கடந்த வாரத் தலைப்பு ‘மன்னிப்பாயா’ வாசகர்களின் கவிதைகள் பகுதி 2!

வசதி வசதி என்றே வளர்ச்சி வளர்ச்சி என்றே இயற்கை அழகை கெடுத்த  மனிதர்கள் கேட்கிறோம் மன்னிப்பாயா மன்னிப்பாயா !
கடந்த வாரத் தலைப்பு ‘மன்னிப்பாயா’ வாசகர்களின் கவிதைகள் பகுதி 2!

மன்னிப்பாயா

வசதி வசதி என்றே
வளர்ச்சி வளர்ச்சி என்றே 
இயற்கை அழகை கெடுத்த 
மனிதர்கள் கேட்கிறோம் 
மன்னிப்பாயா மன்னிப்பாயா !

தடுமாறி  தடுமாறி மாறி மாறி
தவறு  செய்த உள்ளமே  நீ 
தயங்கித் தயங்கி மெதுவாக 
கேட்கிறாய் மன்னிப்பாயா !

மன்னிப்பு இல்லை என்றால் 
மனித தலைகள் மிஞ்சுமா ?
கலவரம் தான் படர்ந்திருக்கும் 
மன்னிப்பே மனித மாண்பு !

மனிதம் தொடர்ந்து மன்னிப்பே 
மனித குலத்தின் உயர்ந்த எண்ணம்! 
ஆறாம் அறிவின் ஆயுதம் மன்னிப்பு 
தவறிய மனம் கேட்கும் என்றும் 
மன்னிப்பாயா மன்னிப்பாயா !

- டாக்டர் கே.மஹேந்திரபிரபு

**


குற்றம் செய்யாமல் வாழ்ந்து  இருந்தால் தலை 
குனிந்து மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை !

முடிந்தளவு தவறு இன்றி நேர்மையாக 
மனசாட்சிப்படி என்றும் வாழ வேண்டும் !

பிறர் தன்னிடம் எப்படி நடக்க எதிர்ப்பார்க்கிறோமோ 
பிறரிடம்  நாமும் அப்படி நடந்து கொள்ள வேண்டும் !

மற்றவர் மனம் புண்படும்படி பேசுதல் கூடாது 
மற்றவரை பேசாதிருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டாம் !

உன்னைப் போலவே பிறரையும்  நேசித்தால்  
ஒருபோதும் குற்றம் செய்திட மாட்டாய் !

அவசரப்பட்டு கடும் சொல் பயன்படுத்தாதே 
அன்பால் இன்சொல்   என்றும் பேசுக !

யாரையுமே  எப்போதும்  தாழ்வாக எண்ணாதே  
யாவரும் சமம் என்ற எண்ணம் வேண்டும் !

நானே பெரியவன் என்ற எண்ணம் தகர்த்திடு 
நானே சிறியவன் என்று எண்ணுவதும் தவறு !

கர்வம் வந்தால் காணாமல் போவாய் 
கனிவு இருந்தால் உயரம் செல்வாய் !

மன்னிப்பு கேட்க அவசியம் வர வேண்டாம் 
மனதளவில் நல்லவனாகவே வாழ்ந்திடு !

- கவிஞர் இரா .இரவி

**

அம்புகள் படுக்கை மீதில்
   ஆருயிர் நீங்கும் வேளை
ஐம்புலன் அடக்கி ஆண்ட
  ஐயனாம் பீஷ்ம சிங்கம்
தம்முடல் முழுதும் செந்நீர்
   தவழ்ந்திடும் போதில் மெல்ல
தம்மரு கிலேவா வென்றார்
    தங்கம்போல் நின்றவள் தன்னை             

பால்போல மேனி கொண்ட
    பாஞ்சாலி எனும்நல் தாயே!
வேல்போல விழியில் அன்று
     வேதனை சுமந்தாய்; தீயின்
கோல்போல எம்மைச் சுட்ட
     கோச்சபை நிகழ்வே இன்னும்
தேள்போல கொட்டும் நெஞ்சை;
    தேவிநீ மன்னிப் பாயா?                        

வேள்வித்தீ பெற்ற பொன்னே!
  விதியென அதைநான் சொன்னால்
ஊழித்தீ என்னைக் கொல்லும்
   உயிர்நீங் காமல் துள்ளும்
கேள்வித்தீக் கங்கு நித்தம்
   கிழவனைச் சுட்டுப் போடும்
பாழ்பக்தி வைத்தேன் அங்கே;
  பாவமெனைக் கொன்ற திங்கே                    

பொன்னொளித் தேவி! அன்று
     புகலிடம் இன்றி துன்பக்
கண்ணீரில் சபை ந னைத்தாய்;
   கண்ணனே அருள்பு ரிந்தான்;
வெந்நீரில் கருகும் பூவாய்
   வெறுமையில் இருந்தேன் நானே;
மன்னிப்பா யா?பூந் தேனே!
   மாதரசி! குலவி ளக்கே!

- கவிஞர் மஹாரதி

**

கன்னத்தில் கை வைத்த ரோசா!
உன்னைப் பார்த்தால் 
புத்தன் கூட
உன் பக்தனாக ஆசைப்படுவான்!

பூனை மீசை முளைக்கையிலே
உன் பருவ அழகை பார்த்திருந்தால்
உனக்கு புருஷனாகி இருப்பேன்
நம் பிள்ளைக்கு தகப்பனாகி இருப்பேன்!

காலம் கடந்து பார்த்தாலும் 
உன் மேல் காதல் மலருது
நான் மற்றவர்க்கு கணவன் 
என்னும் நினைப்புமட்டும் 
தடுத்து நிறுத்துது!

துணிந்து வந்து மலர் கொடுத்தால்
கரம் பிடிப்பாயா? இல்லை 
நீ துணிந்து சென்று மீ-டூ வில்
இடம் பிடிப்பாயா? இல்லை
உன் அழகில் தடுமாறும் என்னை 
மன்னித்து
வாழ வழி கொடுப்பாயா? 

