கடந்த வாரத் தலைப்பு ‘சொற்கள்’வாசகர்களின் கவிதைகள் பகுதி 1

கடந்த வாரத் தலைப்பு ‘சொற்கள்’வாசகர்களின் கவிதைகள் பகுதி 1

அன்று பெருமழை.நான்... நீ... நமது தேநீர்..

பற்களே இல்லாதார் உண்ணும் உணவில் கற்களோ நெற்களோ 
தடையின்றி உள்ளே சென்றுவிடும்

சொற்கள் மட்டும் மாட்டிக்கொள்ளும் 
பட்சத்தில் அவர் உச்சரிக்கும் போது சொற்கள் சொற்சுவையின்மையே

சொற்கள் தனியாக அல்லது சேர்ந்து 
பொருள் விளக்குவதே சொல்லாகிறது
பெயர் வினை இடை உரியென நாலை

நா சொல்லும் போது நயம் தரும்
சொல்லின் இனமறியும் குணமறியும் மணமறியும் மனமறியும் சொற்கள் அப்

பற்கள் அற்றது சொற்கள் அற்றது
முற்கள் தாங்க விதி மீறல்களாம்
சொற்களை சொல்லாதிரு நன்று 

- ஆபிரகாம் வேளாங்கண்ணி, மும்பை, மகாராஷ்டிரா. 

**

சொந்தவீடு   போலமைந்து   சொல்லு   கின்ற
    சொற்கள்தாம்   முகவரியை   நமக்க   ளிக்கும்
எந்தவொரு    நிலையினிலும்   சொல்லும்   முன்பே
    எச்சரிக்கை    கைகொண்டால்    நம்மைக்   காக்கும்
சிந்துகின்ற   சொற்கள்தாம்   நம்வாழ்   விற்குச்
    சிறப்பினையும்    இழிவினையும்   அளிப்ப   தாலே
சிந்தித்துச்   சொற்கனினை   உதிர்க்கும்   போது
    சிதறாமல்   நமைஉயர்த்தத்   துணையாய்  நிற்கும் !

அன்பாகப்   பேசுகின்ற   சொற்கள்   நம்மை
    அழிக்கஎண்ணும்   பகைவனையும்   நட்பாய்   மாற்றும்
வன்மையாகப்  பேசுவோணும்   மென்மை   யான
    வார்த்தைகளில்   நாம்மொழிந்தால்   அடங்கிப்   போவான்
நன்மைதராச்   சொற்களினைத்   தேடித்   தேடி
    நாம்பேச    முயலாமல்   காதி   னிக்கப்
புன்மையிலா   சொற்களினை    இனிமை   யாகப்
    புகன்றிட்டால்   எதிர்த்தவனும்    இணங்கிப்   போவான் !

காலத்தை   சூழ்நிலையை    அறிந்து   சொற்கள்
    கழறுகின்ற    போதனைவர்   ஏற்றுக்   கொள்வர்
ஏலம்போல்    பொய்தன்னை   மீண்டும்   மீண்டும்
    ஏற்றமுடன்    பேசினாலும்   வெளுத்துப்   போகும்
ஞாலத்தில்   என்றென்றும்   உண்மை   பேச்சே
    ஞாயிற்றின்   ஒளியைப்போல்   ஒளிர்ந்து   நிற்கும்
கோலத்தை    மாற்றுகின்ற   சொல்லை   வீணாய்க்
    கொட்டாமல்    இருந்தாலோ    கிடைக்கும்   எல்லாம் !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

உள்ளத்தின்
உணர்வலைகள்
உதட்டிலே தவழ்ந்து
உருவாகும் அற்புதமே!

கனிவான
இருதயத்தில்
கருவாகி உருவாகி
கண்களுக்குள்
பரிமாறும் காவியமே!

எழுத்துலகில்
எங்களுக்கு
ஏற்றங்கள் தருவதெல்லாம்
எழுதுகோல் பிரசவிக்கும்
சொற்குழவிகள்தாமே!

