ஆறாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

வண்டுக்கூட்டங்களே
ஆறாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

பாடல் - 3

ஓடி வந்து என் குழல்மேல் ஒளி மாமலர் ஊதீரோ,
கூடிய வண்டு இனங்காள், குருநாடு உடை
                                                                                ஐவர்க்காய்
ஆடிய மா, நெடும்தேர்ப் படை நீறு எழச் செற்ற
                                                                                பிரான்
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள்
                                                                                கொண்டே.

சேர்ந்திருக்கும் வண்டுக்கூட்டங்களே, குருநாட்டை உடைய பாண்டவர்கள் ஐவருக்காகப் பாரதப்போரை நிகழ்த்தியவர், ஆடுகின்ற குதிரைகள், நீண்ட தேர்களைக்கொண்ட எதிரிகளின் படைகள் சாம்பலாகும்படி செய்து வென்ற பிரான், அவர் சூடிய குளிர்ச்சியான துளசியை உண்கிறவர்கள் நீங்கள், தூய்மையான தேன் நிறைந்த அந்த வாயோடு ஓடிவாருங்கள், என்னுடைய கூந்தல்மேல் ஒளிவீசும் சிறந்த மலர்களை, எம்பெருமானின் மணம் வீசும் உங்கள் வாயால் ஊதுங்கள்.

***

பாடல் - 4

தூ மது வாய்கள் கொண்டுவந்து, என்
                    முல்லைகள்மேல் தும்பிகாள்,
பூ மது உண்ணச்செல்லில் வினையேனைப்
                   பொய் செய்து அகன்ற
மா மது வார் தண் துழாய் முடி வானவர்கோனைக்
                   கண்டு
நாம் இதுவோ தக்கவாறு என்னவேண்டும்
                   கண்டீர் நுங்கட்கே.

முல்லைகளின்மீது மொய்க்கும் தும்பிகளே, தூய்மையான தேன் நிறைந்த உங்கள் வாய்களைக்கொண்டு, பூக்களில் தேன் உண்ணச் செல்வீர்கள் அல்லவா? அப்போது எனக்கு ஓர் உதவி செய்யுங்கள், தீவினை செய்தவளாகிய என்னிடம் பொய்யான சொற்களைச் சொல்லி/நடித்துவிட்டு அகன்றவர், சிறந்த தேன் சொரியும் குளிர்ந்த துளசியைத் திருமுடியில் அணிந்தவர், வானவர்களின் தலைவர், அப்பெருமானைக் காணுங்கள், ‘இப்படி ஒரு பெண்ணை நீர் வதைப்பது நுமக்குத் தகுதியானதுதானா?’ என்று கேட்டுவாருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com