- கு.முருகேசன்

**

செவ்விதழில் வழிந்த 
அர்த்தப் புன்னகைக்கே
ஆயுட் கைதியானேன்….
கண்களின் உரசலுக்கும் 
காகித கசங்கலுக்கும்
எவ்வித பதிலுமில்லை….
ஊடலால் உருவான 
உன் உளச்சூட்டை…
கனன்று தகித்த 
இலவு  இதயத்தின் 
வெம்மையைத் தணிக்க….
நிராயுதபாணி என்னிடம்
இதழமுதத்தைத் தவிர
வேறில்லை அவ்வமயம்…
'………………………………………………………………’.
காலங்கடந்தேனும் ‘மீ டூ‘ வில்
பதிவிட்டு பகிர்ந்தமைக்கு
பாராட்டுகள்… காத்திருக்கிறேன்…
மன்னிப்பாயா…?

- எல். மாறன், மேல்பட்டி

**

நீ சொல்லிய காதலை - நான்
சொல்லாமல் மறைத்து வைத்தேனே
அன்பே என்னை மன்னிப்பாயா?

காதலை மனதில் புதைத்து - உனக்காக
கவிதைகள் எழுதி மறைத்தேனே
அன்பே என்னை மன்னிப்பாயா?

நீ நெருங்கி வரும் போதெல்லாம்
நெருஞ்சி முள்ளாய் மாறினேனே
அன்பே என்னை மன்னிப்பாயா?

கடலலை போல உன்னைத்
தொட்டு விலகி சென்றேனே
அன்பே என்னை மன்னிப்பாயா?

எழுந்த ஆசைகளை அடக்கி
தனிமையில் தினமும் அழுகிறேனே
அன்பே என்னை மன்னிப்பாயா?

காகிதத்தில் கவிதை எழுதி
கண்ணீரில் நம் கதையை முடிக்கிறேனே
அன்பே என்னை மன்னிப்பாயா?

- கோ.வேல்பாண்டியன், வேலூர்

**
ஏய்... செல்லமே!...
ஏங்க வைக்காதே!
தூங்க விடாமலே!
தாங்காது நெஞ்சமே!
தளிரான கன்னமே!
தடமில்லா வண்ணமே!

கோபமெல்லாம்
மூட்டை கட்டி
தூக்கிப் போடு குப்பையிலே!
நேரம் தவறி வந்ததற்கா
இந்த சோதனை
நெற்றிச் சுருக்கம்
நெளிந்து அம்பை எய்யுமோ!
வீழ்ந்து விட்டேன்
நான் உன்
அம்பு படாமலே!
உன் வம்பு பட்டதிலே!

வள்ளுவரே!
சொன்னதுண்டு
ஊடலே காமத்துக் கின்பம்;
அதை
நீ காட்டும் போது
புரிந்து கொண்டேன்;
கலகக் கண்ணை
மாற்றிவிட்டு உன்
நிலவுக் கண்ணை
ஏற்றி விடு
தப்பு செய்தால்
தண்டனையளி
அளித்த பின் என்னிடம்
உன்னை அளி....

- முகில் வீர உமேஷ், திருச்சுழி.

**

விலக ஏதுவாய் காரணங்கள் தேடி
உனக்காய் பூத்து நின்ற புன்னகைதனை
புறந்தள்ளியிருக்க
வேண்டாம்..

சேர்ந்து கண்ட கனவுகளை தீயிட்டுக் கொளுத்தி 
யாரோ போல நகர்ந்திருக்க 
வேண்டாம்..

நேசமொன்றின் மிகச்சிறிய வேண்டுதல்களையும் நிர்கதியில் நிற்க வைத்து 
நிரந்தரமாய் பிரிந்திருக்க 
வேண்டாம்..

இன்னும்
இத்தனை கொடூரமாய் ஒரு பிரிவு
நிகழ்ந்திருக்கவே
வேண்டாம்..

தவிர
இது யாரும் யாருக்கும் செய்யக்கூடியது தான் 
ஆயினும் 
நீ இதை செய்திருக்க வேண்டாம்!!!

**
காலத்தால் நம்காதல் கனியுமென்று
ஞாலமிதில் காத்திருந்தாய் - உன்
அத்தனை நம்பிக்கையையும்
மொத்தமாய்ச் சிதைத்தழித்துச்
“செத்துப்பிழை” என்றே தான்
சத்தமின்றிச் சென்றேன் நான்;
எல்லாமே நானென நம்பியிருந்தாய்
சொல்லால் வதைத்துன்னைக்
‘கொல்லாமல் கொன்று புதைத்தேன்’ நான்;
உலகில் உனையன்றி 
என் மனதில் எவருமிலை - இருந்தும்
விலகிடல் வேண்டிய தொன்றாயிற்று...!
என்னுடலில் பரவிவருங் கொடுநோய்
எனைக் கூற்றுவனுக் கிரையாக்க வதைதருது 
உனைப் பிரிந்த வாதையது அதைப்பருகி
உயிர்வலிக்க, ஏதோ இயல்பளவில்
சுழலுகிறேன் மூச்சிழுத்து
உழலுகிறேன் உன்நினைவால்...எனை
மன்னிப்பாயா...?

- தமிழ்க்கிழவி

**

 
கூந்தல் விரித்த
பூங்குயில்;
புலம்பும் மொழிகள் புண்ணாக்குது;
காய்ந்த வாழ்வில்
கார்மேக மெனவே
வந்தவள்; கருணை
ஈர்ந்து ; கவனமாக
மனதைப் பாரு
காயங்கொண்ட − உன்
வார்த்தைகளால் துண்டானதை;
கணவன் மனைவி
சண்டை யெல்லாம்
பொழுது சாயும் வரை
சூரியனைப் போல்
மறையணும்;
நிலவைப் போல குளிரணும்;
தம்பதி எனும்
வார்த்தையே சரிபாதி என
புரிந்து கொள்;
சகடர் போல
தொடர்ந்து போனால்
யுகங்கள் போல
நாளும் ஓடும்;
வெறுப்பிலே தான்
அடுப்பு எரியும்;
மதலைகள் மலர்ந்து
அறிஞராகும் பொழுது;
சண்டையேனோ? கண்மணி;
தவறு செய்தேனாகில்
தவறில்லை
உன்னிடம் மன்னிப்பு
கேட்க......