வகைவகையாய்
வாழ்த்துச்சொற்கள்
வசந்த மழை பொழிந்தனவே!
இனிதினிதாய் நம்பிக்கைகள்
இதயங்களை நிறைத்தனவே!

புதுவகையாய்
தினம் ஒலிக்கும்
தினமணியில் நடைபயிலும்
தாய்த்தமிழின் சொற்களை நாம்
தலைதாழ்த்தி வணங்கிடுவோம்.

புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்... சிறுமுகை

**
சொற்கள்!

சொற்கள் குழைவாய் இருப்பின் அன்பை கூட்டும்!
சொற்கள் நெகிழ்வாய் இருப்பின் மதிப்பை பெருக்கும்!
சொற்கள் கனிவாய் இருப்பின் உள்ளத்தினை சேரும்!
சொற்கள் கடினமாக இருப்பின் உறவை உடைக்கும்!
சொற்கள் கோபமாக இருப்பின் நட்பை சிதைக்கும்!
சொற்கள் சாந்தமாக இருப்பின் அமைதியை தரும்!
சொற்கள் இதமாக இருப்பின் ஆறுதல் தரும்!
சொற்கள் இனிமையாய் இருப்பின் வெற்றி வரும்! 
சொற்கள் தமிழாக இருப்பின் தமிழுக்கு அணிசேரும்!

நாளும் உதடு உதிர்க்கும் சொல்லே, 
நமது எதிரியையும், நண்பரையும் தேடித்தரும்! 
எதற்கும் சல்லடை இல்லை எனில் தொல்லையில்லை! 
சொற்களை சல்லடையில் சலித்து பேசுக!
வாய்மொழி சிறப்பின் வையகம் நமதே! 

-இனிய தமிழ் செல்வா, ஓமன்

**

சைகையில் ஓசையிட்டு பரிமாறிய எண்ணங்கள்
கையசைவில் கதைகள் படித்த காலங்களென
நைந்து போன புரியாத பரிமாற்றங்கள் நீங்கிட
தை தையெனக் குதித்து வந்தன அழகுச் சொற்கள்

எழுத்துகள் உருவாகி எழுத்துகளின் கட்டமைப்பில்
பழுதில்லாத் தமிழ்ச் சொற்கள் பாங்காய் அமைந்தன
அழுகை உணர்வுகளையும் அழகாய் வடித்தன அவை
உழுது விதைத்தன எண்ணங்களின் கருத்துக்களை 

வன்முறை வீச்சில் வளர்ந்திருந்த வன் சொற்கள்
நன்முறை அன்பின் வளர்ப்பில் இன்சொற்களாயின
பன்முறை இலக்கணக் காப்பில் வளர்ந்தன அவை
புன்முறுவல் பூக்கப் புதுப்புது சொற்கள் முளைத்தன

யாப்பில் மரபில் குளித்தெழுந்தன அழகு தமிழாகவே
தோப்பாக வளர்ந்து செழித்தன செம்மொழியாகவே
பூப்படைந்த சொற்கள் காப்பியங்களில் களித்தன
மூப்படையாத தமிழுக்கு என்றும் துணை நின்றனவே

அலங்காரமாகி அடுக்குச் சொற்கள் நடைபோட்டன
உலக அரங்கில் சந்தத்தில் சதிராடித் தீர்த்தன அவை
உலவும் தென்றலாய் கவிதையில் நடை பயின்றன
பலப்பல பொருள்தரும் சொற்கள் வியப்பல்லவோ

கவிஞர்  ராம்க்ருஷ்

**

என்னைப்போல்
ஆயிரம் பேரை வெட்டியா
ஆறு வழிச்சாலை!
மரத்திற்குள் ஒரு புயல்  
இன்னும் எவ்வளவு தான்
அள்ளுவீர்கள்
கண்ணீர் சொட்டிய மணலுடன் லாரிகள் 
என் உடலில் செங்கற்களை
அடுக்கிக் கல்லூரிகளா
ஏக்கத்துடன் ஏரிகள் 
சுத்தமாய் சுகம் தந்தேனே,
ஒரு மாசுப்போர்வையிட்டு
காலனுடன் கூட்டணியா 
காற்றின் வேதனை  
இவையெல்லாம் என்ன  
இயற்கை மனிதனிடம்
சொல்லாத சொற்கள்

