கடந்த வாரத் தலைப்பு ‘அன்பின் வழியது’ - வாசகர்களின் கவிதைகள் பகுதி 1

தினமிங்கே  சண்டைகளால்  கைக  லந்து தீராத  பகையாக  நிற்ப  தெல்லாம்
கடந்த வாரத் தலைப்பு ‘அன்பின் வழியது’ - வாசகர்களின் கவிதைகள் பகுதி 1

அன்பின் வழியது

தினமிங்கே  சண்டைகளால்  கைக  லந்து
    தீராத  பகையாக  நிற்ப  தெல்லாம்
மனம்திறந்து  காட்டுமன்பால்  மாய்ந்து  போகும்
    மறைத்துசெய்யும்  சூழ்ச்சியெல்லாம்   முடிந்து  போகும் !
கனவென்றே  நினைத்திருக்கும்  ஒற்று  மையில்
    காழ்ப்பெல்லாம்  நீங்கிடவே  கைய  ணைக்கும்
நனவாகும்   யாதும்ஊர்  கேளி  ரென்று
    நயமாகக்  கணியன்தான்  சொன்ன  சொல்லும் !

பால்நிறமாய்  மனமன்பில்  மாறிப்  போனால்
    பனிகதிரில்   கரைதல்போல்  கரவு   போகும்
நால்வரினை  அணைக்கின்ற நேயம்   தோன்றும்
    நலிவுகளைப்  போக்கிடவே   இரக்கம்  கூடும் !
ஆல்விழுது  மரம்தன்னைத்  தாங்கல்  போல
    அருளாலே   சுற்றத்தைப்  பேணிக்  காக்கும்
சூல்கொண்ட    தாய்காட்டும்    இன்ப  மாக
    சூழ்ந்திருக்கும்  அனைவருக்கும்  இன்பம்  ஊட்டும் !

உடலிரண்டோ   உளமிணைந்தால்   ஒன்றா  தல்போல்
    உள்ளத்துள்  அன்பிருந்தால்  ஒன்றா  வோம்நாம்
வடநாடு  தென்னாடு  வேறு  பாடும்
    வாய்த்தமொழி  நாகரிக  வேறு  பாடும்
தடம்மாற்றி   நதிகளுக்குத்   தடைகள்  போட்டுத்
    தடுக்கின்ற  வேறுபாடும்  தகர்ந்து  போகும் !
முடவெண்ணம்  நீங்கிவிடும் !  வளங்க  ளெல்லாம்
    முழுநாட்டிற்   குரிமையென்றே   இன்பம்  பூக்கும் !


- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

உன் கண்கள் உனதாயினும் 
உனது உருவமதை உனக்கு 
இன்ன தெனக் காட்டிடாது 

நிலைக் கண்ணாடி முன்னாடி 
நின்றாலே உன்னுருவை காட்டிய 
பின்னால் உனக்கு தெரியும் அஃதே

பிறருக்கு உனது அன்பைக் காட்டு
பதிலுக்கு பிறர் அன்பை பொழிவர்
உனை நீ அறியும் அன்பின் வழியது

குறை குடமதை நிறைகுடமாக்கும்
சக்தி அன்பிற்கு மட்டுமே உள்ளது அச்
சக்தியை பெருகிற அன்பின் வழியது

- ஆபிரகாம் வேளாங்கண்ணி, மும்பை, மகாராஷ்டிரா.

**

எலும்பை தோல் போர்த்திய வெற்று உடம்பை 
அன்பு எனும் அரவணைப்போடு உயிர் தந்தவளே... 

உடலை இறுக்கி உதிரத்தில் ஒரு பகுதியை 
உணவாக்கி அன்போடு உயிரூட்டியவளே...

பள்ளி செல்லும் முன்னே அ முதல் ஃ வரை 
சொல்லித்தந்த முதல் ஆசானே...

கருவறை முதல் கல்லறை வரை என்பெயரை
உலகிற்கு அளித்த உத்தமியே...

அறத்திற்கும்,மறத்திற்கும் அன்பே துணை
என்று அமைதி காத்த பெருமகளே...

உனது வலியை தாங்கி எனது வாழ்விற்கான 
வழியை வகுத்து கொடுத்தாயே 
"என் தாயே" அன்பின் வழியது எது என்றால் அது "நீயே"...!

