நான்காம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

நீ நிறைந்திருக்கிறாய்
நான்காம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

பாடல் - 7

ஆயே, இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே, மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
நோயே, மூப்பு, இறப்பு, பிறப்பு, பிணியே என்று இவை
                                                                                                  ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.

பெருமானே, இந்த உலகத்தில் நிற்கின்றவையும் திரிகின்றவையும் எல்லாம் நீயே, வேறு எதுவும் இல்லாதபடி அனைத்திலும் நீ நிறைந்திருக்கிறாய், ஆகவே, நோய், முதுமை, இறப்பு, பிறப்பு, தீராத பிணி ஆகியவை ஒழியும்படி செய்து என்னை உன்னிடம் கூவி அழைத்துக்கொள், இந்தக் கொடிய உலகத்தை எனக்குக் காட்டாதே.

******

பாடல் - 8

காட்டி நீ கரந்து, உமிழும் நிலம், நீர், தீ, விசும்பு, கால்,
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி
                                                                                     முட்டைக்
கோட்டையினில் கழித்து எனை உன் கொழும்சோதி
                                                                                     உயரத்துக்
கூட்டு அரிய திருவடிகள் எஞ்ஞான்று கூட்டுதியே.

எம்பெருமானே, இந்த உலகை நீ படைத்தாய், பிரளயத்தின்போது அதை உண்டு மறைத்தாய், பின்னர் உமிழ்ந்தாய், அத்தகைய நிலத்துடன் நீர், தீ, வான், காற்று ஆகிய ஐம்பூதங்களையும் ஒன்றாக நீ அமைத்தாய், வானோர்கள் வாழ்கிற ஒப்பற்ற அண்டமாகிய இந்தக் கோட்டையிலிருந்து என்னை எப்போது நீக்குவாய்? உயர்ந்த சுடரோடு கூடிய பரமபதத்திலே என்னை எப்போது சேர்ப்பாய்? சேர்வதற்கு அரிய உன் திருவடிகளில் என்னை எப்போது சேர்த்துக்கொள்வாய்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com