- கவிஞர் டாக்டர்.  எஸ். . பார்த்தசாரதி

**

கவிதையின் மூலப்பொருள் சொற்கள்-அது
     கவிஞனைத் தீட்டும் வைரக்கற்கள்...
கவிதையில் நாட்டியமாடும் நங்கைகள்-அது
     கவின்மிகு கற்பனையின் நவரத்தினங்கள்...
புத்தகத்தில் இருக்கும் புதையல்கள்-நம்
     புத்தியைத் தீட்டும் நற்சிந்தனைகள்...
எழுத்தாளன் தீட்டும் ஓவியங்கள்-நம் 
     எழுச்சிமிகு எண்ணத்தின் ஆணிவேர்கள்..
இனியசொற்களே பேச்சுக்கு அழகு-அதை
     இனிமையாய் நீபேசிப் பழகு...
வன்சொற்களை விட்டு விலகு-அப்போது
     வாழ்த்தும் உன்னைஇந்த உலகு...
வள்ளுவனின் வாய்ச்சொல் இனிது-அதுபோல் 
     வள்ளலார் வாய்ச்சொல் அமிழ்து...
கம்பனின் ஒருசொல் வலியது-அதுபோல் 
     கண்ணதாசனின் ஒருசொல் புதியது...
மலர்களைச் சேர்த்து மாலையாக்கு-நற்சொல்லை
     மனதில் விதைத்து வாழ்வாக்கு...
மூத்தோர்சொல் கேட்டுஅறிவை தெளிவாக்கு-உன்
     முன்னேற்றப் பாதையைநீ உருவாக்கு....

- கவிஞர் நா. நடராசு

**

சொற்களின் வகைகளை
நினைவில் கொள்ள சுருக்கமாய் உரைக்க - வினவினேன் ஆசானை, அவர் தந்தது ,

மருவிய சொல்லோடு மருவாச் சொற்கொணர்ந்து
உரிமையோடு இயைத்தல் உரிச்சொல் ஆகும்.
சாலப் பெரிது – உரிச்சொல் 

சுடுபொன் மருங்கில் பற்றாசு ஏய்ப்ப
இடைநின்று இசைப்பது இடைச்சொல் ஆகும்
மரத்தை = மரம் அத்து ஐ, படித்தனள் = படி த் அன் அள் இடைச்சொல் - அத்து, அன்

எப்பொரு ளேனும் ஒருபொருள் விளங்கச்
செப்பி நிற்பது பெயர்ச்சொல் ஆகும்.
மரம், கண், பெண் – பெயர்ச்சொல்

வழுவில் மூவகைக் காலமொடு சேர்த்து
தொழிற்பட வருவது தொழிற்சொல் ஆகும்
படித்தான், படிக்கிறான், படிப்பான் – வினைச்சொல்
என்றார்,
முடிந்ததா என்றேன்,
இல்லையப்பா - நன்னூல் நவில் வதை நான் தருகிறேன் கேள் என்றார்.

ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா
இருதிணை ஐம்பால் பொருளையும் தன்னையும்
மூவகை இடத்தும் வழக்கொடு செய்யுளின்
வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே    (நன்னூல் 259)

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**

முகத்திற்கு அழகு பல்!
கவிதைக்கு அழகு சொல்!
பல் போனால் முகஅழகு  மாறும்!
சொல் தவறினால் கவிதையின்
பொருளே  மாறும்!
மருவில்லா சொற்களை  பேசினால் 
கருவில் இருக்கும்  மழலைக்கூட
சுறுசுறுப்பாக  கை கால்  உதைக்கும்
பேசாத  சொற்களுக்கு  நீ எஜமான்!
பேசிய  சொற்கள்  உனக்கு  எஜமான்!
எஜமானனாக  இருக்க  விரும்பும்  
நிஜமான  மனிதனே!
யோசித்து பேசி  யாரிடமும் 
யாசிக்காமல்  வாழ்ந்தால் 
மகிழ்ச்சி நிச்சயம்!

