இரண்டாம் பத்து பத்தாம் திருமொழி - பாடல் 5, 6

வளம் நிறைந்த சுனைகளால்

திறம்உடை வலத்தால் தீவினை பெருக்காது
அறம் முயல் ஆழிப் படையவன் கோயில்
மறுஇல் வண்சுனைசூழ் மாலிருஞ்சோலைப்
புறமலை சாரப்போவது கிறியே.

பலவகை வலிமைகளைக்கொண்டு தீவினைகளைப் பெருக்காதீர்கள், குற்றமில்லாத, வளம் நிறைந்த சுனைகளால் சூழப்பட்ட திருமாலிருஞ்சோலைக்குப் பக்கத்திலுள்ள மலையை நெருங்கிச் செல்லுங்கள், அறத்தை நிலைநாட்டுகிறவன், சக்ராயுதத்தைக் கையில் ஏந்தியவன், எம்பெருமான் அங்கே கோயில்கொண்டுள்ளான், (அவனை வணங்குங்கள்,) அதுவே உங்களுக்குச் சிறந்த வழி.

***

பாடல் - 6

கிறிஎன நினைமின் கீழ்மை செய்யாதே
உறிஅமர் வெண்ணெய் உண்டவன் கோயில்
மறியொடு பிணைசேர் மாலிருஞ்சோலை
நெறிபட அதுவே நினைவது நலமே.

கீழ்த்தரமான விஷயங்களில் ஈடுபடாதீர்கள், நான் இப்போது சொல்லப்போகும் வழியை எண்ணிப்பாருங்கள், குட்டியோடு பெண்மான் வாழ்கிற திருமாலிருஞ்சோலையிலே, உறியிலே உள்ள வெண்ணெய்யை உண்ட எம்பெருமான் கோயில்கொண்டிருக்கிறான், அங்கே செல்லும் வழியை நினையுங்கள், அதுவே உங்களுக்கு நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com