- ப.வீரக்குமார், திருநின்றவூர்

**

காலம்பாராமல் துடிக்கும்
இதயத்தை வலியால் 
துடிக்க வைத்த
என்னை மன்னிப்பாயா...
காலம் முழுவதும்
காயமின்றி காதல்
வலியைத் தந்த
என்னை மன்னிப்பாயா...
கனவுகள் சுமந்த
கண்கள் இரண்டிலும்
கண்ணீரைத் தந்த
என்னை மன்னிப்பாயா...
நீரின்றி தவிக்கும்
மீனாக உன்னை
நினைவில் தவிக்கவைத்த
என்னை மன்னிப்பாயா...
நீர்தரும் மேகம்
மௌனமாய் பிரிவதுபோல்
உன்னைப் பிரிந்த
என்னை மன்னிப்பாயா...
ஆசையென்ற தீபத்தில்
எரிந்த அன்பெனும்
ஒளியை அணைத்த
என்னை மன்னிப்பாயா...
அலைகடலாய் இருந்த 
உன்னுடைய வாழ்வில்
அமைதியைத் தந்த
என்னை மன்னிப்பாயா...

- கவிஞர் நா. நடராசு

**

ஒருவருக்கொருவர்
கூர் வார்த்தைகள் கொண்டு
மனம் கிழித்து
ரணமாக்கியது போதும் ...

என்னைப் போலவே
அந்த ரணம் தரும்
வலியும் வேதனையும்
உன்னையும் வதைப்பதை 
நன்கறிவேன் நான்..

பிடிவாதத்தால் அதனை
மேலும் சீழ்பிடிக்கச்
செய்திடல் வேண்டாம்..

என்னவளே வா..
ஒருவரையொருவர்
மன்னித்து மருந்திட்டு
மகிழ்வாய்  உறவைத் 
தொடர்ந்திடுவோம்..

- ஆதியோகி

**

நிழலாய்
நிலத்தினில்
நின்றதையெல்லாம்
ஆணிவேரோடு கோடாரி சாய்க்க! 

பசி தீர்த்திட
விரிந்திருக்கும்
பசுமைப்பாயை பலவழி சாலை 
திட்டம் சுருட்டி பாழாக்க! 

ஆறு,நதி,குளம்,குட்டை,ஓடைகள் 
ஒன்று விடாமல் தொழிற்சாலைகளின் 
சாயக்கழிவுகள் நாசமாக்க!

காடு,மலைகள், மிருகங்கள் அனைத்தும் 
அதிகார பலம் கொண்ட கரங்கள் அழிக்க!

விழித்துக்கொண்டோம்
நாட்டு மக்கள் இனியும் 
அபகரித்திட விடமாட்டோம்!

எண்ணில் அடங்கா
இழப்புகளை கண்ட இயற்கை 
அன்னை'யே பேரிடர் அழிவை 
தந்திடாது மக்களை மன்னிப்பாயா!

- தஞ்சை. ரீகன் 

**

பூவின்
நறுமணம் மோதி உடைவதில்லை
காற்று

போல
ஈரமற்று இருப்பதில்லை
தென்றல்

எதுவந்து
ஊடுறுவினாலும்
மன்னிப்பற்று மருவிக் கொள்ளும்
வெளியும் வெறுமையும்

மன்னிப்பாயா என்பது
ஊடலின் வெளிப்பாடு
அன்பின் வருடல்

ஊடலானாலும்
உதவாத மோதலானாலும்
சண்டையெனக் கொள்ளாமல்
மன்னிப்பற்ற சமரசத்தில் 
மகிழ்ந்து கொள்ளும்
கடலும் பூமியென
விண்ணும் மண்ணும்

தொடாமல்
சுகித்துக் கொள்ளும் நிலவும்
சூரியனும்
அகத்தினால் பறிமாறிக் கொள்ளும்
அன்பு

மன்னிப்பாயா என்று
மண்டியிட்டுக் கொள்வதில்லை
ஒளியும் இருளும்
சுகமாகவே ஊடாடிக் கொள்ளும்

மன்னிப்பாயாயென
மண்டியிடுவது அழகல்ல
வீரனுக்கு

மன்னிப்பும் தண்டனையும்
பூவும் மணமுமாய்
நிகழ்ந்துவிடும் காதலில்

நீதி
எப்போதும் வேண்டுவதில்லை
மன்னிப்பு

ரட்சிக்காத கடவுளிடம்
கூறுபோடும்
மதங்கள் முன்னும்
சாதிகளின் சாக்கடைகளிடமும்
சிந்திக்கும் அறிவு
கோருவதில்லை மன்னிப்பு...

யாரையும் யாரையும்
மன்னிக்காத 
மாபெரும் அன்பால் அரவணைத்தால்
சமூகம் சந்தோஷப்படும்...

- கவிஞர் கா.அமீர்ஜான்

**

பொன்னால் இதயமில்லை உனது 
மரப்பாச்சி இதயமில்லை எனது
நீ தூக்கிப் போட்டு விளையாடிட

உந்தன் அனுமதி யின்றி உன்னை 
நினைத்தது என் தவறே என்னை 
மனமிறங்கி மன்னித்து விடும்

நினைத்து விட்டதை அழித்துவிட
எடுக்க க்கூடாத முயற்சிகளை 
எடுத்தும் அழிக்க முடியவில்லை 

சாயத்தில் முங்கிய நூலைப்போல்
ஏறிய சாயம் மறைய மறுக்கிறது 
ஒரே வழி தீயிட்டு எரிப்பது தான் 

அதையும் செய்கிறேன் உனக்காக
மீடூவின் அச்சத்தில் கேட்கிறேன்
மன்னிப்பாயா? அப்போதேனும்

- ஆபிரகாம் வேளாங்கண்ணி, மும்பை

**
இதயம் என்னும் கடிகாரம்
எப்போது ஓய்வெடுக்கும் என்று
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...
காதல் என்னும் கடலில்
அலையாக நான் தோன்றி
உன்னை அடித்துச் சென்ற
காரணத்திற்காக
நீச்சல் தெரியாத உன்னை
கடலில் தத்தளிக்க விட்டுவிட்டு
அலையாக கரை அடைந்த
என்னை மன்னிப்பாயா அன்பே!

