நான்காம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 9, 10 

அன்பு கொண்ட
நான்காம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 9, 10 

பாடல் - 9

கூட்டுதி நின் குரை கழல்கள், இமையோடும் தொழாவகை செய்து
ஆட்டுதி நீ, அரவு அணையாய், அடியேனும் அஃது அறிவன்,
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டு அரிய திருவடிகள் கூட்டினை, நான் கண்டேனே.

பாம்புப் படுக்கையிலே யோகத்துயில் கொள்ளும் பெருமானே, உண்மையாக உன்மீது அன்பு கொண்ட பக்தர்களை, சத்தமிடும் கழல்கள் அணிந்த உன்னுடைய திருவடிகளில் கூட்டிக்கொள்கிறாய், அவ்வாறு அன்பு இல்லாதவர்கள் வானவர்களாகவே இருந்தாலும் சரி, அவர்கள் உன்னைத் தொழாதபடி செய்து உலக இன்பங்களில் மூழ்கவைத்துச் சோதிக்கிறாய், அவர்களை ஆட்டுவிக்கிறாய், இதை நான் அறிவேன், என்னுடைய மற்ற விருப்பங்கள் எல்லாம் போக வேண்டும், நான் உன்னுடைய திருவடியை மட்டுமே சுமந்து திரிய வேண்டும், அவ்வாறு, அடைய இயலாத உன் திருவடிகளில் நீ என்னைக் கூட்டிக்கொண்டாய், அதை நான் கண்டேன்.

******

பாடல் - 10

கண்டு, கேட்டு, உற்று, மோந்து, உண்டு, உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியார் திருமகளுமே நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன், அடைந்தேன் உன் திருவடியே.

பெருமானே, காண்பது, கேட்பது, தொடுவது, முகர்வது, உண்பது என ஐந்து கருவிகளால் கிடைத்த இன்பம், அறிய இயலாத, அளவில்லாத சிற்றின்பம் (கைவல்ய சுகம்) ஆகிய இரண்டையும் நான் விட்டுவிட்டேன், காரணம், ஒளி நிறைந்த தொடி என்கிற முன்கை வளையலை அணிந்த திருமகளும் நீயும் நிற்கிற திருக்காட்சியைக் கண்டேன், மற்ற சுகங்களை விட்டு உன் திருவடிகளை அடைந்தேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com