடித்தது
ஏதும் மாற்றம் வந்திடுமோ என்ற
எச்சரிப்பும் தலை தூக்கியது.

காதலின் வானிலையில்
கடும் புயல் மையம் கொண்டால்
காக்க இனி யார் வருவார்?!
கடவுள் சித்தம் யார் அறிவார்?!

சொக்கநாதர் துணை இருக்க
சொந்தம் விட்டு விலகிடுமோ?
சொர்க்கம் காட்ட  வந்த மயில்
சோகம் காட்டி நகைத்திடுமோ?!

இந்தவாறு மனம் நினைக்க
நொந்த வாழ்வின் நிலையுணர்ந்தேன்
காதலின் வானிலையில்
கடுகி வந்த இன்ப மழை
காலமெல்லாம் எனை நனைத்து
கல்யாண வாழ்வு வரம் தந்ததையா.

- புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்

**

நீலவண்ண வெளியில்
இதயம் உலவும் எண்ணங்கள்
நழுவித் தழுவும் மேகங்கள்.
பூத்ததுபிறை சிரித்தது புருவங்கள்
எண்ணிக்கைதான் முரண்.
மின்னல் அவள் தோரணம்
மேகம் தாங்கும் மண்டபம்.
இடி இடித்த மேளங்கள்
அர்ச்சுன ரதத்தின் தாளங்கள்.
கண்சிமிட்டும் விண்மீன்கள்
கதைகள் சொல்லும் பாட்டிகள்.
பறம்புக்காட்டில் பாரியின் 
தேரில்சிரித்த கொடிமுல்லையே 
வந்துசிரிக்கும் வானவில்.
பாரி சூடிய ஆதினி
அவள் கொண்டுமுடிந்த கொண்டையே
கறுத்துத்திரண்ட கொண்டல்கள்.
மழையில்துளிர்த்த‌ முதல் துளிகளே
சிப்பியில் உயிர்த்த‌ முத்துக்கள்.
இதுவெல்லாம்
ஏதோ பொழுதுகளில் 
நீலவண்ண வெளியில்
நீயும் நானும் 
சொல்லாடிய மொழிகள்
நீ மறந்தும் இருக்கலாம்.
ஆனால்
நாமும் தொலைந்த கணங்களே
மகிழ்ந்து முகிழ்ந்த கணங்கள்
மறக்க இயலாது.
மறுக்கவும் இயலாது.
தாலாட்டும் வானம்தானே சாட்சி !!

- ரமேஷ் கோபாலகிருஷ்ணன், பீனிக்ஸ், அமெரிக்கா

**

உள்ளத்தில் புயல் அடித்தது !
இருந்தும் உதடுகளுக்கு அமைதியாய்
ஒரு மௌனப்பூட்டு !!
பெயர் தெரியாத இலட்சம் பூக்களின்
வாசம் கூட்டி, வசந்தம்
நாசிக்குள் செலுத்தியது !!
உடலெங்கிலும் ஒரு வெப்பம் !
இருந்தும் சில பனிக்கட்டிகள்
படரும் மூளைக்குள் !!
மேகத்திலிருந்து இறங்கி
இடியும் மின்னலும்
இதயத்தில் நுழைந்தது !!
படபடத்துக் குழைந்தது !!
மெதுவாய் அவள்
என்னைத்தாண்டிச்சென்றாள்,
வியர்வை மறந்து,
மழை நீரை சுரக்கத்தொடங்கியது
என் உடல் !!
இப்படி , இப்படி,  எனக்குள் மாறிவரும்
வானிலைக்கு பெயர் தான் காதலோ ?  

- கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி, புதுவை

**

நாசூக்காக நாசி பக்கம் வீசி போன 
வாசம் வந்து பாசமாக பேசு மென்றோ 
காதலின் வானிலை ஏசுதிங்கே பதில் 
கூற வியலாது வாய்க் கூசுதிங்கே 

விரும்பியவை கிடைத்துவிட்டால் 
கோர்த்திடுவார் சரமாய்ப் புகழாரம் 
கிடைக்காத பட்சத்தில் வீதியில் 
இறங்கி வந்து அடித்திடுவார் டமாரம்

கண்ணுக்கு தெரிவதில்லை 
நெஞ்சிக்குள் இருப்பதெல்லாம்
பஞ்சிக்கும் நெருப்புக்கும் பகை 
புகையாத இடமில்லை ஆனாலும் 

வஞ்சி மகளோ வஞ்சித்து விட
பஞ்சாய்ப் பறக்குதடி காதலின் 
வானிலை அறிக்கை யிட்டதனால்
மழைவருமோ புயல்வருமோ சேர்த்த

மானம் மரியாதை கௌரவம் 
நொடிப் பொழுதில் பறந்திடுமோ 
அவரவ ரச்சமே கயிறாகி திரிந்து 
எவரெவர் கழுத்தை நெருக்குமோ

பொருத்திடுவோம் பொங்கி வழியும் 
எரியும் விறகை இழுத்திடும் ஞாயா லயம் 
அனைத்து காதலின் வானிலை 
செய்திகள் தமர்ந்திடும் தன்னாலே 

- ஆபிரகாம் வேளாங்கண்ணி

**

ஆகாரம் 
விளைந்திட
அள்ளி தந்திடும்! 

