நான்காம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

காணுங்கள், வணங்குங்கள்

பாடல் - 5

இலிங்கத்திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமும்
                                                                ஆகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூர்
                                                                அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர், ஒன்றும் பொய்யில்லை,
                                                               போற்றுமினே.

இலிங்கபுராணத்தைக் காட்டிப் பேசுகிறவர்களே, சமணர்களே, பௌத்தர்களே, வலிந்து வாதிடுகிறவர்களே, உங்களுடைய தெய்வங்களாகவும் இருப்பவன் எம்பெருமான்தான்,செந்நெல் கதிர்கள் மிகுந்து விளைந்து கவரி வீசுகிற திருக்குருகூரிலே எழுந்தருளிப் பொலிகிற பிரான், அவனைக் காணுங்கள், வணங்குங்கள், போற்றுங்கள், நான் சொல்வது எதுவும் பொய்யில்லை.

******

பாடல் - 6

போற்றி மற்று ஓர் தெய்வம் பேணப் புறத்து இட்டு,
                                                                          உம்மை இன்னே
தேற்றிவைத்தது, எல்லீரும் வீடுபெற்றால் உலகு
                                                                          இல்லை என்றே,
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர்
                                                                         அதனுள்
ஆற்றவல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து
                                                                        அறிந்து ஓடுமினே.

நீங்கள் மற்ற தெய்வங்களை நம்பி வணங்குகிறீர்கள், அவ்வாறு உங்களைத் தனக்குப் புறத்தே வைத்திருப்பவன் எம்பெருமான்தான், அவன் அப்படி உங்களை வைத்திருப்பது ஏன் தெரியுமா? எல்லாரும் மோட்சம் பெற்றுவிட்டால், இவ்வுலகில் சாத்திரங்களுக்கு மரியாதை குறைந்துபோகும் என்பதால்தான். சேற்று நிலத்தில் செந்நெல்லோடு தாமரையும் ஓங்கி வளர்கிற திருக்குருகூரிலே எழுந்தருளியிருக்கிற ஆற்றல்மிக்க எம்பெருமானின் மாயம் இது, நீங்கள் இதனை
அறிந்துகொள்ளுங்கள், அவனது திருவடிகளைச் சேரும் வழியில் வாழுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com