ஆறாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல்  3, 4

பழிச்சொல் பேசியே
ஆறாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல்  3, 4

பாடல் - 3

பூவை, பைங்கிளிகள், பந்து, தூதை, பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே
கோவை வாய் துடிப்ப மழைக்கண்ணொடு
                                                                    என்செய்யும்கொலோ?

என் மகள் முன்பு விளையாடுவதற்காகக் குயில், பைங்கிளிகள், பந்து, சிறிய மரப்பானை, பூக்கூடைகள் ஆகியவற்றை வைத்திருந்தாள், பின்னர், இவை அனைத்தையும் மறந்துவிட்டுத் திருமாலின் திருநாமங்களைமட்டுமே சொல்லத்தொடங்கினாள், அவள் குளிர்ச்சியான வயல்கள் நிறைந்த திருக்கோளூர்க்குப் புறப்பட்டுச் சென்றாளே, அங்கே சென்றுசேர்ந்திருப்பாளா? கோவைப்பழம்போன்ற வாய் துடிக்க, கண்களிலிருந்து மழையாக நீர் பொழிய அவள் அங்கே என்னசெய்கிறாளோ!

***

பாடல் - 4

கொல்லை என்பர்கொலோ? குணம் மிக்கனள்
                                                                 என்பர்கொலோ?
சில்லைவாய்ப் பெண்கள், அயல்சேரி உள்ளாரும்,
                                                                 எல்லே,
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல் இடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.

எம்பெருமான், செல்வம் மல்கும்படியாகக் கிடந்த திருக்கோலத்தில் அருள்செய்யும் ஊர், திருக்கோளூர். இளமான் போன்ற என் மகள், தன்னுடைய மெல்லிய இடை அசையும்படி அங்கே சென்றாள், இதைப்பற்றி மற்ற பெண்கள் என்ன பேசுவார்களோ, இவர்கள் பழிச்சொல் பேசியே பழக்கப்பட்டவர்களாயிற்றே, இன்னும் அயலூரைச் சேர்ந்தவர்கள் என்னவெல்லாம் பேசுவார்களோ, ‘இவள் எல்லை மீறியவள்’ என்பார்களோ, ‘இவள் குணம் மிக்கவள்’ என்பார்களோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com