நான்காம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

உலகத்தோரால் போற்றப்பட்டவள்
நான்காம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

பாடல் - 5

தளிர்நிறத்தால் குறைஇல்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களிமலர்த் துழாய் அலங்கல் கமழ்முடியன் கடல் ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறைஇலமே.

தளிர்போன்ற நிறத்தை நிறைவாகப் பெற்றவள், அரக்கனின் தனிச்சிறையில் மன உறுதியோடு இருந்து, அதனால் உலகத்தோரால் போற்றப்பட்டவள், கிளிபோல் பேசுகிறவள், சீதைப்பிராட்டி, அவளுக்காக, செருக்குப் பிடித்த ராவணனின் இலங்கை நகரை எரித்தவர், தேன் நிறைந்த மலர்களைக்கொண்ட துழாய் மாலை மணம் கமழும் திருமுடியைக் கொண்டவர், கடலால் சூழப்பட்ட இந்த உலகத்திலே அனைவர்மீதும் அன்பைப் பொழிபவர், அத்தகைய பெருமான், என்னுடைய அறிவைக் கவர்ந்துகொள்ளவில்லை. ஆகவே, இந்த அறிவால் எனக்கு எந்தப் பயனும் இல்லை.

******

பாடல் - 6

அறிவினால் குறைஇல்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறிஎல்லாம் எடுத்து உரைத்த நிறைஞானத்து ஒருமூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடும்கோளால் நிலம் கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறைஇலமே.

அகன்ற இந்த உலகிலே வாழ்கிறவர்கள், தங்களுடைய அறிவில் ஒரு குறை இருந்தாலும் அதை அறிவதில்லை, அத்தகைய உலகத்தவர்கள் அறியும்படி நெறிகளையெல்லாம் எடுத்துரைத்தவர், ஞானம் நிறைந்த, தனித்துவமான மூர்த்தி, சிறிய பிரம்மச்சாரியின் வடிவத்தில் வந்து கொடிய வழியிலே மகாபலியிடமிருந்து நிலத்தைப் பெற்றவர், தந்திரம் கொண்ட தலைவர், அத்தகைய பெருமான், என்னுடைய மிகுந்த ஒளியைக் கவர்ந்துகொள்ளவில்லை. ஆகவே, இந்த ஒளியால் எனக்கு எந்தப் பயனும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com