நான்காம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

குலப்பெருமைகள்
நான்காம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

பாடல் - 3

கொண்டாட்டும் குலம் புனைவும் தமர், உற்றார் விழுநிதியும்
வண்டுஆர் பூங்குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை, கடல்வண்ணா, அடியேனைப்
பண்டேபோல் கருதாது, உன் அடிக்கே கூய்ப் பணிகொள்ளே.

இந்த உலகத்தின் இயல்பு, மனிதர்கள் பிறப்பதும் இறப்பதும்தான், ஒருபக்கம் கொண்டாட்டம், இன்னொருபக்கம் குலப்பெருமைகள், பங்காளிகள், உறவினர்களின் சிறந்த செல்வம்… இவை எல்லாம் இங்கேயே இருக்க, ஒருவன் தனியே உயிரிழக்கிறான், அப்போது, வண்டுகள் மொய்க்கிற பூக்களைச் சூடிய கூந்தலைக்கொண்ட அவனுடைய மனைவிகூட அவனுடன் வருவதில்லை, வீட்டில் தங்கிவிடுகிறாள், இதைக் கண்டு என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கடல்வண்ணனே, என்னை முன்புபோல் கருதாதே, உன்னுடைய திருவடிகளுக்கு அழைத்து அடிமையாக்கிக்கொள்.

******

பாடல் - 4

கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும்செல்வம் நெருப்புஆகக்
கொள் என்று தமம் மூடும், இவை என்ன உலகு இயற்கை,
வள்ளலே, மணிவண்ணா, உன கழற்கே வரும் பரிசு
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.

இந்த உலகத்தின் இயல்பு, ஒருவன் பெரும் செல்வத்தை விரும்பாவிட்டாலும், அது அவனுக்குப் பின்னால் கிளர்ந்து எழும், ‘என்னை ஏற்றுக்கொள்’ என்று சொல்லும், பின்னர், அதுவே நெருப்பாக மாறி அவனை அழிக்கும், தன் பேராசைதான் தன்னை அழிக்கிறது என்பதை அவன் உணர்வதில்லை, வள்ளலே, மணிவண்ணா, உன்னுடைய திருவடிகளுக்கு நான் வரவேண்டும், அதற்கு அருள்புரிவாய், உன் அருளால் என்னை அடிமையாக ஏற்றுக்கொள்வாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com