- புனிதா தங்கராஜ், காயல்பட்டிணம்

**

காலம்பாராமல் துடிக்கும்
இதயத்தை வலியால் 
துடிக்க வைத்த
என்னை மன்னிப்பாயா...
காலம் முழுவதும்
காயமின்றி காதல்
வலியைத் தந்த
என்னை மன்னிப்பாயா...
கனவுகள் சுமந்த
கண்கள் இரண்டிலும்
கண்ணீரைத் தந்த
என்னை மன்னிப்பாயா...
நீரின்றி தவிக்கும்
மீனாக உன்னை
நினைவில் தவிக்கவைத்த
என்னை மன்னிப்பாயா...
நீர்தரும் மேகம்
மௌனமாய் பிரிவதுபோல்
உன்னைப் பிரிந்த
என்னை மன்னிப்பாயா...
ஆசையென்ற தீபத்தில்
எரிந்த அன்பெனும்
ஒளியை அணைத்த
என்னை மன்னிப்பாயா...
அலைகடலாய் இருந்த 
உன்னுடைய வாழ்வில்
அமைதியைத் தந்த
என்னை மன்னிப்பாயா...

- கவிஞர் நா. நடராசு

**

சாதிகள் பார்க்காமல் படித்தோம்
சாதிச்சான்றிதழ் கொடுத்தே 
இடம் பிடித்தோம்.இந்த;
பிரிவினை என்பதை, 
தரம் பிரித்தது நாம் தானே.--  அது தானே

நம்மை நாமே பிரித்திட வைத்தது, 
நமக்குள்ளே வேறுபாட்டை 
புகுத்திட வைத்தது.--- இது தானே;
நமக்குள் நாமே படைத்திட்ட வரலாறு .--- 
அதுவும் இதுவும் தந்ததே,
அன்று முதல் இன்று வரை தகராறே.
இன்னும் சில பிரிவினை;
ஒரு பக்கம் தீவிரவாதி, 
மறு பக்கம் சுயநலவாதி.
எல்லாப்பக்கமும், அமைதிக்கு வலி.
உலகமக்களாகிய எங்களை வேறுபாடின்றி,
தாங்கி நிற்கின்ற பூமித்தாயே, 
எங்களை மன்னிப்பாயா, என்று,
எல்லோரும் ஒன்றாக நின்று கேட்பதே,  
இதற்கு  நல்ல வழி…..

- களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்

**

கண்மூடிக்கிடக்கும் உன்னைக்
காணக்காண எந்தன்
கல் நெஞ்சமும் கரைகிறதே !
கனிமொழியே பேசிய உன்னிடம்
கடுஞ் சொல்லையே உதிர்த்தேன்!
கண்கள் பூக்க காத்திருந்த
உன்னைக்
கண்டும் காணாமல் இருந்தேன் !
கரம் பிடித்த நாள் முதல் என்னைக்
கண் இமை யாய்க் காத்துவந்த உன்னைக்
காலம் கடந்தே அறிந்தேன் !

தவறுகள்  தப்பாகத் தெரிவதிலை
தனிமை உணர்வு வாட்டும் வரை !
சிரிப்பு என்பது மனிதனின் வரம் என்பர் .
சிரிக்கவே மறந்த என்னை
மன்னிப்பாயா ? நீ
கண் திறந்து பார்க்கும் நன்னாளுக்காகக்
காத்திருக்கிறேன் கண்ணே !
மன்னிக்கத் தெரிந்தவள் நீ என்பதால்
மனம் வருந்தி
மன்னிப்புக் கேட்கிறேன்
மனிதனாக  !
மன்னிப்பாயா ? 

- ஜெயா வெங்கட், கோவை

**

மாத சம்பளத்துக்கு மாரடிக்கும் நீ,
மிதிப்பவனை மதிக்கிறாய்;
உன்  உற்றார்-உறவுகளை,
சந்திக்கநேரமில்லாம தவிக்கிறாய் 
உறவே மன்னிப்பாயா ?

மலையின் அருவி,
மண்ணின் தாகம் தீர்த்தது;
மனிதன் மலையையே தீர்த்தான்,
பெருமழையில் வெள்ளக்காடு !
மலையே மன்னிப்பாயா ?

இறைவனை இதயத்தில் வைத்து,
தன்னம்பிக்கையே வாழ்வென வாழ வேண்டிய நீ;
மூடநம்பிக்கையில் வாழ்கிறாய் !
இறைவா மன்னிப்பாயா ?

இயற்கையாக
விளைந்தது குறைவென்று;
செயற்கை மருந்தளித்த
குற்றத்திற்க்காக !
மண்ணே மன்னிப்பாயா ?

விண்ணில் தேக்கிய,
மண்ணை நோக்கிய,
மழையின் பயணத்தை;
மரம் வெட்டி தடுத்ததற்காக !
மழையே மன்னிப்பாயா?

வேண்டியபோது 
கிடைக்காதது;
கிடைக்கும்போது 
தேவையில்லாமல் போகிறது !
காலமே மன்னிப்பாயா ?

அடுத்தவன் குறை,
உன் நிறையென்றால்;
உன் வாழ்வில்,
ஏது நிறை?
வாழ்வே மன்னிப்பாயா ?

நீதிதேவதையே
ஒரு நீதி சொல் ?
வீதியில் 
நிற்போருக்கு,
நாதி யார் ?

தெரிந்தே தவறு செய்பவரை,
நீ நேராக தண்டிப்பாயா?
திருந்தி வாழ நினைத்தால்,
கொஞ்சம் பொறுத்து மன்னிப்பாயா ?