 - உஷாமுத்துராமன், மதுரை  

**

உதிர்க்கும் போது தெரியலடி 
சொற்களின் கடுமை -நீ 
உதிர்க்கும் போது தெரியுதடி 
உன் கண்ணீரின் வழியே 

சொன்னது சிறு வார்த்தை 
உளி போல் கிழித்ததென்ன உளத்தை 
அன்பே ஆத்திரத்தில் கொட்டிய சொல் 
உனை அடியோடு அழித்ததென்ன

ஆயிரம் முறை அழுதேன் 
ஆனாலும் என்ன பயன் 
அழகான தேவதையை 
அழித்த பாவியும் நான் 

நாவை அடைக்காத நானெல்லாம் 
இருந்தென்ன மடிந்தென்ன 
நானும் உனை அடைய
இப்போதே புறப்பட்டேன் 

உயிரான தோழர்களே !!!
உதிர்க்கும் முன் யோசிப்பீர் 
உதிர்க்கும் சொல் ஏதும் 
உயிரை குடித்திடுமா? உளத்தை கடித்திடுமா?

- பார்.விஜயேந்திரன், கருங்குழி 

**

பெண்ணே!
சொற்கள் பதமாகின்
நன் நூலாகும்!
சொற்கள் விடமாயின்
நல் உறவுகள் கெடும்!
சொற்கள் எல்லை மீறி
நா தீண்டியதால்
விளைந்த விபரீதங்கள்
இராவணன் அழிவு!
இராமாயண பரமபத 
ஆடுகளத்தில் மந்தரையின் 
வார்ப்பு நிழலாக 
வாழாமல் சொல்லோவிய சபரி
வழி நடந்திடு!
இனிய சொற்கள் உன்னை
உயர்த்திடும் என்றே
இன்னா சொற்கள்  உன் 
நாவில் உதிக்காதிருக்க
இறைவனை தொழுதிடு! 

- பொன்.இராம்

**

தாயின் சொற்கள் அன்பு
தந்தையின் சொற்கள் அறிவு

ஆசிரியரின் சொற்கள் ஞானம்
மனைவியின் சொற்கள் பரிவு

குழந்தையின் சொற்கள் சிரிப்பு
நண்பனின் சொற்கள் நட்பு

மாணவனின் சொற்கள் கல்வி
இளைஞனின் சொற்கள் வேலை
தொழிலாளியின் சொற்கள் சம்பளம்

தேர்தலின் சொற்கள் ஜனநாயகம்
ஜனநாயகத்தின் சொற்கள் மக்கள்

மக்களின் (வாக்காளனின்) சொற்கள் ஏமாற்றம்
அரசியல்வாதியின் சொற்கள் பணம்
தொண்டனின் சொற்கள் அப்பாவி

அரசாங்கத்தின் சொற்கள் திட்டங்கள்
அதிகாரியின் சொற்கள் அலைகழிப்பு

எத்தனை விதமான சொற்கள்
ஒவ்வொன்றிலும் பல விதமான பொருள்
ஆனால் அனைத்தும் ஒற்றை வார்த்தைக்குள் - சொற்கள்

நல்ல சொற்கள் தருபவை நன்மை
தீய சொற்கள் தருபவை தீமை

அன்பு சொற்கள் தருபவை அமைதி
ஆக்ரோஷ சொற்கள் தருபவை பிரச்சனை 

ஒரே நாக்கிலிருந்து வந்தவை தான் சொற்கள்

நன்றும், தீதும் பிறர் தர வாரா - சொற்கள்
 
- ஆம்பூர் எம். அருண்குமார்.