- க.முனிராசு, ஜோலார்பேட்டை

**

புத்தர்  இயேசு  நபிகள்  காந்தி 
நித்தம் நடந்த  அன்பின்  வழியது; 
அருட்சுடர்  வள்ளலார்  பெருமான்  வழியும் 
கருணை  அன்னை  தெரசா  வழியும் 
வையந்  தோறும்  உயிர்வதை  யற்ற 
மையக்  கருத்தாய்  மனிதம்  போற்றி 
அறமும்  அடக்கமும்  ஒழுக்க ஒளியும் 
நிறைந்து  ஒளிர்ந்து  தீமை  இருளை 
எரிக்கும்  வழியாம்  அன்பின் வழியது; 
அருவி  நீராய்  அகத்தில்  பாய்ந்து 
திருக்குறள்  போன்ற  மறைகளின்  குணமும் 
தருவாய்  மனத்தில்  நின்று  நிலைத்திட 
முற்றும்  துறந்த  முனிவர்  போன்று 
பற்று  அறுத்து  ஆசை  துறந்தால் 
மொழிஇன  சாதி  மதமெனும்  பொல்லா 
இழிவுக(ள்)  இன்றி மனிதம்  தழைக்கும்; 
வேறு  பாடுகள்  என்ற  வரப்புகள் 
கூறு  போடா  உலகமாய்  நித்தம் 
சீருடன்  துலங்க  சிறப்புகள் பெருகிட 
வேருடன்  தழைக்கும்  மரங்களாய்  நின்று 
பாரும்  தழைக்க  அன்பின் வழியே 
அனைவரும் சென்றால்  சூரிய(ன்) நிலவும் அணைந்து கருகிக் கறிக்கட்டையாய் 
மறைந்து  போன  போதும் 
நிறைந்த  ஒளியால்  நானிலம் ஓளிருமே! 

- நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன்; பெங்களூர். 

**

அகிலமும் சொந்தமாகும், 
அனைத்தும் வசமாகும், 
எதிலும் இனிமையே காணும், 
எங்கும் புன்னகையே பூக்கும், 
எல்லோர் மனதிலும் 
பசுமையே படரும்,
வாழ்வினில் உயிரோட்டம் 
உறவாடும்,
வண்ணமயமான வளமைகள்  
வரும்
அன்பின் வழியதினிலே
 .
 - இரா.வெங்கடேஷ்

**

அன்னம் போன்றாள் அருகிருக்க
ஆர வாரம் ஏதுமின்றி,
கன்னல் மொழியாள் காத்திருக்க
கனிந்தே நானுஞ் சொல்லிடுவேன்!
அன்பின் வழியென்(று) ஆன்றோரும் 
அறிந்து சொன்னார் உயிர்நிலையை! 
இன்னல் தீர்க்கும் இன்மருந்து
இனிதாய்த் தருவாள் மகிழ்ந்திடுவேன்! 

– கவிஞர் வ.க.கன்னியப்பன்

**
அன்பு ஒன்றே உலகில்
நிரந்தரம்!
அன்பால் ஒ௫ நாள்  மாறும்
சரித்திரம்!

அன்பை நெஞ்சில் நிறுத்து!
அழகாய் கையை
உயர்த்து!

அன்பில் மகிழுமே இதயம்!
அகிலமே அழகாய் ஆகுமே உதயம்!

அன்பு ஒன்றே அழியா சொத்து!
அன்பு அழகான 
முத்து!

நிலையில்லாத வாழ்வில்
நிலைக்கட்டுமே அன்பு!

ர.ஜெயபாலன், வெள்ளகோவில்.

**

அன்புக்கு அதிகாரம் அளித்தான்
வள்ளுவன் 

வள்ளுவனின் அதிகாரம் அன்றைய மக்களுக்கு 
அளித்தது அன்புடைமை

அன்புடைமையால் அன்றைய சமுதாயம் 
அளித்தது நல்வாழ்க்கை

அந்த நல்வாழ்க்கை நாட்டிற்கு 
அளித்தது நல் வளங்கள்

அந்த நல்வளங்களால் வாழ்வாங்கு 
வாழ்ந்தது அன்றைய அவ்வையகம்

அன்பே கடவுள் - அன்றே கூற்றுரைத்தோர் 
நம் பெரியோர்

இன்றோ அதை விட்டொழித்தோம்
இன்றைய நாம்

அன்பிலாமை மக்களுக்கு அளித்தது
கடுஞ்சொல்

கடுஞ்சொல் விளைவித்த கோபத்தால்
விளைந்தது கலியுகம் - அன்பிலா இவ்வுலகம் 

கலியுகம் அளித்தது கட்டுக்கடங்கா
தீஞ்செயல்கள்

வள்ளுவன் கூற்றுப்படி என்புதோல்
போர்த்த உடம்பாக இன்று திரியும் எம்மக்கள்

வெறும் தோல் போர்த்திய எலும்புகளான எம்மக்கள்
என்று உயிர்பெறுவார்களோ அன்புடையவர்களாக

- ஆம்பூர் எம். அருண்குமார்

**

அன்பின் வழியது

அன்பின் வழி
அதுதான்
உயிர் நிலையாய்
ஆக்கிடவே!