- ம.சபரிநாத்,சேலம்

**

தெரிந்து செய்தால் தப்பாகும்,
தெரியாமல் செய்தால் தவறாகும்,
காலகாலம் செய்வதனால்,
தப்பானது தவறாகாது,
தவறானது தப்பாகாது,
நெஞ்சிலுள்ள வஞ்சகமே 
நினைத்து நினைத்து பார்க்கையிலே 
தப்பாமல் தவறாகும்,
மஞ்சம் ஒன்று வாங்கி வந்தேன் 
நிம்மதியாக துயிலத்தான் 
நிம்மதி மட்டும் கிடைக்கவில்லை!
ஏனென்று எனக்கு புரியவில்லை!
தப்பானது தப்பானதுதான் - 
என்ன தப்பு என்கையிலே 
துரோகம் என்று உண்டானது 
மரணம் கூட வந்தாலும்
 துரோகம் மட்டும் கூடாதது,
செய்த துரோகம் நினைக்கையிலே 
என்னை நீ மன்னிப்பாயா!

- மு.செந்தில்குமார்

**

கட்டுண்டு காதலில் களித்திருந்த காலம்
சிட்டுகளாய் சிறகடித்துத் திரிந்த வேளை
மொட்டுகளாய் எதிர்காலக் கனவுகளில்
வட்டமிட்ட நினைவுகளில் குற்றமில்லை

குடும்ப வாழ்வு தொடங்கிய குதூகலத்தில்
உடும்பாகப் பிடித்து எழுந்தது ஆணாதிக்கம்
இடும் கட்டளைகளை ஏற்கும் பணிக்காரியாய்
திடும் என்று சர்வாதிகாரம் கொடி கட்டியது

பொருளீட்டலில் தடுமாறும் நேரமெல்லாம்
அருளின்றி அள்ளிக் கொட்டியது வாய் ஆயுதம்
மருள் நீக்காது மாய்ந்து மாய்ந்து பாய்ந்தது அது
சுருள் சுருளாக வசவுகள் வரிசை கட்டினவே

எல்லாம் பொறுத்தாய் துணையாய் நின்றாய்
இல்லாள் என்பதை நல்லறமாக்கி நடந்தாய்
நல்லறத்தில் வளர்த்த மகவுகள் தலையெடுக்க
புல்லாக நினைத்து என்னை வதைக்கிறாயே

முதுமையில் அல்லலுறும் நேரம் அருள்வாய்
பதுமையாய் ஆகிய என்னை மன்னிப்பாயா
புதுமைப் பெண் என்கிற பெயராகும் உனக்கு
ஓதுக்கிய என்னை நீ ஒதுக்காது மன்னிப்பாயா

- கவிஞர்  ராம்க்ருஷ்

**
நீ அழகு எனச் சொல்ல மறந்து
நிலவை அழகென்றேன்

உன் சொல்லமுது இனிதென அருந்தாது
தமிழருந்தினேன்

உன் விழி படபடப்பை ரசிக்காமல்
பட்டாம்பூச்சியின் சிறகசைப்பில் 
சிறைபட்டு மகிழ்ந்தேன்

இன்று மலர்ந்த ரோஜாவை
உனக்குச் சூட்டாமல்
அம்மனுக்கு வைத்து அழகு பார்த்தேன்

உன் 
பட்டாடையின் வனப்பில் மயங்காது
பஞ்சவர்ணக்கிளியின் நிறத்தில்
மனம்கரைந்து போனேன்.

எல்லாம்
உனக்குள் உள்ளபோது
வெளியில் எட்டிப்பார்த்ததில் 
வெளிபட்டன மாயைகள்

மன்னிப்பாயா?

-கோ. மன்றவாணன்

**

பூரணமாய் உணராமல் 
புரிதலுமே இல்லாமல் 
போட்டோமே உரமதினை 
அழித்தோமே புழுவதனை 

ஆழ்குழாய் கிணறு போட்டு 
அப்பப்போ குப்பை போட்டு 
ரசாயன தண்ணீர் பாய்ச்சி 
பாசமான உன்னை போய்
பற்றறுக்க வந்தோமே 

அணு அணுவாய் அழித்தோமே 
அன்னையே உன் வளத்தை 
அறியாத மூடர்களாய்
புரியாத பேதைகளாய்  

பொறுமைக்கு பூமித்தாயை 
பொதுவாக சொல்வதுண்டு 
அறியாத  பாவிகள் யாம் 
அன்னையே  மன்னிப்பாயா!!!

- பார்.விஜயேந்திரன் கருங்குழி 

**                                     

மன்னிப்பாயா மகேசனே என்னை நாளும்
மறந்தே உன்னை திரிந்ததற்கு!
உன்னிப்பாய்  நானும்  உன்னை  நித்தம்
உளத்தி  லேற்றித் தொழாததற்கு!
கன்னித்தாய்  எனும்  பார்வதி  தேவியை 
கணமும் மறந்து அலைந்ததற்கு!
பண்ணிப்  பண்ணி   வரும்  நாட்களிலுன்
காலடி தொழுது மகிழ்வதற்கு!

இயற்கையே நீயும் என்னை என்றைக்கும்
பொறுத்தருளி மகிழ்வு சேர்ப்பாய்!
செயற்கைப் பொருட்களைத் தானே நாமும்
சென்றடைந்து வாழு கின்றோம்!
படர்கை நீண்டு மெல்லத் தினந்தினம்
பக்குவம்   மனம்   நிறைக்க!
இடர்களை ஒடித்துப் போட்டு இன்பத்தை
இனி  நாளும்  சேர்ப்போம்!

எல்லோர்க்கும்  இனிதா  மிங்கு  எதிலுமே
நல் அமைதி தேடல்!
நல்லோர்க்கும்  நல  வாழ்வி  லென்றும் 
நன்மையே அமைவ தில்லை!
பல்லோர்க்கும் உதவி செய்யும் பாங்கினை 
பணிந்து நாம் மனதிலேற்போம்!
அல்லார்க்கும்   இப்   பூவுலகில்   நாளும்
அன்பான  வாழ்வு   சேர்க!

