மூன்றாம் பத்து முதல் திருமொழி - பாடல் 5, 6

துளசிமாலையை அணிந்தவனே

வருந்தாத அரும்தவத்த மலர்கதிரின் சுடர் உடம்பாய்,
வருந்தாத ஞானமாய் வரம்புஇன்றி முழுது இயன்றாய்,
வரும்காலம், நிகழ்காலம், கழிகாலமாய் உலகை
ஒழுங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவனே?

மலர்கின்ற பேரொளியைப் போன்ற திருமேனி கொண்டவனே, இந்தத் திருமேனி நீ அரிய தவம் செய்து பெற்றதா? அல்லது, இயற்கையாக அமைந்ததா? (இயற்கையாக அமைந்ததுதான்.)

அதேபோல், உன்னுடைய ஞானமும் வருந்தித் தவம்செய்து பெற்றதல்ல, இயற்கையாக அமைந்ததுதான்.

எல்லையின்றி அனைத்திலும் நிறைந்திருப்பவனே, எம்பெருமானே, எதிர்காலம், நிகழ்காலம், கடந்தகாலம் என முக்காலங்களிலும் உலகங்கள் அனைத்தையும் ஒன்றாகக் காப்பவனே, உன்னுடைய சிறப்புகள் இவ்வளவுதான் என்று நான் எப்படித் தீர்மானமாகச் சொல்ல இயலும்? (உன் சிறப்புகள் சொல்லத்தீராது, வளர்ந்துகொண்டே இருக்கும்.)

•••

பாடல் - 6

ஓதுவார் ஒத்து எல்லாம், எவ்உலகத்து எவ்எவையும்
சாதுவாய் நின்புகழின் தகைஅல்லால் பிறிதுஇல்லை,
போதுவாழ்புனம் துழாய்முடியினாய், பூவின்மேல்
மாதுவாழ் மார்பினாய், என் சொலி யான் வாழ்த்துவனே!

ஓதப்படுகின்ற வேதங்கள் அனைத்தும், எல்லா உலகங்களிலும் உள்ள அனைத்துச் சாத்திரங்களும் சொல்லும் உண்மை, உன்னுடைய புகழும் சிறப்பும்தான், வேறு எதுவும் இல்லை.

பூக்கள் நிறைந்த நிலத்திலிருந்து தொடுக்கப்பட்ட துளசிமாலையை அணிந்தவனே, பூவின்மேல் அமர்ந்திருக்கும் திருமகள் வாழும் மார்பைக் கொண்டவனே, எம்பெருமானே, உன்னை நான் என்னசொல்லி வாழ்த்துவேன்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com