ஆழ்க்கிணற்றின்
 அடிவயிறோ காய்ந்திருக்க!

பசுமைப்பாய் விரித்திட 
பாய்ந்திடும் நதி,ஆறு பாலைவனமாகி இருக்க!

குளம்,குட்டை குப்பைத்தொட்டி,கழிவறை  ஆகிப்போயிக்க!

நிலை கண்டு 
நிலத்தினில் நின்று
நிழல் - உயிரின் சுவாசம் மேகம் தீண்ட!

நீலவானம் 
நிறம் மாறி
காதல் வானிலை'யில் 
கருவண்ண ஆடை மாற்றி!

நொடியில் 
மல்லிகை சரம் சூடி! 

மோகத்தினில் 
பொழிந்திடும் முத்தமழையோ! 

வழிந்தோடியது 
வையகமெங்கும்
வயல்வெளி'களை தேடி!

**

ஏக்கத்தில்   பைத்தியம்போல்   உளற   வைக்கும்
    ஏளனமாய்   ஊராரைப்   பார்க்க   வைக்கும்
தூக்கம்தாம்    வாராமல்   புரள   வைக்கும்
    தூயபாலும்   பழமெல்லாம்   கசக்க   வைக்கும்
நீக்கமற   யார்முகத்தைப்   பார்த்த   போதும்
    நினைத்தவரின்   உருவந்தான்   தெரிய  வைக்கும்
தீக்கனல்தாம்    பட்டவுடல்   தகித்தல்   போல
    திரும்பதிரும்ப   நினைவுநெஞ்சைத்   துடிக்க   வைக்கும் !

உடல்தன்னை    இளைக்கவைத்துப்   பெண்கள்    மேனி
    உள்ளயெழில்   பசலையாக    மாற   வைக்கும்
இடம்தேடிச்   சந்திக்கத்    தோழி   தோழன்
    இருவரையும்    உதவிக்காய்க்   கெஞ்ச   வைக்கும்
படபடப்பில்   உடல்தளர்ந்து  நடுங்கிக்  கைகள்   
    பணிகளினைத்   தவறுகளாய்   செய்ய  வைக்கும்
மடமையொடு   மறதிவரும்   சொன்ன   சொல்லை
    மறுபடியும்   மறுபடியும்    சொல்ல   வைக்கும் !

அருகருகே   அமர்ந்தபடி   பேசிப்   பேசி
    அலைபாயும்   மனமடக்க   முடிந்தி   டாமல்
ஒருநொடியும்   பிரிந்திடாமல்   அணைப்ப   தற்கும்
    ஓயாமல்  நினைவுகளில்  மூழ்க   வைக்கும்
கருவாகிக்   கவிதைகளாய்   எழுதி   எழுதி
    கரம்பேசிக்   குறுஞ்செய்தி    அனுப்பி   வைக்கும்
திருமணத்தை   எதிர்த்தவரை   எதிர்த்தே   ஓடித்
    திருத்தாலி  கட்டுதற்கே  துணிய  வைக்கும் !

- பாவலர்  கருமலைத்தமிழாழன்

**

காதலின் வானிலை 
கனியும் இளம்தளிர் காலையின் 
வண்ண ஓவியம்! 

பனிப் பூக்களின் 
வேர்வைத் துளிகள் 
பகலவனின் கண்கள் பட்டதும் 
ஒளிர்ந்து மின்னும் 
பின் ஒழிந்து கொள்ளும். 

சில நிமிடங்கள் மட்டும் 
முத்துக் குவியலாய் 
சத்தம் இல்லாமல் 
சிரித்து மயக்கும். 

பார்க்கும் உள்ளத்தை 
கொள்ளைக் கொள்ளும் 
வைகறையின் வெளிச்சத்தில்
சில்லென்று மழைத்தூவ...

வசந்தம் பாடும் குயில்கள் 
ஆனந்த நடனமிடும் மயில்கள் 
ஆலமரத்துக் கிளிகளின் முனுங்கள்கள் 
என ஜோடிப் புறாக்களையும் 
நித்தம் ஏங்க வைக்கும்
நிதர்சனத்தின் சாட்சி! 

- கவிஞர் பி.மதியழகன், சிங்கப்பூர்.

**

வானம் பார்த்து  நிலவு  பார்த்து 
இரவில் மின்னும் நட்சத்திரக் கூட்டம் 
கண்டு களித்து நான் கொண்ட காதல் அந்த 
நீல வானம் மீதுதான் அன்றும் இன்றும்!

ஒரு நாள் கறுக்கும் ,  இடிக்கும், கண்ணீரும் 
வடிக்கும்! கோபத்தில் கொந்தளித்து வெள்ளமாய் 
உருவெடுத்து தத்தளிக்கவும் வைக்கும்!
மறுநாளே கதிரவன் புன்சிரிப்போடு கரு 
மேகத்துக்கு விடை கொடுத்து விரிக்கும் 
எனக்கு ஒரு சிகப்பு கம்பளம் நான் ஓடி 
விளையாட !