-ரெ.ஆத்மநாதன்,  கூடுவாஞ்சேரி

**

காற்றின் ஓசையில் 
கிளைகளின் ஆடலில்
இலைகளின் அசைவில்
மலர்களின் மணங்களில்
உன்னைக் கண்டேன்
நினைவில் நிழலாய் நீ 
இயற்கையின் எழிலாய் நீ
இதயத்தில் ஓவியமாய் நீ
கலைகளில் நாதமாய் நீ
என் காவிய கதாநாயகி நீ
என்னருகே நீ இருந்தும் கூட 
எல்லா அழகிய வடிவமாய் உன்னைக்
காண்பதால் நீ என்னை மன்னிப்பாயா!

- மீனாள் தேவராஜன்

**

அது வரலாற்றுக்கும் முந்தைய காலம்
உன் தலைமையில் தான், சுற்றிக் கொண்டிருந்தோம்
அன்று எங்கள் கடவுள்கள் அனைத்தும் உன் வடிவம் தான்
உன் உதிரம் தந்து மனிதனை அறிவனாய் வளர்தெடுத்தாய்
அதனால் மென்மையானாய் அடுக்களையில் தள்ளப்பட்டாய்
அங்கிருந்து  வெளி வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டாய்
போர்க் காலங்களில் நீயே முதலில் குறி வைக்கப்பட்டாய்
பணியிடம் தொடர்ந்து பல இடங்களிலும் குறி வைக்கப்பட்டாய்
உன் பேச்சைக் கேட்கக்கூடாது என ஐயனாலும் வசை பாடப்பட்டாய்
இவற்றிற்காக மன்னித்துவிடு எனக்கேட்டால் 
மாதவம் செய்து பிறந்த நீ  எமை மன்னிப்பாயா?

- கு.குமரகுருபரன், சாத்தூர்

**
கண்ணே! மணியே! 
கண்ணைக்குத்திய உன் கை விரலை 
துண்டிப்பாயா   ? 
பெண்ணே என்னை நீ 
 மன்னிப்பாயா ?

தவழும் தளிர்ப் பருவம் தடுக்கி 
விழுந்தால் தாங்கித் தழுவிய 
தாயும் மன்னித்தாள்!

வளரும் பருவத்தில் வந்த தீயபழக்கம்  உதறிடஉதவிய 
தந்தையும் மன்னித்தார் !

பேசும் மொழியில் பிறழும் சொற்களைத் திருத்தி வாசித்து 
ஆசானும் மன்னித்தார் ! 

உணர்ச்சி வேகத்தில் உண்டான 
கோபத்தில் உளறிய வார்த்தையைக் கிளறிக் கொல்லாதே!

ஒரு வார்த்தைக்கு உம்மென்று இருக்கலாமோ? 
திருவாய் திறந்து திருமுகம் மலராதோ ? 

பகலும் போயிற்று பசியும் வாட்டுகிறது ! - என்
மன(ண)ங் கொண்டவளே!
மன்னிப்பாயா?  

- கவிஞர் எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்

**

அது வரலாற்றுக்கும் முந்தைய காலம்
உன் தலைமையில் தான், சுற்றிக் கொண்டிருந்தோம்
அன்று எங்கள் கடவுள்கள் அனைத்தும் உன் வடிவம் தான்
உன் உதிரம் தந்து மனிதனை அறிவனாய் வளர்தெடுத்தாய்
அதனால் மென்மையானாய் அடுக்களையில் தள்ளப்பட்டாய்
அங்கிருந்து  வெளி வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டாய்
போர்க் காலங்களில் நீயே முதலில் குறி வைக்கப்பட்டாய்
பணியிடம் தொடர்ந்து பல இடங்களிலும் குறி வைக்கப்பட்டாய்
உன் பேச்சைக் கேட்டக்கூடாது என ஐயனாலும் வசை பாடப்பட்டாய்
இவற்றிற்காக மன்னித்துவிடு எனக்கேட்டால் 
மாதவம் செய்து பிறந்த நீ  எமை மன்னிப்பாயா?

- ஜி. குமரகுருபரன் 

**
பிறக்கும்போதே சாதிமதங்களை 
அரங்கேற்றும் சமுதாயத்தை
நஞ்சறியா பிஞ்சு 
மழலையே மன்னிப்பாயா..?
அந்நிய மோகத்தால் 
உயர்பண்பாட்டினைச் சீரழிப்போரை
இந்திய தாய் திருநாடே 
மன்னிப்பாயா..?
தமிழீய மக்கள் துயர்பட்ட வேளையில்
தோள் கொடுக்காதாரை காலமே 
நீ மன்னிப்பாயா..?
போரால் வன்முறைகளால் 
பூமியைச் சுடுகாடாக்கும்
பேராதிக்க சக்திகளைப் 
பூமித்தாயே மன்னிப்பாயா..?
அடுக்கடுக்காய் அடுக்குமாடி 
கட்ட ஆற்றுமணலை
அடியோடு அள்ளியதற்கு 
ஆற்றுச்சுவடே மன்னிப்பாயா..?
காலந்தோறும் போராடி - 
நீர் வந்தப்பொழுதினில்
கடலில் வீணாய்விட்டோரை 
காவிரித்தாயே மன்னிப்பாயா..?
பஞ்சபூதங்களை அசுத்தமாக்கி 
அடுத்த தலைமுறைக்கு
வஞ்சகம் செய்வோர்களை 
இயற்கையே மன்னிப்பாயா..?
கிடைக்கின்ற மிதப்பில் 
உணவினை வீணாக்கி
குப்பையில் வீசுவோரை 
விவசாய நிலமே மன்னிப்பாயா..?
அடுத்தவரையும் தள்ளிவிட்டு, 
வரிசையிலும் நிற்காது
ஆலயதரிசனத்துக்கு ஓடுபவனை 
ஆண்டவனே மன்னிப்பாயா..?
கண்முன் நடக்கும் கொடுஞ்செயலைத் 
தட்டிக்கேளாமல்-
கண்டும்காணாமல் செல்வோரை 
நல்நெஞ்சே மன்னிப்பாயா..?
பெண்கொடுத்தால் போதுமென்றுரைத்து; 
கொடுத்தப்பின்னர் கணக்கில்லாமல்
பொன்பொருளைக் கேட்போரை 
பெண்ணினமே மன்னிப்பாயா..?
தன்னைச்சுற்றி நடப்பதையறியாது 
கைப்பேசியிலேயே மூழ்கியிருப்பவரை
தகவல் தொழில்நுட்ப அறிவியலே  
மன்னிப்பாயா..?
'கவிதைமணி' சிந்தனையில் 
உனதழைப்பினை மறந்தேனடி
என்னவளே என்னை செல்லமாய்
மன்னிப்பாயா..?

