மூன்றாம் பத்து முதல் திருமொழி - பாடல் 7, 8

சுடர்மேனி வடிவம் கொண்டவனே

வாழ்த்துவார் பலர்ஆக, நின் உள்ளே நான்முகனை
'மூழ்த்தநீர் உலகுஎல்லாம் படை' என்று முதல் படைத்தாய்,
கேழ்த்தசீர் அரன்முதலாக் கிளர்தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்து அமரர் துதித்தான் உன் தொல்புகழ் மாசு ஊணாதே?

உனக்குள்ளே பிரம்மனை முதலில் படைத்தாய், பிறகு, 'நீரால் சூழப்பட்ட உலகங்களையெல்லாம் படை' என்று பிரம்மனுக்குச் சொன்னாய், (அதனால், உலகங்கள் அனைத்தையும் நீயே படைத்தாய்.)

ஒளிநிறைந்த, சிறப்புகளையுடைய சிவபெருமான் முதலான தேவர்கள் எல்லாரும் சேர்ந்து வந்து, உன்னைச் சூழ்ந்து நின்று, மனம் கிளர்ந்து உன்னைத் துதித்தாலும் சரி, பலர் வந்து வாழ்த்தினாலும் சரி, அதனால் உன்னுடைய பழைமையான குணங்கள் மாசு அடையுமா? (அடையாது.)

•••

பாடல் - 8

மாசுஊணாச் சுடர்உடம்பாய், மலராது, குவியாது,
மாசுஊணா ஞானமாய் முழுதுமாய் முழுது இயன்றாய்,
மாசுஊணா வான்கோலத்து அமரர்கோன் வழிபட்டால்
மாசுஊணா உன் பாதமலர்ச்சோதி மழுங்காதே?

குற்றமில்லாத சுடர்மேனி வடிவம் கொண்டவனே, பெருகாத, குறையாத, குற்றமற்ற ஞானத்தை எப்போதும் ஒரேமாதிரியாகக் கொண்டவனே, முழு உலகாகவும் திகழ்கிறவனே, அவற்றைப் படைத்துக் காப்பவனே, உன்னைக் குற்றமில்லாத, சிறந்த ஞானத்தைக்கொண்ட, அமரர்களின் தலைவனான பிரம்மன் வழிபட்டால், குற்றமில்லாத உன்னுடைய மலர்த் திருவடிகளின் ஒளி மழுங்கிவிடாதோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com