என் தாய் மடியில் அமர்ந்து நான் பார்த்து 
ரசித்த அதே நீல வானத்தை நான் இன்று 
காட்டுகிறேன் என் பேரனுக்கும் !  அதே 
நீல வானம் , அதே நிலவு , அதே விண்மீன்கள் !
முதுமை எனக்கு மட்டுமே ... என்  நீல வானக் 
காதலிக்கு இல்லை! அந்த நீல வானம் என்றும் 
நீல வண்ண முகத்துடனே சிரிக்க வேண்டும் 
முதுமையின் சாயல் அதன்மேல் படாமல் !

என் பேரனிடம் சொல்கிறேன் நான் இன்று 
இதே நீல மேகத்தை நீ உன் பேரனுக்கும் 
காட்டி கதை சொல்லி மகிழ வேண்டும் என்று !
குடிக்கும் தண்ணீருக்கு விலை வைத்து விட்டோம் 
பாவிகள் நாங்கள் ! சுவாசிக்கும் காற்றுக்கும் 
ஒரு விலை கொடுக்கும் அவலம் நேர வேண்டாம் 
உன் காலத்தில் ! பார்த்து நடந்து கொள் தம்பி நீ !

நீல வானம் நீல வானமாகவே இருக்க நான் 
உனக்கு தரும்  வானிலை முன் எச்சரிக்கை  
இது தம்பி !

- K.நடராஜன் 

**
மின்னலடிக்கும் இதயம்வரை பாயும் அது
கன்னம் தடவ மனமோ வானில் பறக்கும்
அன்னம் வேண்டாம் பசியிருக்காது வயிற்றில்
சன்னமான தென்றல் மனதில் அலையடிக்கும்

பார்வை அண்டவெளியில் சுற்றித் திரியும்
பார்க்கும் கண்களில் காட்சி பதிவதில்லை
கோர்க்கும் நினைவுகள் உருண்டோடிடும்
வார்க்கும காதலினிப்பு நாவில் நீரூரும்

சாதிமத சூறாவளிக்காற்றில் வானிலை மாறும்
நாதியற்று மனங்கள் ரணமாக வலிக்கும்
வாதியற்ற வழக்காக வாய்தா வாங்கலாம்
ஆதி மனிதர்களின் வாளுக்கும் பலியாகலாம்

உண்மைக் காதல் வானிலைகளில் மாறாது
பெண்மை மனதில் வேரூன்றி நின்றிடுமது
கண்மை கரைய அழுதாலும் உறுதியானதது
அண்மை மனங்கள் உடல் பிரிந்தாலும் பிரியாது

காதலின் வானிலை மன அலைகளில் உருவாகி
நாத வேள்வியாய் நர்த்தனமாடிடும் நரம்புகளில்
ஊதல் காற்றிலும் குளிர் உணராத உள்ளங்கள்
ஆதலாலே காதல் வானிலை இனிப்பாகட்டுமே.

- கவிஞர் ராம்க்ருஷ்

**
இதயத்தை விற்று இதயத்தை வாங்குவது,
     உறவகளை உதறி புது உறவுகளை  பிடிப்பது
   வலைத்தளத்தில் பிடித்தாலும் அலைபேசியில்
      பித்தாலும் அது ஒரு கலைதான்
இணையதளம் இன்று உதவுகிறது காதல் மலர்வதற்கு
     அலைபேசி மட்டுமல்ல, வலையில்
   வருபவர்க்கு வயது வித்தியாசம் கூட பாராமல்
       காதல் கதைகள் சொல்லி கடலை
இணைய தளத்தில் சில சொக்கும் சில சிக்கும் ,
      நிரந்தரமாய் ஒரு தேவதை மட்டும்
    நேராகப்பார்க்கும்போது நான் பார்க்கும் போது
நிலம் பார்க்கும் பாராதபோது எனை நோக்கும்
   வலைதளத்தால் வந்த வணிதாமணியை விட மனம்
மறுக்குது பிடிக்காதுபோல் நடிப்பு காதல் வயப்பட்டது
     பிடித்ததும் நழுவாமல் விடமறுத்திடும் காதலின்
நெகிழ்ச்சி காதலின் வானிலை யாகும்
   நிலவு எப்படி எல்லா நாட்டுக்கும் பொதுவானதோ
காதலும் எல்லாநாட்டுக்கும் பொதுவானதுதான்
காதல் இந்த ஏற்பாட்டில் கிளிக் ஆவதுதான்
      காதலின் வானிலை எனச்சொல்லலாம்  

- கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்

**

காதல் என்றாலே களிப்புற்று  மனவானில் 
காண்கின்ற அனைத்திலுமே கனிவே மேலோங்கும்!
சாதல் நிகழ்கையிலும் சங்கடங்கள் நேர்கையிலும்
உள்ளச் சோலையிலே உற்சாகம் பிரவகிக்கும்!
வாழ்தல் ஒன்றினையே வளமாய்ச் சிந்தித்து 
வன்மம் ஏதுமின்றி வாழ்வாங்கு வாழ்ந்திடவும்
வீழ்தல் இல்லாத வினைகள் புரிந்திடவும் 
நெஞ்சம் நெகிழ்ந்திடுமே! நினைவும் இனித்திடுமே!
நெஞ்சிலோர் ஆலயமாய் நின்றதுவே என்றைக்கும்
கன்றும் மாடும்போல் கரவாத உறவாகும்!
பஞ்சில்   நெருப்பு   பற்றுவது   போலதுவே
பார்க்காது இருந்தாலும் பத்தி நன்கெறியும்!
வஞ்சம்   அறியாது    வம்பெதுவும்     பேசாது
துணையின் வாழ்வுக்காய் துடிக்கும் மனதுடனே
பஞ்சம்  வந்தாலும்  பட்டினியே  கிடந்தாலும்
தஞ்ச மடைவதெல்லாம் தந்துணையின் மடியினிலே!
இப்படி  இருந்ததெல்லாம்  இவ்வாறு  நடந்ததெல்லாம்
போன நூற்றாண்டில்;போயிற்று அத்தோடு!
செப்படி வித்தைகளும்  செக்ஸ் அலைக்கழிப்பும்
இன்றைய காதல்வானில் இளையோரை வறுத்தெடுக்கும்!
எப்படி   கட்டியவனை   எவர்க்கும்   தெரியாமல்
தீர்த்துக் கட்டிவிட்டுத் திருட்டுக் காதலனுடன்
அப்படியே வாழ்வதென்று ஆரணங்குகள் மனதில்
அலைபாயும் காலமிது! ஆழ்ந்த  சோகமிது!

-ரெ.ஆத்மநாதன்,கூடுவாஞ்சேரி

**
எனக்கு உயிரானவளே - காதலின்  வானிலையில்
நண்பர்கள் குரு கிரகமாகி விடுகிறாா்கள
எதிரிகளாே சனி கிரகமாகி விடுகிறாா்கள்
நீ வானில் வீதியுலா செல்வதைப்படம்பிடிக்கவே
பூமியிலிருந்து செயற்கைக் கோள்கள்யாவும் படையெடுக்கின்றன;
கோள்களின் சுழற்சியெல்லாம் சட்டென நிற்கிறதடி
உனது நடை அழகை காண்கையில்;
உனது பாதம்படாத நட்சத்திரப் பூக்களெல்லாம் - காதலெனும்
வானிலையில் தன்னைத்தானே எரித்துக் கொள்கின்றன;
விண்கற்களும் ஒன்றொடொன்று மோதிக்கொள்கின்றன - இப்பேரழகியைப்
பெறுவதற்கு ஆடவனாய் பிறக்கவில்லையே என்றெண்ணி;
என்னவளே காதல்வானில் மறந்தும் சிரித்துவிடாதே
மேகமற்ற நிலையிலும் மின்னல் தோன்றிவிடும்;
வானவில் ஆடையும் வளைந்தேவிட்டது - நீ
அணிந்த கைத்தறி ஆடையழகுக்கு ஈடாகாமல்;
இடி தாக்குதல்கூட ஏதுமற்றுப்போகிறதடி - நீ
சட்டென வீசிய காந்தப்பாா்வைக்கு முன்னால்;
வானவெளியில் உன் கருங்கூந்தலையும் உலறவிடாதே -
கருமேகம் மயங்கி உன்னை காதலித்துவிடப்போகிறது;
என்னவளே காதலின்வானிலையில் என்னிலையை மறந்தேனடி..
உன்னிலையோடு ஒருநிலையாய் சிலையாய் நின்றேனடி...

- கவிஞர் - இரா. விநாயகமூர்த்தி 

**
மின்னல் ஒளியில் 
செய்த மின்சாரவிழியே..
மழையோடு மறைந்து 
தோன்றும் வானவில்லே..
மனதிற்குள் பெய்திடும்
அழகான காதல்மழையே..
காற்றோடு மேகமும்
பேசும் கவிதைமொழியே..
புயலையும் தென்றலாய்
தவழவைத்த காதலியே..
கனவுஎன்னும் வானில்
மிதக்கவைத்த நிலவே..
காதல்மழை சுமந்து
செல்லும் கருமுகிலே..
வெயிலோடு மழையும்
கொஞ்சிய காலநிலையே..
விண்ணை பெண்ணாக்கியது
காதலின் வானிலையே..
- கவிஞர் நா. நடராசு

**

தாயின் சிறகுகளுக்குள் 
புகுந்து அதன்
அடிவயிற்றுப் பரிசத்தில்
கண்மூடி லயிக்கும்
கோழிக் குஞ்சு போல,
இரவுகள் பூராவும் 
என்னவளின்
நினைவுகளுக்குள் புகுந்து, 
அது வழங்கும்
காதல் வானிலையின்
இதமான கதகதப்பில்
இன்பம் துய்க்கிறேன்..
 - ஆதியோகி

**
உணவும் செல்லாது  
உறக்கம் கொள்ளாது 
ஓரிடத்தும் நில்லாது 
யாரிடத்தும்  சொல்லாது 
சேரிடம் தெரியாது 
நெஞ்சிடும்  உணர்வுகள் 
விஞ்சிடும் ஆசைகள் 
தஞ்சமிடும் மஞ்சம் 
தகித்திடும் உடல் 
தத்தளிக்கும் மனம் 
விளிம்பிடும் கண்ணீர் 
வெளுத்திடும் கண்கள் 
அந்தோ பரிதாபம்!
யாருக்கு வேண்டும் ?
காதலரை
நினைத்து நினைத்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து
காத்து காத்து 
பூத்த மலர் வாடிடும் 
பொழுதினில் 
காதலர்   மனநிலை 
கணித்திடும்
காதலின் வானிலை ! 
- எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்

**

பாலகராய் இருந்தபோது இல்லை பேதம்

……….பருவங்கள் எய்துவிட்டால் வந்து போகும்.!