- கவிஞர்.  இரா. விநாயகமூர்த்தி சென்னை

**
காதல் பூக்கள் எடுத்தேன்!
கவிதை மாலையாய் தொடுத்தேன்!
சாதல் வரையும் சங்கத்தமிழாய்
சாயவேண்டும் உன் மடியிலென
உவகையும் மனதில் கொண்டேன்!
உள்ளன்புடன் உன்னைக் கண்டேன்!
என்பெயர் உன்னிதழ் உச்சரிக்கையில்
எனக்குள் இன்பப்பேய் தலைவிரித்தாடும்!
ஏதேனும் ஒரு நாள் காணாவிட்டாலும்
எங்கே போய்த்தொலைந்தாய் நீயென
எரிச்சலும் உச்சமடையும்..
இதயமும் அச்சமடையும்!
இத்தனை அன்பைத் தேக்கிவைத்திடினும்
இனியவள் உன்னுடன் வாழக்
கொடுத்துவைக்காத 
அன்பான என் தென்றலின்
அடுத்துவராத 
இந்தப்பாவியை
இதயம் நீயும் மன்னிப்பாயா?

- கவுதம் கருணாநிதி, திருச்சூர், கேரளா

**
 
சிரித்துக் கொண்டிருந்த
பூக்களை ப்பறித்து
தலைவன் கால் மிதிபட்டு
அழ வைத்தேனே!!
செடியே என்னை மன்னிப்பாயா ?
உன்னை வெட்டித்தான்  எங்கள்
அமைச்சர் அகமகிழ
கட் அவுட் வைத்தேனே !!
மரமே என்னை மன்னிப்பாயா ?
கன்றுகளிடம் களவாடிய
பால் சுரங்கங்கள் – எங்கள்
நாயகனின் உருவ பொம்மையை
குளிக்க வைத்தேனே!!
பசுவே என்னை மன்னிப்பாயா ?
மூச்சின் மூலத்தை புகையாக்கி
விலங்குகளின் ஈரல்களை கரியாக்கினேனே !!
காற்றே என்னை மன்னிப்பாயா ?
பெண்ணிடம் காதல்
கொண்ட நான்
மண்ணிடம் காதல் கொள்ள
மறந்தேனே ! நிலமகளே
என்று என்னை மன்னிப்பாய் ??  

- கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி,புதுச்சேரி

**

பகல் நேரம் பனிக் காற்றாய் 
பாவை உந்தன் நேசம், பார்க்காது 
நீ போனால் பரிதவித்து மாயும்,
பூப்பூவாய் மரமெங்கும் 
புன்னகைகள் ஜொலிக்க 
நீ வரும் வழியும் ஒற்றையடி 
திருவிழாவாய் திகழும்,
அருகாமை ஆவாரை தலைசாய்ந்து நாண,
அவரைக் கொடி பந்தலிலே
அணங்கவளின் வாசம்,
ஆயிரம் தான் பாயிரங்கள் 
அனுதினமும் எழுத,
ஆராரோ - பாடி நீயும் வேறெங்கோ வசிக்க,
ஆரறிவார் ஆழமான காதலதின் நியாயம் 
ஆங்கோர் தினம் பரிமாற்றப் 
பார்வைகளுடன் ரெயில் நிலையம் ஒன்றில் - 
கையிலிரு குழந்தைகளுடன்
நீண்ட நடைமேடை
மாற்று இரயில் பயணத்தில்
லித்த திவ்வாறு 
"மன்னிப்பாயா" 
மற்றுமொரு முறை - என்று

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**

மலர் என்று 
தெரியாமல் மெளனம் காத்தேனே மன்னிப்பாயா?

வ௫வது தென்றல் என
தெரியாமல் 
புயலென நினைத்து
ஒதுங்கி நின்றேனே
மன்னிப்பாயா?

உள்ஒன்றும் புறம் ஒன்றும் வைத்து
பேச அறியேனே நான்..
மன்னிப்பாயா?

உண்மையை உணர்ந்தவன் நான்..
கற்பனையை மறந்தவன் நான்..
மன்னிப்பாயா?

இயற்கையை ரசிப்பவன் நான்
செயற்கையை 
தாண்டி செல்பவன் நான்....
மன்னிப்பாயா?

உன் காதல் மொழி
புரியாதவன் நான்,...
உன் கண்சிமிட்டலின்
அர்த்தம் அறியாதவன் நான்...
மன்னிப்பாயா?

உன் கள்ளச்சிரிப்பின்
காதலை அறியாதவன்
நான்..!
உன் கால்கொலுசின்
ஓசையை உணரா உத்தமன் நான்...!
மன்னிப்பாயா?

க௫ங்கூந்தலின்
வாசத்தில் கவிதை 
வாசிக்க மறந்தவன் நான்....!
மன்னிப்பாயா?