**

எண்ணங்கள் உருமாறும் எழுத்தாக! 
எழுத்து வடிவெடுக்கும் ஒரு கதையாக ,
ஒரு கவிதையாக ,ஒரு புத்தகமாக ,
கற்பனை கல்லில்  செதுக்கிய 
ஒரு நல்ல சிற்பமாக !
சிற்பமே  சொல்லும், அதை வடித்த சிற்பி யார் 
என்று !
சொற்களும் எண்ணத்தின் சிதறல்தான் 
ஆனால் நம்மில் பலர்  சிதறும் சொற்கள் 
கற்களாக மாறி காயப்படுத்துதே அடுத்தவர் 
உள்ளத்தை !
கற்றுக் கொள்வோம் நாம் ஒரு நல்ல  பாடம்.. நம் 
சொற்கள் வடிக்கத் தேவையில்லை ஒரு சிற்பம் !
கற்கள் ஆக மட்டும் உருமாற வேண்டாம் 
என்றும் எப்போதும் நாம் சொல்லும் சொற்கள் !

- கே.நட்ராஜ்

**

பேசுவதெல்லாம் பேச்சென்றால்,
அதற்கு உயிர்மூச்சு தருவது யார்?

சொல்வதெல்லாம் சொல்லென்றால்,
அதில் நிலையாக நிற்பது 
யார்?

இன்று ஒரு பேச்சு,
நாளை ஒரு பேச்சு;
உன்னை குப்பைத்தொட்டியில், தூக்கிப்போட்டாச்சு

நேற்று சொன்ன சொல்லை,
இன்று செயல்படுத்தினால்;
உன் வாழ்க்கை,
உயர்வானதாய் மாறியாச்சு.

- ம.சபரிநாத்,சேலம்

**

சொற்களிலா வார்த்தைகளும் சுவைதராது போகும்
.............சொல்லின்றிப் பொருளின்றிச் சொற்றொடரும் வாரா.!
சொற்களாலே அமைவதுதான் சிறப்பான வார்த்தை
சொற்சுவையும் பொருட்சுவையும் செந்தமிழின் சாரம்.!
கற்களாலே தாங்கிநிற்கும் கட்டடம்போல் ஆகும்
கவிதைகளும் அமைதற்குக் கனியும்நற் சொற்கள்.!
பற்களாலே அழகுபெறும் பார்ப்பதற்கு வாயும் 
பாவிற்கும் அழகூட்டும் பசுந்தமிழின் சொற்கள்.!
 
வள்ளுவனும் கம்பனுமே வரைந்தார்கள் ஓவியம்போல்
விரிவான சொற்களாலே வகுத்தார்கள் இலக்கணத்தை.!
உள்ளுணர்ச்சி பொங்குமதை உருக்கமாகப் படித்தாலே
உலகத்தில் தனித்துநிற்கும் ஒப்பிலாத காவியமாம்.!
அள்ளவள்ளக் குறையாத அமுதம்போல் தித்திக்கும்
அனைவருடை உள்ளத்தை ஈர்க்குமவர் கவிச்சொற்கள்.!
வெள்ளோட்டம் போலத்தான் விரைந்தோடும் நம்மனதில்
வள்ளுவனும் கம்பனுமே வழங்கியதைப் படித்தாலே.!
 
பட்டினத்தார் வள்ளலாரும் பாருலகு பயனுறவே
பகட்டான சொற்களாலே பலவற்றை எடுத்துரைத்தார்.!
பெட்டிக்குள் இருக்கின்றப் பொக்கிஷங்கள் போலத்தான்
பாட்டுக்குள் ஒளிந்திருக்கும் போதிக்கும் தத்துவங்கள்.!
இட்டிமையே இல்லாத இலக்கியமும் படைத்தார்கள்
இல்லறமும் துறவறமும் இரண்டையுமே தெளிவாக.!
எட்டியதூ ரமொலிக்கும் எப்போதும் அவர்பாடல்கள்
என்றுமென்றும் நிலையாக ஏட்டிலெழு தியசொற்கள்.!