மாலமாயம் செய்வித்தே மயக்க வைக்கும்

……….மனமுமொரு நிலையிலாது பரித விக்கும்.!

காலத்தின் நிலையறிய கோள்கள் போல

……….காதலிலும் வானிலையைக் கண்ட துண்டு.!

மூலதனம் ஏதுமில்லை முயற்ச்சி வேணும்

……….முக்கியமாய்க் காதலிக்க ஆர்வம் போதும்.!

அக்கறையும் அன்புடனே சேர்ந்து விட்டால்

……….அதன்பிறகு காதலுக்கும் புரியும் அர்த்தம்..!

பக்குவமாய் காதலித்தால் பலனும் உண்டு

……….பகுத்தறிவுக் கேள்வியங்கே எடுப டாது..!

வக்கிரத்தால் வருங்காதல் அறிந்து கொண்டு

……….விபரீதம் நிகழாமல் விழிப்பு வேண்டும்..

அக்கினிக்கும் காதலுக்கும் உறவு உண்டு

……….அதன்தொடர்பு பாதியிலே அறுந்து போனால்..!

காதலுமோர் வானிலையைப் போலத் தானே

……….காதலிக்கும் கலையறிய கற்க வேண்டும்..!

சோதனைகள் வந்தாலும் தொடரும் காதல்

……….சொந்தத்தைச் சிலசமயம் மறக்கச் செய்யும்..!

வேதனைகள் இல்லாது காதல் செய்யும்

……….வித்தகர்கள் வயதிற்கும் வரம்பு இல்லை..!

பாதகங்கள் வேண்டாமே! பந்தம் வேண்டும்!

……….பருவநிலை அறிந்தபின்னே காதல் செய்வீர்..!

- பெருவை பார்த்தசாரதி

**

வேண்டி வந்து நிற்பேன்..
தாண்டிச்சென்று விடுவாய்
தலைகுனிந்துகொண்டே..!
நொண்டியடித்தபடி மனமும்
நொந்துகொண்டே திரும்பும்..!
ஏதோ யோசித்துக்கொண்டிருப்பேன்
எங்கிருந்தோ வந்து முன் நிற்பாய்!
எனை விழுங்கும் விழிகளால்
எண்ணற்ற மகிழ்வும் தந்து செல்வாய்..!
தவறெதுவும் நான் தவறிச் செய்தால்
எவர் உண்டென்றும் பாராமல் 
எரிக்கும் விழிகளால் முறைக்கிறாய்..!
எவர் விழிகள் என் மீது பட்டாலும்
எனக்கெதுவும் ஆகக்கூடாதென்று 
அவர் பார்வையிலிருந்து மறைக்கிறாய்..!
வருமென்று நினைக்கும்போது வராமலும்
வராதென்று நினைக்கையில் முன்வந்து நிற்பதிலும்
வானத்து மின்னலாய் ஜொலிப்பதிலும்
வஞ்சி நீயும் மழை தான்..என் 
நெஞ்சில் எப்போதும் காதல் வானிலை தான்..!

- கவுதம் கருணாநிதி, திருச்சூர், கேரளா

**

தேரில் வரும் அம்மனிலும்
நேரில் வரும் ஆட்களிலும்
கூர்ந்து நான் கவனிக்க
வைத்தது ந்தன் சாயலன்றோ?

வானிலையும் மாறாதோ
வான் நிலவும் வாராதா
பாலை நெஞ்சில் பூப்பூக்க
காலையிலே கண்ட கனா -

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**

இரு கண்கள்
சந்தித்த வேளையில்
இரு இதயங்கள்
இடம் மாறிக் கொண்டதோ

மௌன மொழியாலே
மௌனமாய் பேசினோமே
அகத்தினுள் அவளுருவம்
ஆனந்தமாய் அலையடிக்கிறது

நிஜத்தினில் பார்க்கின்றேன்
நீங்காத மழை பொழிவு
தெரிந்து விட்டதோ தென்றலுக்கும்
புரிந்து விட்டதோ இயற்கைக்கும்

உன்னில் நான் வந்த மாற்றம்
என்னில் நீ வந்த மாற்றம்
இயற்கையின் மாற்றமோ இல்லை
காதலின் வானிலை மாற்றமோ

- மதுரை மாலதி (PC)

**
மேகங்களின் காதல் 
மோகத்தில் மழை !

தவிக்கும் இதயம் அன்பால் 
குவிக்கும் காதல் கனவுகளை !

கண்களின் காவிய மோதல் 
மண்ணின் மழையென காதல் !