- ர.ஜெயபாலன், வெள்ளகோவில்

**

ஒருகன்னம்  மீதறைந்தால்  மறுகன்  னத்தை
    ஓர்மையுடன்   காட்டென்னும்   அருங்க  ருத்தை
இருகைகள்  கால்களினைச்  சிலுவை  தன்னில்
    இருத்தியாணி  அடித்துமுள்ளின்  மகுடம்  சூட்டி
வருத்திட்ட  போதவரின்  தவறு  தன்னை
    வளரன்பால்  மன்னியுங்கள்  என்று  ரைத்த
அரும்பண்பை  ஏற்றுமன்னிப்  பளித்த  தாலே
    அடைந்திட்ட   நாட்டுநிலை  எண்ணிப்  பார்ப்பீர் !

நாள்தோறும்  தவறுகளைத்  தெரிந்தே  செய்யும்
    நாடாளும்   அரசியலார்  கயவர்  தம்மை
தாள்கோப்பு  நகர்த்துதற்கே  இலஞ்சம்  கேட்டுத்
    தாமதிக்கும்  அரசாங்க  அலுவலர்  தம்மை
ஆள்பண்பு  படிப்பொழுக்கம்  பார்த்தி  டாமல்
    அவர்சாதி  தனைப்பார்க்கும்  கீழ்மை  யோரைத்
தோள்கொடுத்துத்  தாங்கிநாமோ  மன்னித்  தாலோ
    தொடர்கின்ற  அவர்செயலால்  நாடே  பாழாம் !

கல்வியினை  வணிகமாக்கி  விற்போர்  தம்மைக்
    கலப்படத்தால்  பொருள்விற்றுக்  கொழுப்போர்  தம்மை
நல்லிணக்கம்   கெடுத்துமத  சாதி  தூண்டி
    நட்புதனைப்  பகையாக்கும் வன்நெஞ்  சோரைக்
கொல்லுகின்ற  விடமதுவை  வீதி  தோறும்
    கொடுத்துவாழ்வைப்  பாழ்செய்யும்   அரசாங்  கத்தை
எல்லோரும்  ஒன்றிணைத்து   தண்டித்  தால்தான்
    ஏற்றங்கள்  நாம்பெறுவோம்  நாடும்  வாழும் !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

வயோதிகத்தின் இறுதியில் 
படுத்த படுக்கையாய் இருந்தவர் 
தன் இளமை காலம் முதல் 
தன் மனைவிக்கு ஏற்படுத்திய 
துயரங்களை நினைத்து வருந்தி 
"மன்னிப்பாயா?" என அழ,
எந்த சலனமும் இல்லாமல் 
எழுந்து போனாள் பாட்டி!

-சுபர்ணா

**

எதிர்வீட்டு ஜன்னல்கள்
எப்போது திறக்குமென்றே
எத்தனை நாள் தவமிருந்தேன்!?

எந்தன் ஆதவனின் கண்களில்தான்
எத்தனை கோடி சூரிய பிரகாசம்!?
பெண்களைவிட ஆணாதிக்கப்
பார்வைதான் அற்புதமானது!
காதலுக்குள்ளேயே கட்டிவைப்பது!!

வசீகரப்பார்வையால்
வசமாகி் வலு இழக்கும் ஆண் மனம்
என்றெண்ணி எத்தனை நாட்கள்
உந்தன் மனத்தில் ஊடுருவி நின்றேன்
மன்னிப்பாயா!?

காதல் என்பது கண்ணாமூச்சி விளையாட்டுதானா?
முகக்குறிகளில் அகமே காட்டும்
மாயக்கண்ணாடி போன்றதுவா?

விடைகள் தெரியாமலே
வீசிய கணைகளுக்குள்
விருப்பங்கள் இன்றியே
மாட்டிக்கொண்டு தத்தளித்தாய்
உந்தன் மனம் கெடுத்த மங்கையை
மன்னிப்பாயா!?

காதல் மதி ஒளிவீச
காலமெல்லாம் காத்திருந்தேன்
அறிவுமதி ஒளிவீச
அற்புதமாய் நடைபயின்றாய்!

ஊர் உலையில் எந்தன் பெயரோடு
உந்தன் பெயரும் கெட்டழிய
உவந்தபடிநானே காரணமானேனே
மன்னிப்பாயா?

- புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன், சிறுமுகை

**

நட்பென்னும் பந்தலில் விரிசல் விட்டு நீர் சொட்டக் கண்டேன்! 
கசியும் நீர் தெருவெல்லாம் வழிந்தோடக்கண்டேன்!
நேற்றுவரை சிரித்து மகிழ்ந்த நெஞ்சம் வாடக்கண்டேன்!

கொடி படர்ந்த பந்தலிலே விச பாம்பினால் விரிசல் வந்ததோ?
இல்லை வழிபோக்கு காகமிட்ட முள்ளினால் விரிசல் வந்ததோ?

பார்த்த விசயங்கள் கண்களுக்கு அப்பாலே!
கேட்ட விசயங்கள் காதுகளுக்கு அப்பாலே!
என விவரம் அறிந்து பேசமால், ஆத்திரத்தில் வந்த கோபம் வாகை சூடிக்கொண்டதே!

நாளோடு மெருகும் நட்பு நடைமிதியாய் போனது! 
போனது திரும்பாது, இன்றோ நான் உணர்கிறேன் பிழையை! 
திருந்த ஓர் வாய்ப்பளிப்பாயா!
நட்பென்னும் பந்தலை இருகரம் கொண்டு தைத்திடுவோம்! 
ஒருமுறை மன்னிப்பாயா!
மன்னிப்பாயா?

-இனிய தமிழ் செல்வா, ஓமன்

காற்றைப் போல என் வாழ்வில் நுழைந்து
காலத்தினுள் தொலைந்து போனவனே
உன்னைக் காணாது துயருகிறேன்
யுக காலப் பிரிவுக்குப் பின்தான்
விழித்தெழுந்தேன்
உனது அழைப்பு மந்திரச் சாவியாகி
குகையின் கதவைத் தட்டுகிறது
ஆயினும் திறக்கப் போவதில்லை
மூடிய விழிகளிலிருந்து நீர் வழிய
கோருகிறேன்,மன்னிப்பாயா?

- சினேகா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com