- பெருவை பார்த்தசாரதி

**

"சொற்கள் "

சொற்கள் இல்லாத 
கவிதை ஒன்றை 
எழுத நினைத்தான் 
நொண்டிக் கை ஊமையன்

கேளா ஒலியும் 
காணா ஒளியும்
இருப்பதைப் போல
சொற்கள் இல்லா
கவிதை ஒன்று 
இருக்கத்தானே செய்யும் ?

மழைத் துளியை
தொட்டுத் தொட்டு 
வானவில்லின் 
அம்பைக் கொண்டு 
இரு பக்கம் இல்லாத 
காகிதத்தில் 
கவிதை ஒன்றை 
வடித்தான் ஊமையன் 

- ரீகன், தஞ்சை

**

அன்று பெருமழை.
நான்... நீ... நமது தேநீர்..
பெரும் மௌனம்.
நீ.. நான்..எனும் மதகுகளில்
முட்டித் தவித்தன சொற்கள்.
உள்ளங்கள் திறக்கச் சொல்லி
குத்திக் கிழித்தன சொற்கள்.
கைப்பிடித்து வந்த சொற்கள்
உள்ளத்தில் புதைந்திருந்தும்
உன்னைக் கண்டவுடன்
உதடுகளுக்கு எட்டவில்லை.
சொற்கள் எனும் பெருங்காட்டில்
எண்ணங்கள் வழி திரிந்து
தேடிப் பொறுக்கிவந்த சொற்கள்
உன் மௌனத்தால் அர்த்தமற்று
இதயத்தில் கனமாகிப்போன கற்கள்.
சொல்ல நினைக்கும் சொற்கள்..
சொல்லி முடிக்கும் சொற்கள்..
சொல்ல மறுக்கும் சொற்களின்.. 
இடைவெளியே
மூடிக்கிடக்கும் இதயங்களின்
இடைவெளியும்.
இன்றும் பெரும் மழை.
என்றாவது
உன்னில் விழும் மழைத்துளியும்
உன் மௌனம் கலைத்துக் கேட்கலாம்.
சொல்லமறுத்த சொற்களைச் சொல்லென..
உன்னுள்ளம் தளும்பியிருந்த சொற்கள் எதுவானாலும்..
என்றும்
உன்னில் அன்பு செய்திருப்பேன்.
இதுவே இன்றும்
உன்னிடம் 
நான் சொல்ல நினைக்கும் சொற்கள்.
நீயும் மழையிடமாவது சொல்லிவிடு...

- ரமேஷ் கோபாலகிருஷ்ணன், பீனிக்ஸ், அமெரிக்கா.

**


சிந்தை சிறப்புடன் செயலாற்ற கண்ணபிரான் 
சிந்திய  வெல்லும் சொற்கள் கீதையானது.!
சிந்தை சினமுற  சிலம்பேந்திய கண்ணகி 
சீற்றமுறக்கூறிய சொற்களால்  எரிந்தது மதுரை !

எழுத்தும் எழுதுகோலும் தெய்வம் என
எழுதி வைத்த மகாகவியின் சொற்களை
எடுத்து இன்று ஆளாத கவிஞரும் 
எழுத்தாளரும் உண்டோ  எம் மண்ணில் .?

கல்லால் அடித்தால் காயமது ஆறுமே ! 
சொல்லால் அடித்தாலது ஆறாத ரணமே !
வில்லின் அம்பு தைக்கும் உடலை.
சொல்லின் வேகமோ தாக்கும் மனதை .

கற்பனையைத் தட்டி விட்ட சொற்கள்
கவிதை எழுதத் தூண்டும் எம்மை ,!
கண்ணீர் சிந்த வைக்கும் சொற்கள்
கல் நெஞ்சையும் கரைக்குமன்றோ ?

மாசற்ற அன்புடன் கூறும் சொற்கள்
மலையையும் பெயர்த்து மாயம் உண்டு
நேசமுடன் உரைக்கும் பல சொற்கள் 
தேசம் வாழ நல்வினை நல்கிடுமே !.  

- ஜெயா வெங்கட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com