பண்புகள் வழி
அதுதான் வாழ்க்கை
புகழ்பெற்றது ஆக்கிடவே!


கல்வியின் வழி
அதுதான் தன்
வாழ்வியல் ஆக்கிடவே!

ஆன்றோர் வழி
அதுதான் வாழ்க்கை
பயனுடைமை ஆக்கிடவே!

சிவனார் வழி
அதுதான் ஜீவனம்
சிறப்புடன் ஆக்கிடவே!.

- புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன், சிறுமுகை

**

அன்பின் வழியது செல்கையில்
உள்ளொளி ஊற்றாய்ப் பெருகும் !
உலகம் பரவசமாகும்!
தன்னிலிருந்து தெய்வமொன்று 
வெளிக் கிளம்பி
அது தன்னையே உற்று நோக்கும் !
குழம்பிய புதிருக்கு விடை கிடைத்த
மகிழ்ச்சியில் உள்ளம் கூத்தாடும்!
ஆட்டம் காட்டிய ஐம்பொறிகளெல்லாம்
அமுங்கிப் போய் குமுறும்!
பிரபஞ்சத்தில்  மூச்சுக் காற்று
உட்புகுந்து  அதுவே நீ! நீயே அது! 
என்றாகிப் பின் சூனியமாகும்!
உடம்பின் உள்ளே, உயிரில் கலந்த
இவ்வன்பெனும் தெய்வமானது,
எலும்பின் மீது தோல் போர்த்தியவர்க்கு
என்றுமே எட்டாக் கனியாகும்!

- திலகா சுந்தர், அமெரிக்கா

**


களிரும் பிடியும் பேடையும் ஆண் குயிலும் 
குலாவியே வாழும் குவலயத்தில் சேவலும்
கோழியும் குளிர்ந்து இயைந்தே வாழும்
உலகிலவை இயற்கை அன்பின் வழியாம் 
அங்கு கூடலுண்டு பிரிவுண்டு குலவலுண்டு
பங்குபாசமுண்டு, பரிவுண்டு பிணைப்புண்டு 
இயற்கையில் இருக்கும் அனைத்துயிர்களும்
இயற்கையாய் இணைந்து அனபுடன் வாழும்
ஐந்தறிவு உயிர்களிடத்தில் உண்டு அன்பு
ஆறறிவு உயிர்கள் அன்பின் வழி வாழுகிறதா?
மானிடனினமோ மகிழ்வுடன் வாழுகிறதா?
மாமனிதர்களென மார்தட்டும் இவர்கள்
கள்ளக்காதலுக்காகக் கணவன் குஞ்சுகளைக் 
கள்ளத்தனமாய்க் கொல்கின்றனர், கவலையின்றி
அன்பைப் பண்பைப் பகுத்தறிவை அடகுவைத்து 
பணத்திற்கே முதலிடம் கொடுக்கும் வாழ்க்கை
மனம்போன போக்கெல்லாம் மானிட வாழ்க்கை 
தன்னலமிகு ஈரமில் வறண்ட பாலை வாழ்க்கை
அன்பின் வழியை அடைக்கும் தாழானதோ!