ஈரம் காயும் வேளையில் - மனதிலே 
பாரம் குறையும் சொன்ன காதலாலே !

வண்டுகள் தேடும் தேன்போல 
பெண்வண்டைத் தேடும் காதலே !

மேகஓவியம்  கரைவதற்க்குள் 
தாகம்  தீர்க்கும் விவேகக்காதலே !

 - கா. மகேந்திரபிரபு, சிவகாசி

**

கார்மேகம் காணும் போதுன்
கருங்கூந்தல் நினைவில் வாழும்
நேர்காணும் வகிடும் என்னுள்
நினைவூட்டும் மின்னல் தானே
பார்க்காத நொடியின் நேரம்
பார்க்குமுன் விழிகள் ஓரம்
ஈர்ப்புவிசை  மனங்கள் ஆற்றும்
இலக்கியங்கள் காதல் போற்றும்

பருவத்தே காதலி யற்கை
பயிர்வளர்க்கும் மழையே போன்று
உருவத்தால் வனப்பை பெற்றும்
உள்ளத்தால் அச்ச முற்றாள்
கரைகடக்கும் புயலின் சேதம்
கண்டறிவின் கலக்கம் போலும்
வரம்புகள் குறித்து வைத்து

வார்த்தையில் கவனம் வைப்பாள்
காதலெனும் மழையும் ஓங்க
கருமுகிலாம் ஈரம் வேண்டும்
ஆதரவாய் தென்றல் பார்வை
அனுப்பிவிடும் தூது வொன்றால்
சாதகமாய் மழையும் ஆங்கு
சரித்திரமே படைத்து நிற்கும்
வேதனைதான் காதல் என்றால்
வெளிப்பட்ட அன்பில் பொய்யே

- கவிஞர் முருகுபாண்டியன்

**

விதைக்கப்பட்ட நிலவு விண்ணில் வளர்கிறது !
முழுமதி ஆனபின் மெதுவாய்  தேய்கிறது !!
காணும்நாளில் மனம்  களிப்புடன் ரசிக்கிறது !
காணாத நாட்களில் கவிதைக்கும் பசிக்கிறது !!

தூவப்பட்ட விண்மீன்கள் துள்ளுகிறது- நிலாகாக்க
ஏவப்பட்ட  வேலையாளாய்  எண்ணுகிறது.....
சிற்றொளி தரும் சிப்பந்திகளின்
கண்சிமிட்டும் கலை உள்ளம்  பறிக்கிறது !
காதலுடன் உணர்வும்  ரசித்து சிரிக்கிறது !!...

நீர்த்துளிகள்  பொதிந்த நீள மூட்டைகளாய் 
நித்தமும் நகர்கிறது  நீலவான் முகில்கள்...
கடல் நீர் திருடர்களை கண்டு
களித்தே மனம் காதல் கொள்கிறதே !

மழையெனும் ஓவியன் மறந்து போன
விண்ணப் பெட்டி வானவில்-- காண்கையில்
காதலும் பூக்கிறது கவிதையில் நிறம் சேர்க்கிறது !
வஞ்சியோடு காதல் கொண்ட  மனிதரில்

வானத்தோடு அலைகிறது என் காதல் ...
இப்பொழுதும் கூட அதன்
மழையெனும்  மரபுக்கவிதையினை
ரசித்து கொண்டே...

- துள.கவிஅன்பு

**

பிரபஞ்சத்தின்
எல்லையற்ற வெளியில்
பிரசன்னமாகும்
தட்ப வெட்ப நிகழ்வில்
ஜனனப்படும்
பருவங்களின் பிரமாண்டம்

திசைகளின் அதிர்வில்
பிரகாசிக்கும்
சுகத்தின் பேரானந்த அலையில்
ஏகத்தின் வெறுமையில்
அடையாளமற்று நறுமணம் பரவ
பூத்துக் குலுங்கி வியாபிக்கும்
அனந்த கோடி அழகின் இன்பம்

அண்டத்தில்
காணவியலா அணுக்களின்
துகள்களால்
தொடங்கிய வேட்கையின் விருப்பங்கள்
விடாமல் வேட்டையாடிக்கொண்டிருக்கின்றன

அன்பென்றும் காதலென்றும்
கம்பீரத்தோடு
பரிபாலனம் செய்யும் மனவெளியில்
பிரகாசிக்கும்
முரண்களின் உடன்பாடு

பருவங்களில் சுரக்கும்
கார் கூதிர் முன்பின் பனியெனத் தொடர்ந்து
இளவேனில் வசந்தமெனக் குலுங்கும்
காலங்களின் யௌவனம்

அதனதன்
உணர்வுகளின் கைப்பிடித்து
அன்பால் நடைபயிலும் போது
முறிக்கும் மனிதனின்
அபாண்ட சாதிகளின் சதிகள்

யதார்த்த காதலை
நிறபேத இனவாத வெறிகள்
குதறி குலைக்கின்றன

உண்மையின் பருவநிலை
மாறிப்போவதில்
வானப் பருவநிலை திசைமாறுகிறது
போல

காதலின் உணர்வுகளை
களங்கம் படுத்துவதால்
வெப்பச் சலனமென
சதையின் சலனத்தால் நிஜமற்று
நிழல் காணாமல்
நொறுங்கி கிடக்கிறது
காதலின் வானிலை...

