ஆறாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

கண்களில் நீர்மல்க
ஆறாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

பாடல் - 5

மேவி நைந்து நைந்து விளையாடல் உறாள்
                                                                         என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக்கோளூரில்
பூ இயல் பொழிலும் தடமும் அவன் கோயிலும்
                                                                          கண்டு
ஆவி உள்குளிர எங்ஙனே உகக்கும்கொல் இன்றே?

என்னுடைய இளைய மகள் எம்பெருமானை மனத்தால் அடைந்துவிட்டாள், அதனால் மனமும் உடலும் நைந்துபோக, விளையாட்டில் ஆர்வமின்றி நிற்கிறாள், இனி அவள் தன்னுடைய திருமால் எழுந்தருளியிருக்கும் திருக்கோளூருக்குச் செல்வாளோ? அங்கே பூக்கள் நிறைந்த சோலைகளை, குளங்களை, அவனுடைய கோயிலைக் கண்டு, ஆவி உள்குளிர எப்படி மகிழ்வாளோ!

***

பாடல் - 6

இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான்
                                                               இனிப்போய்த்
தென்திசைத் திலதம் அனைய திருக்கோளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும்
                                                                கண்டு
நின்று நின்று நையும் நெடும்கண்கள் பனிமல்கவே.

இளமான்போன்ற என் மகள் இன்றைக்கு எனக்கு உதவாமல் என்னைவிட்டு அகன்றுசென்றுவிட்டாள், இனி அவள், தென்திசைக்குத் திலகமாகத் திகழ்கிற திருக்கோளூர்க்குச் செல்வாளோ? தன்னுடைய திருமாலின் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு நைந்து நிற்பாளோ? நீண்ட கண்களில் நீர்மல்க நின்று உருகுவாளோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com