- மீனா தேவராஜன்

**

காலை எழுந்தவுடன்  கடும்காப்பி – பின்
  காய்ந்துபோன கேப்பைத்த் தோசை அடுத்து
மதியம் வந்ததும் பழைய சோறு- மாண்புமிகு
   மாமியாருக்கு மரியாதை இப்படி! இருக்கும்

நிலையை மாற்ற ஒருமாற்று திட்டம் புதிதாய்
   நடைமுறைப்படுத்த அறிவு முயன்றான்
அலைபாயும் அன்னையின் கவலையைப்போக்க
    அப்படியே அறிவு திட்டமிட்டான்

ஓய்வுபெற்ற நண்பர்கள் சேர்ந்து அடுத்த ஊரில்
    உதவிகரமாய் நடத்திவரும் ஓய்வுஇல்லம்
தாய் சிவகாமியை சேர்க்க அன்புடன் அழைத்தான்
    தாயோ வர மறுத்து விட்டாள்! காரணம்

“பேரன்,பேத்தி மற்றும் தன்பிள்ளை அறிவு-இவர்களை
 பார்த்துக் கொண்டே இருப்பேன் பட்டினிகிடந்தாலும்”
 அறைந்து சொல்லிவிட்டாள் குழந்தைகள்மேல்
    அன்பின் வழியதுஉயிர்நிலை கொண்டு!

- கவிஞர்  ஜி.சூடாமணி

**

அன்பே இறைவனை அடையும்வழி - நம்
     அகத்தின் இருளை அகற்றும் ஒளி..
அன்புவாழும் மனிதனின் நெஞ்சம் - அதில் 
     ஆண்டவனும் வந்து அடைவான் தஞ்சம்..
அன்பில்லாத உடல் வெறுங்கூடு - அது
     அழிந்து போய்விடும் இந்த மண்ணோடு..
அனபுகொண்ட உடல் இறைவன்வீடு - அது 
     அழிந்தாலும் இங்கு வாழும் புகழோடு..
கல்நெஞ்சமும் அன்பில் கரைந்துபோகும் - அது
     கல்லுக்குள் ஈரமாய் கசிந்து போகும்..
முள்ளும்  முகையாகி மரமாகும் - அதில்
     மறைந்து வாழும் இனிய மதுரமாகும்..
உயிர்களிடம் அன்புசெய்தால் நீயும்ஓர்துறவி - அன்பே
     உயிரானால் இங்கு நீயும்ஓர் மனிதப்பிறவி..
உயிரில்கலந்த அன்புதான் பொங்கும்அருவி - அதுவே
     உலகை வெல்லும் உன்னதக் கருவி..
அன்பின் வடிவம்தான் உன்அன்னை - அவள் 
     அன்பையும் ஊட்டி வளர்த்தாள் உன்னை..
அன்பே பொன்னாக்கும் இந்தமண்ணை - உண்மை
     அன்பின் வலிமை தாண்டும் விண்ணை..

- கவிஞர் நா.நடராசு

**

மனமோ பின்னோக்கி சென்றது - தொடர் வண்டியில்,
மாதமோ மார்ச்
இங்கோ வெயில் கொளுத்த
பணி நிமித்தம் பீகார் சென்றேன்
பீர் பைந்தி - ஊர் பெயர்
காலை ஆறு மணிக்கு
காலை வைக்க முடியாத
குளிர் வெளியே

கதகதப்பு ஆடை ஏதுமின்றி
திகைத்து நின்றேன் நான்,
கல்லூரி ஆசிரியத் தம்பதி ஒருவர்
கண்டென் நிலையை
காஷ்மீர் ஷால் ஒன்றை
யோசிக்காமல் - தந்தனர் உடனே எனக்கு, 

அதைப் போர்த்திய எனக்கு
என் சொல்வது என்ற வார்த்தையற்று,
அன்பில் நனைந்து அடுத்த அடி வைத்தேன், அன்புப் போர்வை கொடுங்குளிரில் எனைக் காக்க
என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றன இரு - அன்பு இதயங்கள்

அன்பின் வழியது உயிர்நிலை
அஃதிலார் கென்பு தோல் போர்த்திய உடம்பு

என்பதன் பொருள் உணர்ந்தேன் அன்று

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**

உடலில் உயிரிருந்தாலே எழுந்து நடமாடலாம்
திட வாழ்வுக்கும் அன்பிருந்தாலே ஆதரவாகும்
இடம் பொருள் ஏவல் ஏதும் வேண்டாம் அன்புக்கு
வடம் பிடிக்கத் தேர் நகரும் அன்பில் உள்ளம் உருகும்.