- கவிஞர்.கா.அமீர்ஜான்

**

காதலின் வானிலை

காதலின் வானிலை - நானறியேன்
ஆனால் வானிலை ரம்மியமானால்
தானாகவே வரும் காதல்

தானாகவே வரும் காதல் - ஆம்
இயற்கையின் மீது

காதலின் வானிலை - நானறியேன்
ஆனால் அன்பு அதிகமானால்
தானாகவே வரும் காதல்

தானாகவே வரும் காதல்  - ஆம்
மனைவியின் மீது

காதலின் வானிலை - நானறியேன்
ஆனால் பாசம் அதிகமானால் 
தானாகவே வரும் காதல்

தானாகவே வரும் காதல் - ஆம்
பிள்ளைகளின் மீது

காதலின் வானிலை - நானறியேன்
ஆனால் பரிவு அதிகமானால்
தானாகவே வரும் காதல்

தானாகவே வரும் காதல் - ஆம்
பெற்றோர்களின் மீது

காதலின் வானிலை - நானறியேன்
ஆனால் மரியாதை அதிகமானால்
தானாகவே வரும் காதல்

தானாகவே வரும் காதல் - ஆம்
பெரியவர்களின் மரியாதையின் மீது

காதலின் வானிலை - நானறியேன்
ஆனால் தேச பக்தி அதிகமானால் 
தானாகவே வரும் காதல்

தானாகவே வரும் காதல்  - ஆம்
தேசத்தின் மீது

காதலின் வானிலை - நானறியேன்
ஏனெனில் எனக்கு காதலி இல்லை.

ஆனால் இயற்கை, மனைவி, பிள்ளைகள், 
பெற்றோர், பெரியோர்கள், தேசம் என
எனக்கு பலர் உள்ளனர்

அவர்கள் மீதான அன்பு, பாசம், பரிவு, மரியாதை, 
பக்தி காதலாக மாறியதால் காதலின் வானிலை 
ரம்மியமாக உணர்கிறேன்.

- ஆம்பூர் எம். அருண்குமார்.

**

எங்கிருந்தோ இடியிடிக்க
ஆங்காங்கே மின்னல் வெட்ட
மழைபொழிந்து மண்மணக்க
மங்கை உடல்நனைக்குமென்ன;
கருக்கட்டிய மேகங்களினின்றும்
உருக்கொண்டு ஓர்துளியவிழாதோ?
எண்ணுதற்குள் என்மழைக்கனவு
வீசிய காற்றதனால் வீணேகலைந்து போய்
வானிலையறிக்கை போல 
வீணிலே பொய்த்துவிட;
இலதொன்றை வானமென்று 
ஏமாந்து பார்த்தாற்போல்
இல்லாத காதலதை
எல்லையிலாதெங்கும் பரந்ததென்று 
பார்த்திருந்தேன்...! காலத்தால் 
கனியுமென்று காத்திருந்தேன்..!
~ தமிழ்க்கிழவி

**

காதல் மழையாய் பொழியுதடி
காற்று நம்மை தீண்டுதடி
நீயும் கொஞ்சம் சிரிக்கையிலே
நெஞ்சின் காயம் மறையுதடி

கனவுக்கும் நனவுக்கும் உள்ள இடைவெளி
நீயென் அருகில் வருகையில் குறையுதடி
பூவாசம் மண்வாசம் தாண்டி
பெண்வாசம் ஆளை மயக்குதடி

இமைகள் துடிக்க இதயம் துடிக்க
இதழ்கள் உன்னைப் படிக்குதடி
என்னுள் எழும் கவிதைகள் எல்லாம்
உன்னழகை மட்டும் வடிக்குதடி

- கோ.வேல்பாண்டியன், வேலூர்

**

காதல் மழையாய் பொழியுதடி
காற்று நம்மை தீண்டுதடி
நீயும் கொஞ்சம் சிரிக்கையிலே
நெஞ்சின் காயம் மறையுதடி

கனவுக்கும் நனவுக்கும் உள்ள இடைவெளி
நீயென் அருகில் வருகையில் குறையுதடி
பூவாசம் மண்வாசம் தாண்டி
பெண்வாசம் ஆளை மயக்குதடி

இமைகள் துடிக்க இதயம் துடிக்க
இதழ்கள் உன்னைப் படிக்குதடி
என்னுள் எழும் கவிதைகள் எல்லாம்
உன்னழகை மட்டும் வடிக்குதடி

- கோ.வேல்பாண்டியன், வேலூர்

**

மேகம் திரண்டது அந்த வானத்தில்
சோகம் திரண்டது அவள் வதனத்தில்
இடிவிழுந்த போது விண் அதிர்ந்தது
ஏசிய பேச்சில் மண் அதிர்ந்தது
மின்னல் வெட்டிய போது கண்மிரண்டது
விழிவாளால் வெட்டிய போது தலைதுவண்டது
அடைமழை பெய்தபோது நிலம்மூழ்கியது
அழுத கண்ணீரில் உளம்மூழ்கியது
காற்று சுழன்று சூறாவளியாய் மாறியது
காதல் கழன்று புயல்தாண்டவம் அரங்கேறியது

