நான்காம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

நான்காம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

கரைந்து ஏங்குகிறார்கள்

பாடல் - 1

நண்ணாதார் முறுவலிப்ப, நல் உற்றார் கரைந்து ஏங்க,
எண் ஆராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை,
கண்ணாளா, கடல்கடைந்தாய், உன கழற்கே வரும் பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய், சாமாறே.

இந்த உலகத்தின் இயல்பு, எண்ணமுடியாத துன்பங்களைக் கொண்டது, இதனால் இங்குள்ள ஒவ்வொருவரும் துயரப்படுகிறார்கள், இவர்களுடைய பகைவர்கள் இவர்களைப் பார்த்துச் சிரிக்கிறார்கள், இவர்களுடைய உறவினர்கள் இவர்களை எண்ணிக் கரைந்து ஏங்குகிறார்கள், ண்ணாளனே, கடலைக் கடைந்தவனே, இத்தகைய உலக வாழ்க்கை எனக்கு வேண்டாம், இனியும் தாமதிக்காமல் என்னை உன் அடிமையாக்கிக்கொள், உன் திருவடிகளை வந்து சேரும் வரத்தை எனக்குக் கொடு.

******

பாடல் - 2

சாமாறும் கெடுமாறும் தமர் உற்றார் தலைத்தலைப் பெய்து
ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகு இயற்கை!
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான், அரவு அணையாய், அம்மானே,
கூமாறே விரை கண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.

இந்த உலகத்தின் இயல்பு, மக்கள் பிறப்பதும், இறப்பதும், அவர்களுடைய செல்வம் வருவதும், கெடுவதுமாக இருக்கிறது, இதனால், இவர்களுடைய உறவினர்கள் ஒருவர்மேல் ஒருவர் விழுந்து ஏங்கி அலறுகிறார்கள், இவர்கள் பிழைக்கின்ற வழி என்ன? எனக்குத் தெரியவில்லை. பாம்புப் படுக்கையிலே பள்ளிகொண்டவனே, அம்மானே, என்னை உன் அடிமையாக்கிக்கொண்டு அருள்செய், விரைவில் என்னைக் கூவி உன்னுடைய திருவடிகளில் ஏற்றுக்கொள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com