கொடுத்துப் பெறுவதல்ல அன்பு யாரிடமும் என்றும்
கொடுத்துக் கொண்டே இருப்பது தான் அதன் நிலை
தடுத்தாலும் அன்பு தடையின்றி ஓடக்கூடியது
அடுத்துக் கெடுப்பதென்ற செயல் அன்பிலில்லை

அன்பின் வழியது உயிர்நிலை அது இல்லாத நிலை
என்பு போர்த்திய தோலுக்கு சமம் என்றார் வள்ளுவர்
கன்றும் பசுவும் காட்டும் அன்பு ஒன்றே போதுமே
என்றும் அன்புக்கு மட்டும் அழிவென்பதேயில்லையே

உயிர்கள் அன்பு செலுத்துவதில் மாறுபாடிருக்காது
பயிர்களையும் உயிர்களாய் நினைக்கும் பாங்கது
தயிர் வெண்ணெய் நெய்யென பயனாவது போல்
உயிர்களுக்கு அன்பு மாறுபாடு நோக்காது பயன்தருமே

ஆல்போல் அன்புலகம் விரிந்தால் சண்டைகளிருக்காது
வேல்போல் நாடுகளை சுத்தம் செய்து சீர்திருத்தும்
கோல் எடுத்தால் குரங்காடும் எனும் பயங்கள் இல்லை
பால் போல் வெண்மை அன்பிருந்தால் வாழ்வும் சிறக்குமே

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

அன்பின் வழியது மறந்தால், மறையும் நல்ல 
பண்பும் பாசமும் ... தடம் மாறும்  வழி ,
மறைக்கும் கண்ணை... தொடரும் பிழைகளும் !
அம்மா என்றால் அன்பு ..அன்பு என்றால் 
அம்மா ... அன்பின் வழியது அம்மாவின் 
அரவணைப்பும் பாசப்பிணைப்பும் !
வலிக்குது மனசு இன்று தடம் புரண்ட 
ஒரு பேதையின்  செயல் கண்டு !
துடிக்குது நெஞ்சம் பிஞ்சு இரண்டின் 
உயிர் பறித்த ஒரு  வஞ்சகப் பெண்ணின் 
நஞ்சு மனதை நினைத்து !
வள்ளுவன் காட்டிய அற வழியில் நடக்க 
முடியவில்லை அந்த பெண்ணுக்கு ...அந்த 
பெண்ணின் தலை எழுத்து அது !
பிழை ஏதும் செய்யாத அந்த பிஞ்சு 
இரண்டும் செய்த பாவம் என்ன ?
அற வழி மறந்த அந்த பெண்ணுக்கு 
அன்பின் வழியும் அறவே மறந்து போனதே !
அதை நினைத்தால்  வலிக்குது மனசு !

- கே.நடராஜன்

**

கனாக்கண்டேன்.
பெரும் வனம்.
நெடும் பயணம்.
வனமெங்கும் பெருமரங்கள். 
எங்கு பயணம்..
ஒரு பெருமரம் கேட்டது. 
அன்பின் வழியது
தேடி வந்தேன்.
இவ்வளவு தூரம்..இன்னும் கிட்டவில்லை..
பெருவெளிச்சமும் இல்லை. பேரமைதியே  பெருவனத்தில்.
அதனால்..
அன்பின் வழியது
காண்பது கடினம்
என்று சொன்னேன்.
சிரித்துக் கொண்ட
பெருமரம்
என்னைத் திருப்பிக்கேட்டது.
அடையாளங்கள்.. ?
எனக்கு அன்பு செய்யும் 
உயிர்கள் நிறைந்திருக்கும்
அன்பின் வழியது...
என்று சொன்னேன்..
பெருமரம் கேட்டது..
அந்த அன்பு உயிர்களும்
அன்பின் வழியதை 
எங்கோ தேடி  
வழி தொலைந்திருந்தால்.. ?
எனக்கு வலித்தது.
பெருமரம் சொன்னது..
வந்த வழியதுவும்
அன்பின் வழியது
இன்னும் தேடுக தவறில்லை..
ஆனால்..
தேடும் தேடும் வழியெங்கும்
உயிர்கள் நிறைந்திருக்கும்..
அன்பின் வழியதை
உயிர்கள் அதுவும் தேடிக்கொண்டிருக்கும்
சிறகுகள் முதிர்ந்தால்
தேடியபொழுது
உயிர்களைத் தழுவ
மறந்ததும் வலிக்கும்.

** 

பெருமரத்தின் பெயர் கேட்டேன்
பெருவாழ்வு
என்று சொன்னது...
விழித்துக்கொண்டேன் ..விடியலுக்குமுன்..
சிந்தூரங்கள் தீட்டிய தேவதைகள்
வானில் சிதற்றிய துளிகள்
அதிகாலை வெளிச்சங்கள்..
பெரும் அழகு..

- ரமேஷ் கோபாலகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com