புயல் ஓய்ந்தபின் கணக்கெடுக்கையில்
சேதாரம் ஆனது
இருவர் வாழ்க்கையும்

- கோ. மன்றவாணன்

**

என் அருகில்
தேவதை நீ இருக்க
இமயத்துள் சிக்கி
நடுங்கும் நிலை
சற்று தள்ளி நின்றால்
சுற்றித் தெறிக்கும்
சாரல் மழை
காரினைச் சுற்றி
தலையில் வைத்து
ஏரினைப் பார்வையாக்கி
பார்வையைக் கூரினால்
நெஞ்சகத்தைக் கீறி
வேளாண்மை பார்க்கும்
உன் வினை
காரை இறக்காமல்
வேகமாய் காற்றுத் திரையில்
ஆட்டி ஆட்டி − இன்று
மழை வருமா! மழை வருமா!
என ஏங்க வைக்கும்
கலிக்காலி உன்னால்
வானம் பார்க்கும்
பூமியாய்
வெறும் கோவணத்தோடு.....

-  முகில் வீர உமேஷ்

**

கருங்கூந்தல் மேகத்தில் 
ஒளிவீசும் பால்நிலாப் போல் 
உருண்டு திரண்ட தேகத்தில் 
ஒளிவீசும் உன் கண்கள் 
என் கண்ணில் மின்னல் வெட்டியதால்
என் மனதில்மையம் கொண்டதைப் போல்
உன் மனதில் மையம் கொண்டதா காதல்?

மனதில் மையம் கொண்ட காதலால் 
என் வானில்   
காதல் மழை வருமோ? இல்லை
என் கண்ணில் நீர் வருமோ?

மனதில் மையம் கொண்ட காதலை 
பெற்றோரின் 
சாதி, மதம், அந்தஸ்து எனும் 
புயல் வீசி கலைத்திடுமோ?
இடியாய் இடர் வருமோ?

பலத்த காற்று வீசி 
மரத்தை சாய்ப்பது போல் 
கண்ணில் வலை வீசி
மனதை சாய்த்தவளே!

இல்லத்தில் புகுந்த மழை நீராய்
என் உள்ளத்தில் புகுந்த 
உன் நினைவால் தவிக்கின்றேன்!
ஓடி வந்து காப்பாயோ?
ஓடம் விட்டு காப்பாயோ?

கனிந்து வரும் காதலில்
சாதி மத புயலடித்து 
நிலவரம் கலவரம் ஆகாமலும்!
காதலர்களை 
தற்கொலையிலிருந்தும்
தற்பெருமைகொலையிலிருந்தும்
காப்போம்!
-கு.முருகேசன்

**

கண்களிலே தெரியுதடி காதலின் தீவிரம்
காதலிலே தோற்றாலோ கண்களில் தீவரும்
புன்னகைச் செடியிலே பொன்மலர்ப் பூவரும்
கன்னிமனம் நொந்தாலோ கனலாடும் புயல்வரும்

நேற்றிரவு பெய்தமழை இன்றிரவு இல்லை
இன்றடித்த வெயிலிலே ஈரமிச்சம் இல்லை
முத்தங்கள் கொட்டிவைத்த இதழ்அமுத மேகம் 
மொத்தமாய்த் தீர்ந்ததால் தீரவில்லை தாகம் 

மையல்கொண்டு தையல்கொண்ட மைவிழியில்
கயல்கொண்ட பொன்னழகைக் கவிகொண்(டு) எழுதியதை
வெயில்கொண்ட கோடையெனெத் தீக்கொண்டு போனபின்பு
புயல்கொண்ட மழைநாளாய் பூவைகொண்ட கண்மாறும்

விரிந்தாடும் கூந்தல் கார்கால மேகங்கள்
சரிந்தாடும் போதினிலே கண்பெயும் மாமழை
எப்போதும் குளிர்காலம்;அது காதல் வானிலை 
காதல் இல்லை என்றாலோ எப்போதும் வாழ்விலை

- கவிஞர் மஹாரதி

**

பகலா,இரவா தெரியவில்லை! 
ஞாயிறா, திங்களா ஒளியில்லை! 
கருமேகங்கள் நிறைந்துள்ளதே! 
மின்னல் கீற்றுகள் தெறிக்கிறதே! 
இடியோசை கேட்கிறதே! 
ஈரக்காற்றுடன் மழைச்சரங்கள் 
விழுகிறதே! மண்வாசம் மணக்கிறதே! 
உன் பார்வை வீச்சினிலே உயிர்த்தீ எரிகிறதே! 
மெய்யுயிர் சிலிர்க்கிறதே! 
அன்பே காதல் சொல்லிவிடு! 
உன்னால் என்னுள் இரசாயனமாற்றமே 
பிரவாகமெடுக்கிறதே! 
மனமுழுதும் வளிமண்டல அழுத்தமாக 
உணர்வுகளில்,உணரச்சிகளிலே 
மழையாகிறதே!  
இயற்கையில் இயல்பில் 
இது காதல்வானிலையே! 

- ஆகாசம்பட்டு A.k.சேகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com