ஆறாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

அன்போடு இருப்பவள்
ஆறாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

பாடல் - 9

காரியம் நல்லனகள் அவை காணில் என்
                                             கண்ணனுக்கு என்று
ஈரியாய் இருப்பாள், இதெல்லாம் கிடக்க
                                             இனிப் போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள், எம்மை ஒன்றும் நினைத்திலளே.

சிறந்த ஆபரணங்களை அணிந்த என் மகள், சிறந்த பொருட்கள் எவற்றைக்கண்டாலும், ‘இவையெல்லாம் என் கண்ணனுக்கே’ என்று எண்ணுகிறவள், அவன்மீது எப்போதும் அன்போடு இருப்பவள். இந்நிலையில், தெருவிலுள்ளோர் எல்லாரும் பலவிதமான பழிச்சொற்களைத் தூற்றி இரைக்கும்படி திருக்கோளூருக்கு நடந்து சென்றுவிட்டாள் அவள், எங்களைச் சிறிதும் நினைத்துப்பார்க்கவில்லை.

***

பாடல் - 10

நினைக்கிலேன் தெய்வங்காள், நெடும்கண்
                                                  இளமான் இனிப் போய்
அனைத்து உலகும் உடைய அரவிந்தலோசனனைத்
தினைத்தனையும் விடாள், அவன்சேர்
                                                 திருக்கோளூர்க்கே
மனைக்கு வான்பழியும் நினையாள் செல்ல
                                                 வைத்தனளே.

தெய்வங்களே, நீண்ட கண்களையுடைய இளமான் போன்ற என் மகளைப்பற்றி என்னால் நினைத்துப்பார்க்கவும் இயலவில்லை, அனைத்து உலகங்களையும் தனக்கே உரிமையாகக் கொண்ட தாமரைக்கண்ணன் எம்பெருமான், அப்பெருமானை இவள் தினையளவும் விடாமல் பற்றியிருக்கிறாள், அவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோளூர்க்குச் செல்கிறாள், அதனால் தன் குடும்பத்துக்கு வரக்கூடிய பெரிய பழியைப்பற்றியும் அவள் எண்ணிப்பார்க்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com