ஆறாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

மரியாதை கெட்டது
ஆறாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பாடல் - 1

உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும்
                               வெற்றிலையும் எல்லாம்
கண்ணன், எம்பெருமான் என்று என்றே
                              கண்கள் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர், வளம் மிக்கவன்
                              ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகும் ஊர்
                              திருக்கோளூரே.

இளமானைப்போன்ற என் மகள், தான் உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை என அனைத்தும் கண்ணனே என்கிறாள், எம்பெருமான் பேரைச்சொல்லிக் கண்களில் நீர் மல்க நிற்கிறாள், இம்மண்ணிலே மிகப்பெரிய சிறப்பு, வளத்தை உடைய அப்பெருமானின் ஊரை விசாரித்தபடி நடக்கிறாள், எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோளூருக்கு அவள் நிச்சயமாகச் சென்றுசேர்வாள்.

***

பாடல் - 2

ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல்
                                                               அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறிச்
சேரும் நல்வளம்சேர் பழனத் திருக்கோளூர்க்கே?
போரும்கொல்? உரையீர், கொடியேன் கொடி,
                                                               பூவைகளே.

நாகணவாய்ப்பறவைகளே, கொடியவளான என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள், என்னுடைய மகள் எம்பெருமானின் புகழைச் சொல்லிச்சொல்லி, ஊரிலிருக்கும் எல்லாரும், நாட்டிலிருக்கும் எல்லாரும், உலகத்திலிருக்கும் எல்லாரும் அவனுடைய திருநாமங்களையும் அவன் அணிந்திருக்கும் திருமாலைகளின் புகழையும் பாடத்தொடங்கிவிட்டார்கள், இதனால், என் மகளின் மரியாதை கெட்டது, இனி அவள் நல்ல வளம் நிறைந்த வயல்களைக்கொண்ட திருக்கோளூர்க்குச் சென்றுவிடுவாளா? அல்லது, திரும்பிவந்துவிடுவாளா? சொல்லுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com